Home Games நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 17

நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 17

by Dr.K.Subashini
0 comment

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு]

16. நாலு மூலைக்கல் விளையாட்டு

இருபாலரும் விளையாடும் விளையாட்டு இது. ஐந்து நபர்கள் மட்டுமே விளையாடமுடியும். முதலில் மணலில் கீழ்க்கண்டவாறு கட்டம் போட்டுக் கொள்கின்றனர்.

எலை

பிறகு பெரிய கற்களாக நான்கு கற்கள் எடுத்து அதனைக் கட்டத்தின் நடுவில் இருக்கும் வட்டத்தில் வைத்துக்கொள்கின்றனர். ஐந்து பேரில் ஒருவரை சாட்பூட் த்ரீ முறை மூலம் பட்டவராகத் தேர்ந்தெடுக்கின்றனர். நான்கு மூலைகளிலும் உள்ள வரையப்பட்ட வட்டமும், நடுவில் வரையப்பட்ட வட்டமும் ‘எலை’ எனப்படுகின்றது. நால்வரும் சுற்றியுள்ள நான்கு வட்டங்களில் நின்று கொள்கின்றனர். பட்டவர் நடுவில் உள்ள வட்டத்தைச் சுற்றிக் கொண்டே அதனுள் இருக்கும் நான்கு கற்களையும் மற்ற நால்வரையும் எடுக்கவிடாமல் செய்கிறார். அதையும் மீறி ஒருவர் நான்கு கற்களையும் தானே எடுத்து மற்றவர்களுக்குத் தருகின்றார். நான்கு கற்களும் நால்வருக்கும் வந்தபிறகு அதனைத் தங்கள் வட்டங்களில் வைத்துவிட்டு நால்வரில் இருவர் இருவராகக் கட்டத்திற்கு கட்டம் மாறுகின்றனர். அப்போது பட்டவர் கட்டத்திற்கு வெளியே கட்டத்தை முழுவதுமாகச் சுற்றுகிறார். இருவர் தங்கள் கைகளை நீட்டினால் இருகைகளும் தொடுமளவிற்கு இடைவெளி மட்டுமே இந்த வட்டங்களுக்கிடையில் இருக்கின்றது. ஆகவே இருவர் இருவராகக் கைகொடுத்து நேராகப் பத்துமுறையும் நீளவாக்கில் பத்துமுறையும். கட்டத்திற்கு உட்பக்கமாக குறுக்கில் பத்துமுறையுமாக முப்பதுமுறை மாறுகின்றனர். இவ்வாறு மாறும்போது ஆளில்லாமல் காலியாக இருக்கும் வட்டத்தில்; பட்டவர் நின்றுகொள்கிறார். இப்போது அந்த இடத்திற்குச் சொந்தக்காரர் பட்டவராகக் கட்டத்தைச் சுற்றுகிறார். முப்பதுமுறை மாறியபிறகு பட்டவரைப் பார்த்து யார் மூல (மூலை) என்று கேட்க அவர் ஒருவரைச் சுட்டி அவருக்கருகில் அவருக்கு முன்னால் அவரை ஒட்டியபடி நின்று கொள்கிறார். பின்னாலிருப்பவர் தன் கைகளை நீட்ட மற்ற மூவரும் அந்தக் கைகளை பிடித்துக்கொள்கின்றனர். பிறகு ‘பிரியலாமா’ என்று கேட்டவுடன் ‘பிரியலாம்’ என்று பட்டவர் கூறியதும் மூவரும் அவரவர் மூலையில் நின்றுகொள்கின்றனர். இந்த சமயத்திலும் பட்டவர் காலியாக இருக்கும் வட்டத்தில்போய் (மற்றவர்கள் நிற்பதற்கு முன்) நிற்கலாம்.

இறுதியில் ஒருவர் பட்டவர் கண்ணை மூடிக்கொள்ள மற்றவர்கள் அவர் கைநிறைய மண்ணைக் கொடுத்து அதனுள் ஒரு முடியையும் வைத்து அழைத்துக் செல்கின்றார்கள். அப்போது அவர்களிடையே உரையாடல் நடைபெறுகின்றது. அது

மற்றவர்கள் – எங்க போற?
பட்டவர் – காட்டுக்குப் போறே(ன்)
மற்றவர்கள் – எங்க போற?
குறிப்பிட்ட இடம் செல்கின்ற வரைக்கும் இதே உரையாடல் தொடர்கிறது. அந்த இடத்திற்குச் சென்று மண்ணையும் முடியையும் கீழே கொட்டிவிட்டுத் திரும்பி வரும்போது
மற்றவர்கள் – எங்க போற?
பட்டவர் – வீட்டுக்குப் போறேன்

என்று கூறிக்கொண்டே விளையாடிய இடம் வரை வந்து கண்ணைத் திறந்து விட்டுவிடுகின்றனர். பட்டவர் இப்போது மண்ணைக் கொட்டிய இடத்தை இதுவென்று காண்பிக்கிறார். காண்பித்தபின் விளையாட்டு மீண்டும் பட்டவரைத் தேர்ந்தெடுப்பதில் இருந்து தொடங்குகிறது. இல்லாவிட்டால் இரண்டாவது ஆட்டத்திலும் இவரே பட்டவராயிருக்கிறார். விளையாட்டு தொடர்கிறது.
சேகரித்த இடம் – கச்சைகட்டி

பிற
1. இவ்விளையாட்டிற்கு நாலு மூலத்தாச்சி, நாலு முலசவுக்கு, கரண்ட் பீஸ், ஓடு ஓடு ஒண்ணு, கல்லெடுக்கும் விளையாட்டு. கையிழுத்துவிடுதல், பிள்ள வச்சு விளையாடுவது என்று வேறு பெயர்களும் காணப்படுகின்றன.

2. கொடிக்குளம் என்கிற இடத்தில் விளையாட்டின் துவக்கம் சிறிது மாறுபட்டு உள்ளது. நடுவில் நாலு கற்களையும் வைத்து ஒருவர் சுற்ற மற்ற நால்வரும் அதனை எடுத்து மீண்டும் அதே இடத்தில் போடவேண்டும். இவ்வாறு பத்துமுறை செய்ய வேண்டும். ஒவ்வொருமுறையும் ‘ஒருமாசம், ரெண்டு மாசம் என்று பத்தாம் மாசம் வரைக் கூறுகின்றனர். ‘இதற்குப் பிறகுதான் விளையாட்டு ஆரம்பமாகிறது. இவ்வாறு கல்லை எடுக்கின்றபோது ஒருவரைப் பட்டவர் தொட்டுவிட்டால் தொடுபட்டவர் பட்டவராகிறார்.

3. தல்லாகுளம் என்கிற இடத்தில் பட்டவரைத் தேர்ந்தெடுப்பதற்கு ஓட்டப்பந்தயம் வைத்து ஐவரும் ஓடிவந்து வட்டங்களில் நின்று கொள்ள வட்;ட இடமில்லாதவர் பட்டவர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டார். வேறு விளையாட்டுகளுக்கு இம்முறை பயன்படுத்தப்படவில்லை.

4. நான்கு கற்களும் நான்கு குழந்தைகளாகவும், அக்கற்களைச் சுற்றுபவன் அதைப் பாதுகாப்பவனாகவும், அதை எடுப்பவர்கள் குழந்தைகளை பிடுங்குபவர்களாகவும் கொண்டு இதற்குப் பிள்ளவச்சு விளையாட்டு, நான்கு பிள்ளைகளையும் காப்பாற்றுவதே இந்த விளையாட்டு என்று புளியங்குளம் என்கிற இடத்தில் தகவலாளி கூறினார்.

5. வட்டம் மாறுகின்ற சுற்று எண்ணிக்கையில் மாறுபாடு காணப்படுகிறது. மூன்று சுற்றுக்கள் (3×3=9) 12 சுற்றுக்கள் (3×12=36) ஐந்து சுற்றுக்கள் (5×3=15) என்று ஒரு வட்டத்திலிருந்து அடுத்த வட்டத்திற்கு மாறும்போது ஓடுஓடு ஒண்ணு, ஓடுஓடு ரெண்டு என்று எண்ணிக்கொண்டே ஓடுகின்றனர். (நல்லூர்)

6. சின்ன உடைப்பு என்கிற ஊரில் வட்டத்திற்கு வட்டம் மாறியவாறு சுற்றி முடித்தவுடன் ஐந்து பேருமாகத் தங்கள் பாவடையைப் பிடித்துக் கொண்டு பாவடை பாவடை என்று கூறிக்கொண்டே சுற்றுகின்றனர். மூன்று முறை சுற்றியபின் (கட்டம் முழுவதையும்) அவரவர் இடத்தில் நின்று கொள்கின்றனர். பிறகு பட்டவரைப் பார்த்து ‘யார்முகம்’ என்று கேட்டவுடன் அவர் ஒருவரைக் கூறியவுடன் அந்த இடத்தில் அனைவரும் ஒன்று சேர்கின்றனர். பிறகு ‘பிரியலாமா’ என்று கேட்டு பிரியலாம் என்றவுடன் பிரிகின்றனர். இவ்விளையாட்டில் ஒரு பகுதிமட்டும் இங்கு தனி விளையாட்டாக விளையாடப்படுகின்றது. அதற்கு கல்லைத் தூக்கிப் போட்டு விளையாடுதல் என்று பெயர். அதாவது நான்கு வட்டம் போட்டு நால்வர் அதில் நின்று கொண்டு நால்வரும் ஒருவர் மாற்றி ஒருவர் ஒரு கல்லை மட்டும் தூக்கிப் போட்டுக்கொண்டேயிருக்கின்றனர். நால்வரில் ஒருவர் கல்லைப் பிடிக்காமல் கீழேவிட்டுவிட்டால் நால்வரும் அவரவர் இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு மாறுகின்றனர். அவ்வாறு மாறுகின்றபோது ஒருவரையொருவர் தொட்டுவிட்டால் தொடுபட்டவர் வெளியேறுகிறார். மூன்று பேராக விளையாடுகின்றனர். இப்படி ஒவ்வொருவராகக் குறைந்து கடைசியில் மிஞ்சும் ஒருவரே வென்றவராகிறார். அத்துடன் விளையாட்டு முடிவடைகிறது.

 

[பகுதி 18 க்குச் செல்க]

You may also like

Leave a Comment