Home Games நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 16

நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 16

by Dr.K.Subashini
0 comment

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு]

15. எலியும் பூனையும் விளையாட்டு

இருபாலர்களும் விளையாடும் விளையாட்டு இது. விளையாடுகின்ற நபர்களின் எண்ணிக்கை இத்தனை என்பதில்லை. எத்தனைபேர் வேண்டுமானாலும் விளையாடலாம். முதலில் பூனையாகவும், எலியாகவும் இருப்பவர்கள் யார் என்று முடிவுசெய்து கொள்கின்றனர். அவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் வட்டமாக ஒருவர் கையை மற்றவர் பிடித்துக்கொண்டு நிற்கின்றனர். எலியாக இருப்பவர் வட்டத்திற்குள்ளும், பூனையாக இருப்பவர் வட்டத்திற்கு வெளியேயும் நின்று கொள்கின்றனர். பூனையாக இருப்பவருக்கும், வட்டமாக நிற்கும் நபர்களுக்குமிடையேதான் உரையாடல் நடக்கிறது. எலியாக இருப்பவர் சைகைகள் மட்டுமே செய்கிறார். பூனையாக இருப்பவர் வட்டத்தைச் சுற்றிக்கொண்டே கேள்வி கேட்கிறார். வட்டமாக நிற்பவர்கள் சுற்றி நகர்ந்து கொண்டே பதில் கூறுகின்றனர். இவர்களுடைய பதில் எலியாக இருப்பவரின் செய்கையைப் பொறுத்து அதாவது எலியாக இருப்பவர் என்ன செய்கிறாரோ அதைப் பார்த்தபிறகுதான் பதில் கூறப்படுகிறது. அவ்வுரையாடல் கீழே தரப்படுகிறது

பூனை – எலி என்ன செய்யுது?
மற்றவர்கள் – தூங்குது
பூனை – எலிஎன்ன செய்யுது?
மற்றவர்கள் – இப்பதான் எந்திரிக்குது
பூனை – எலி என்ன செய்யுது?
மற்றவர்கள் – குளிக்குது
பூனை – எலி என்ன செய்யுது?
மற்றவர்கள் – தலை சீவுது
பூனை – எலி என்ன செய்யுது?
மற்றவர்கள் – பவுடர் அடிச்சு பொட்டு வைக்குது
பூனை – எலி என்ன செய்யுது?
மற்றவர்கள் – வீட்டுப்பாடம் எழுதுது
பூனை – எலி என்ன செய்யுது?
மற்றவர்கள் – சாப்பிடுது
பூனை – எலி என்ன செய்யுது?
மற்றவர்கள் – பைய எடுத்து மாட்டுது
பூனை – எலி என்ன செய்யுது?
மற்றவர்கள் – செருப்பு போடுது

எலியாக இருப்பவர் செருப்பு போட்டு முடிந்தவுடன் சுற்றியிருக்கும் அனைவருக்கும் காசு கொடுக்கின்றார். இவர் காசுகொடுப்பதுதான் பூனைக்கு எலி வெளியே வரப்போகிறது என்பதற்கான அறிவிப்பு ஆகும். இதைப்பார்த்தவுடன் பூனையாக இருப்பவர் எலியைப் பிடிக்கத் தயாராகிவிடுகிறார். அனைவருக்கும் காசு குடுத்து முடித்ததும் எலியாக இருப்பவர் வெளியே ஓடுகிறார். ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றபிறகு மீண்டும் பூனையின் கையில் அகப்படாமல் திரும்பி வட்டத்திற்குள் நுழைந்துவிட எலியாக இருப்பவரே வென்றவராகக் கூறப்பட்டார். பிறகு அவர்களிருவரும் மற்றவர்களுடன் சேர்ந்துகொள்ள வேறு இருவர் எலியாகவும், பூனையாகவும் மாற விளையாட்டு தொடர்கிறது. வட்டத்தை விட்டு எலியும். பூனையும் ஓடுவதற்கான தூரம் முதலிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. அந்த தூரத்திற்கு அப்பால் எலியாக இருப்பவர் ஓடினால் விளையாட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறார்.
சேகரித்த இடம் : சின்ன உடைப்பு

பிற

1. சில இடங்களில் மற்றவர்கள் சொல்கின்ற பதிலை வைத்துத்தான் எலியாக இருப்பவர் செய்கைகளைச் செய்கிறார்

2. மற்ற இடங்களில் எலியாக இருப்பவர் செருப்பு போடுவதுதான் அது வெளியில் வருகிறது என்பதற்கான அறிவிப்பு. ஆனால் இங்கு காசு கொடுத்தல் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.

[பகுதி 17 க்குச் செல்க]

You may also like

Leave a Comment