Home Games நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 1

நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 1

by Dr.K.Subashini
0 comment

விளையாட்டுக்களில் சில பொதுவான கூறுகள்

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு]

 

விளையாட்டுக்கள் ஒரே குழுவாக இணைந்து விளையாடப்பட்டாலும், இரு குழுக்களாகப் பிரிந்து விளையாடப்பட்டாலும் அவை சில பொதுவான கூறுகளைக் கொண்டுள்ளன.

1. பட்டவரைத் தேர்ந்தெடுத்தல்:
ஒரே குழுவாக இணைந்து விளையாடும் விளையாட்டுக்கள் சிலவற்றில் இக்கூறு காணப்படுகிறது. சான்றாக, தொட்டு விளையாட்டு, நொண்டி, கண்ணாமூச்சி போன்றவற்றில் ஒருவர் விரட்ட மற்றவர்கள் ஓட வேண்டும். விரட்டுபவரே பட்டவர்/பட்டை என்று அழைக்கப்படுகிறார். ஆகவே சில விதிமுறைகளின்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

அ. சாட் பூட் த்ரி: சிறுவர் வட்டமாக நின்றுகொண்டு சாட் பூட் த்ரி என்று சொல்லிக்கொண்டே தங்கள் இருகைகளையும் சேர்ப்பர். மேற்புறமுள்ள கையினை உள்ளங்கைப் பக்கம் திருப்பியோ அல்லது புறங்கைப் பக்கம் திருப்பியோ வைக்கலாம். இப்படியே எல்லோரும் வைக்க எப்பக்கத்தினைக் குறைவான எண்ணிக்கையில் வைத்துள்ளனரோ அவரெல்லாம் பழமாகியவராகக் கருதப்படுவார். மீதமுள்ளோர் முன்போலச் செயல்பட இறுதியில் இருவர் மட்டுமே இருப்பர். இருவர் சாட் பூட் த்ரி போடுதல் முடியாதாகையால் பழமாகியவரில் ஒருவர் துணைக்கையாக வருவார். இறுதியில் எஞ்சியவர் ஒருவர் பட்டவராவார்.

ஆ. கையினை இழுக்கும் முறை: ஒருவர் கையினைக் கட்;டிக்கொள்ள மற்றவரெல்லாம் அவர் கையினைச் சிறிது சிறிதாக இழுத்துவிட வேண்டும். இறுதியில் யார் இழுக்கும் போது கைகளிரண்டும் தனியாகப்பிரிந்து வந்துவிடுகின்றனவோ அவர் பட்டவராவார்.

இ. பாடல் முறை: விளையாட்டில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவரையும் ஒருவர் பாடல் சொல்லித் தொட்டு வருவார். பாடலின் இறுதிச்சொல் முடியும் நபர் முதலில் பழமாவார். இப்படியே எல்லோரும் பழமாக எஞ்சியவர் பட்டவராவார்.

2.கட்சி ஃ குழு பிரித்தல்:

குழு விளையாட்டாக இருந்தால் கட்சி பிரித்தாடும் இயல்பு காணப்படுகிறது. இதற்கு உத்தி பிரிக்கும்/பிடிக்கும் முறை என்றும் பெயர் வழங்கப்படுகிறது.

விளையாட்டில் கலந்து கொள்பவர்களில் திறமை மிகுந்த இருவர் தலைவராக இருப்பர். இவர்கள் ‘பெரிய உத்தி’ எனப்படுவர். மற்றவரெல்லாம் இரண்டிரண்டு பேராகச் சேர்ந்துகொண்டு மறைவான இடத்திற்குச் சென்று தங்களுக்கு ஒரு புனைப்பெயர் வைத்துக்கொண்டு வரவேண்டும். இவர்கள் ‘சிறிய உத்தி’ எனப்படுவர். இதற்கு ‘உத்தி பிடித்தல்’ என்று பெயர். சான்றாக ஆப்பிள் வேணுமா? திராட்சை வேணுமா? என்று கேட்க பெரிய உத்தியில் ஒருவர் தனக்குப் பிடித்த பெயரைக் கேட்பார். அப்பெயருக்குரியவர் அவரது குழுவிற்குச் சென்றுவிடுவார். இப்படியே அனைவரும் உத்தி பிடித்து வர இறுதியில் இரு குழுக்களாகப் பிரிவர்.

எண் முறை: விளையாட்டில் கலந்துகொள்ளும் அனைவரையும் வரிசையாக நிற்கச் செய்து ஒன்றுஇ இரண்டு ஆகிய இரு எண்களையும் மாறி மாறிச் சொல்லச் சொல்வர். “ஒன்று” என்கிற எண்ணுடையவர்களெல்லாம் ஒரு குழுவாகவும் “இரண்டு” என்கிற எண்ணுடையவர்கள் மற்றொரு குழுவாகவும் பிரிந்து கொள்வர்.

 

3.முதலில் விளையாடும் முறை:

ஒரு விளையாட்டைத் தொடங்குவதற்கு முன் யார் அல்லது எக்கட்சி / குழு முதலில் விளையாட வேண்டும் என்பதைக் கண்டறிய சில முறைகள் பின்பற்றப்படுகின்றன.

அ) சில நேரங்களில் நாங்கள் முதலில் ஆடுவோம் என்று முதலில் கூறிய குழுவினரே விளையாடுவர்.
ஆ) சில விளையாட்டுக்களில் எச்சில் ஓட்டு முறை பயன்படுத்தப்படுகிறது.
ஒரு சிறு ஓட்டினை எடுத்து அதன் பக்கத்தில் எச்சில் அல்லது கரியினைத் தடவுவர். இரண்டு கட்சியினரும் தங்களுக்கு விருப்பமான பக்கத்தினைக் (எச்சில் உள்ள பக்கம் – இல்லாத பக்கம்; கருப்பு – சிவப்புப் பக்கம்) கேட்கின்றனர். ஓட்டினைத் தூக்கி வானத்தில் எறிவர். அது தரையில் விழுந்தவுடன் மேற்புறமிருக்கும் பக்கத்தைக் கேட்டவர் முதலில் ஆடுவதற்கான உரிமை உடையவர். இதுவே இன்றைய “டாஸ் வெல்லுதல்” முறையாகும்.

 

4.இடையில் நிறுத்துதல்:

தவிர்க்க முடியாத காரணத்தினால் விளையாட்டைத் தொடர இயலாத நிலை ஏற்படும் போது “இடையில் நிறுத்தல்” நடைபெறுகிறது. ஆடை அவிழ்வது, கூந்தல் கலைவது போன்ற நேரங்களில் “தூ, தூச்சி, துவாச்சி” என்று இதில் ஏதாவது ஒன்றைக் கூறி விளையாட்டை நிறுத்துகின்றனர்.

 

5. வெற்றியும் தோல்வியும்:

விளையாட்டுக்களில் வெற்றி எண்ணைக் குறிப்பதற்காக மணற்குவியல் வைத்தல், கற்களைச் சேகரித்தல் போன்ற வழக்கங்கள் காணப்படுகின்றன. இப்பொழுது ஒரு கேம்/ ஒரு பாயிண்ட் என்று எண்ணிக்கை கணக்கில் கொள்ளும் பழக்கம் காணப்படுகிறது.
தோற்றவருக்குத் தண்டனை என்பது விளையாட்டுக்களில் முக்கியமான ஒன்று. இது இரண்டு வகைகளில் காணப்படுகிறது.

1. தோற்றவர் தண்டனையாகத் தன் உடலை வருத்த வேண்டியிருக்கிறது (வென்றவரைச்
சுமத்தல்)
2. தோற்றவர் தன் ஆடு கருவியினை இழத்தல்

6. விளையாட்டு முடிவு:

1. இயல்பாக முடிதல்
2. முரண்பாட்டுடன் முடிதல்
இயல்பாக விளையாட்டு முடிவடைதல் என்பது நேரத்தைப் பொறுத்ததாகும். அதிக நேரம் விளையாடிய களைப்புஇ விளையாட்டு நபர்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று விரும்புதல், விளையாட்டின் முக்கிய நபர் வீட்டிற்குச் செல்லுதல் போன்றவற்றைப் பொறுத்தும் விளையாட்டு முடிவடைகிறது. அப்பொழுது பின்வரும் பாடலைப் பாடுகின்றனர்.
“அவரவர வீட்டுக்கு
அவரக்காயும் சோத்துக்கு
புள்ள பெத்த வீட்டுக்கு
புளியங்காயும் சோத்துக்கு”.
சில நேரங்களில் விளையாட்டு நபர்களிடையே ஒற்றுமையின்மை என்கிற நிலை ஏற்படும்பொழுது நடைபெறும் சண்டையினால் விளையாட்டு பாதியில் முடிவடைகிறது. அப்பொழுது பின்வரும் பாடல் பாடப்படுகிறது.
“என்னாட்டைக்கு சருகுணி
என்னா புள்ள பெத்த
ஆம்பள புள்ள பெத்த
வச்சிருக்க முடியாம
பிச்சி பிச்சி திண்ட”

விளையாட்டின்போது சண்டை ஏற்பட்டால் அச்சண்டை சமரசம் செய்துகொள்ள முடியாமல் போகும் நிலையில் விளையாட்டு முரண்பாட்டுடன் முடிவடையும்.
இவையே விளையாட்டுக்களில் காணப்படும் பொதுவான கூறுகளாம்.

[பகுதி 2 க்குச் செல்க]

 

You may also like

Leave a Comment