Home History திருவண்ணாமலை திருக்கோயில்

திருவண்ணாமலை திருக்கோயில்

by Dr.K.Subashini
0 comment

படங்களும் பதிவும்: முனைவர்.க.சுபாஷிணி

படங்களும் தகவல்களும் பதிவு செய்யப்பட்ட நாள்: 8.3.2011

திருவண்ணாமலை திருக்கோயில்

திருவண்ணாமலை நகரின் சிறப்புக்கு சிறப்பு சேர்ப்பது அண்ணாமலையார் திருக்கோயில். இப்பழமைமிக்க ஆலயம் மிகத் தொன்மை வாய்ந்ததும் தமிழகத்தின் மிகப்பெரிய ஆலயங்களில் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. இது ஒரு சிவத்தலம்.

7ம் நூற்றாண்டில் இக்கோயில் சிறிய அளவில் செங்கற்கசுதை மாடமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

 

அண்ணாமலையார் கோயிலில் தஞ்சைச் சோழ மன்னர்கள், ஒய்சள மன்னர்கள், விஜய நகர மன்னர்கள் ஆகியோரின் திருப்பணிகள் மிகுதியாக உள்ளன.

 

விஜயாலயன் வழிவந்த சோழ மன்னர்கள் இக்கோயிலின் கருங்கல் திருப்பணியைத் தொடங்கி வைத்தனர். இக்கோயிலிலுள்ள 9 கோபுரங்களில் கிளி கோபுரமே மிகத் தொன்மையானது. இக்கோபுரம் கி.பி.1063ல் வீர ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டதாகக் கருதப்படுகின்றது.

 

கி.பி. 14ம். நூற்றாண்டில் ஒய்சளர்களுடைய துணைத் தலைநகராகத் திருவண்ணாமலை விளங்கியது. அண்ணாமலையார் கோவிலிள்ள வல்லாள மகாராஜா கோபுரம் மூன்றாம் வல்லாள் மகாராஜாவால் (1291-1342) கட்டப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. இக்கோவிலின் நந்தி மண்டபம் வல்லாள மன்னரின் திருப்பணி என்பர்.

 

ஒய்சள மன்னர்களுக்குப் பிறகு விஜய நகரப் பேரரசர்கள் காலத்தில் அண்ணாமலையார் கோவிலின் கட்டடக்கலை உச்ச நிலையை அடைந்தது. கிருஷ்ண தேவராயர் (1509 – 1529) தாம் பல போர்களில் பெற்ற வெற்றியின் நினைவாக அண்ணாமலையார் கோவிலின்  கிழக்குக் கோபுரத்தைக் கி.பி. 1516இல் கட்ட ஆரம்பித்தார். இக்கோபுரம் தஞ்சையில் நாயக்கர் ஆட்சியைத் தோற்றுவித்த செவ்வப்பர் என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது. இக்கோபுரம் இராய கோபுரம் எனப்படுகிறது. அண்ணாமலையார் கோவிலிலுள்ள் இராய கோபுரம் தமிழ்நாட்டிலுள்ள கோபுரங்களிலேயே மிக உயர்ந்ததாகும். இதன் உயரம் 66 மீட்டர் (217 அடி) ஆகும்.

 

சிவகங்கை குளமும் ஆயிரங்கால் மண்டபமும் கிருஷ்ண தேவராயர் காலத்தில் உருவானவையாகும். விஜநகர கால கட்டடக் கலைக்கும் சிற்பக் கலைக்கும் ஒரு எடுத்துக் காட்டாக ஆயிரங்கால் மண்டபம் விளங்குகிறது.

 

இராய கோபுரத்தின் மேல் முகட்டில் அழகிய ஓவியங்கள் உள்ளன. இவற்றுள் ஒன்று  யானையை வேட்டையாடி அடக்கி வருவதுபோல் உள்ள ஓவியமாகும். இந்த ஓவியங்கள் விஜய நகர அரசு கால ஓவியக் கலைக்குச் சிறந்த எடுத்துக் காட்டுகளாகும்.

 

நாட்டுக் கோட்டை நகரத்தார்கள் சீரிய திருப்பணிகளை மேற்கொண்டு அண்ணாமலையார் கோவிலில் குடமுழுக்கு விழாக்கள் நடத்தியுள்ளனர். இக்கோயிலின் சிறப்புமிக்க குடமுழுக்கு விழா 1976ஆம் வருடம் (4-4-1976) நடைபெற்றது.

 

அண்ணாமலையார் கோவிலின் கருவறைத் தெய்வம் அருணாசலேஸ்வரர் என்ற சிவபெருமான் ஆவார். இறைவன் கருவறையில் லிங்க வடிவில் காட்சி தருகிறார். அம்மன் உண்ணாமலை எனப்படுகின்றார். அம்மன் கருவறை முழுதும் சென்ற நூற்றாண்டில் நகரத்தார்களால் புதுப்பிக்கப்பெற்றது. அம்மன் சனனதிக்கு வெளியிலுள்ள மண்டபத்தில் அஷ்ட லட்சுமிகள் உள்ள அஷ்டலட்சுமி மண்டம் உள்ளது. விநாயகர் சன்னதியும் கம்பத்து இளையனார் (முருகன்) சன்னதியும் இக்கோவிலிலுள்ள இதர முக்கிய சன்னதிகளாகும்.

நன்றி: தமிழ் நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும் – V.கந்தசாமி

படத்தொகுப்பு

கோபுரத்தின் சுவர் வாசலில் அமைக்கப்பட்டிருக்கும் 3ம் வல்லாள மகாராஜாவின் சிலை

சிவகங்கை தீர்த்தக்குளம்

ஆயிரங்கால் மண்டபம்

ஆயிரங்கால் மண்டபத்தின் முன் அமைக்கப்பட்டுள்ள யானை சிற்பங்கள்

3ம் வள்ளால மகாராஜாவால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் நந்தி

 

சிவபக்தர்களுக்கு ஆசி வழங்கும் யானை (ருக்கு இதன் பெயர்)

மின்தமிழ் நண்பர் நிருபர் ப்ரகாஷ், அட்வகேட் ஷங்கர்.

வாசல் சுவரில் வடிக்கப்பட்டிருக்கும் நுணுக்கமான சிற்பங்கள்

You may also like

Leave a Comment