Home History சமணம்

சமணம்

by Dr.K.Subashini
0 comment

 

சமண சமயம்

இரா.பானுகுமார், சென்னை

http://banukumar_r.blogspot.com

 

இந்திய சமயங்களை இரண்டு பெரும் பிரிவுகளில் அடக்கலாம். ஒன்று பிராமண சமயங்கள், மற்றொன்று
சிரமண சமயங்கள். இதில், ஜைனமும், பெளத்தமும் சிரமண சமயப் பிரிவுகளை சேர்ந்தன. பொதுவாக
இந்திய சமயங்கள் புறத்தே ஒன்றுபோல் காணப்பட்டாலும் அவைகள் அகத்தே தங்களுக்குள்
முரண்பட்டேயிருந்தன. அவ்வாறே, ஜைனமும், பெளத்தமும் புறத்தே ஒன்றுபோல் காணப்பட்டாலும்,
அகத்தே இரண்டும் வேறுப்பட்டேயிருந்தன. தற்போதைய சூழ்நிலையுல் சமணம், பெளத்தம் இரண்டும்
அருகிவிட்ட நிலையில் புறவயமான சிற்பங்களுக்குள் வேறுபாடு தெரிந்துக் கொள்வது இன்றியமையாதது.
தற்காலத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்த கட்டுரை பயன்படும் என்ற நோக்கிலும் எழுதப்படுகிறது.

 

சமண சிற்ப விளக்கம்

சமண சிற்ப அம்சங்கள்

பல சொற்கள் உணர்த்தாததை ஒரு படம் உணர்த்தும் என்பார்கள். சிற்பங்களும் அவ்வாறே. சமயச் சிற்பங்களும்,
சித்திரங்களும் அந்தந்த சமயங்களின் பிரதிபலிப்பு என்றால் அதுமிகையாகாது.

 

இந்திய சமய வரலாறும் உணர்த்துவதும் அதுவேயாம். இந்திய வரலாற்றை ஆராயும்போது உருவ வழிபாடு
என்பது சிரமண மதங்களிலிருந்தே தொடங்குகிறது. தற்போதைய சிற்பங்களின் மூலம் பாத வழிபாடேயாகும்.
தீர்த்தங்கரர்கள் ஆகட்டும் புத்தர்கள் ஆகட்டும், தங்கள் கொள்கைகளை பரப்ப இந்திய நிலப்பரப்பு முழுதும்
நடந்தே சென்றார்கள். அவற்றின் குறியீடே இந்த பாத வழிபாடாகும். பின்னர் அவ்வழிபாடு, படிப்படியாக
உருவ வழிபாடாக மாறத் தொடங்கியது. 
 


பத்ரபாகு முனிவரின் பாதம் (கி.பி.3ஆம் நூற்றாண்டு)

 

 

அறப்புணைவோர் அல்லது தீர்த்தங்கரர்

 

சமணத்தில், முதன் முதல் பாத வழிபாடே நடைமுறையிருந்தது. பின்னர் அறப்புணைவோர் என்று அழைக்கப்படும்.

தீர்த்தங்கரர்களின் சிற்பங்களை அமைக்கத் தொடங்கினர். தீர்த்தங்கரர் நம்மை போல் மனிதர்களாகப் பிறந்து,
தங்கள் விடாமுயற்சியின் மூலம் பற்றுக்கோடுகளை களைந்து சிவகதியடைந்து இறைவர்களாக திகழ்ந்தவர்கள்.
ஆதலால், சமண சிற்பங்களை அமைக்கும்போது மனித மாதிரியாகவே அமைத்தார்கள். இந்த வகையில் மற்ற சமய இறைவர் சிற்பங்களிலிருந்து சமண சிற்பங்கள் வேறுபடுவதைக் காணலாம். (சிவனார், விஷ்ணு ஆகியோருக்கு நான்கு கைகள் இருப்பதுபோல சிற்பங்களை அமைப்பதை ஒப்புநோக்குக)

 
பின்னர், அறப்புணைவோரின் காவலர்களான யட்சன், யட்சி முதலியானோர் சிற்பங்களையும் சிற்பங்களாக
வடிக்கத் தொடங்கினர். அறப்புணைவோர் சிற்பங்கள் இரண்டு விதமாக நிலைகளில் அமைப்பார்கள். ஒன்று
நின்றக் கோலத்திலும் (கயோத்சர்கம்), மற்றொன்று அமர்ந்தக் கோலத்திலும் (பத்மாசனம்) இருக்கும்.

 

 

பார்ஸவநாதர் – பத்மாவதி

 

 

பத்மாசனமும் அர்த பத்மாசனமும்

 

தென்னாட்டில் அமைக்கப்படும் அறப்புணைவோர் சிற்பங்களில் பெரும்பாலும் அர்த பத்மாசனத்தில்
காட்டப்பட்டிருக்கும். அர்த பத்மாசனம் என்றால் பாதி பத்மாசனம். வடநாட்டில் பெருவாரியான இடங்களில்
பத்மாசன (யோகாசனம்) நிலையில் காட்டப்பட்டிருக்கும். தென்னாட்டில் சமண சிற்பம் ஆடை ஏதும்
இல்லாமல் காட்டப்பட்டிருக்கும். (உற்றாற்கு உடம்பும் மிகை எனும்போது ஆடை எதற்கு! அணியாத அழகன்
இவனென்ப!!)

 

சமணங்கால் அல்லது சப்பளாங்கால்

 

சப்பளாங்கால் என்ற சொல்லை நாம் கேட்டிருப்போம். கிராமங்களில் இன்றும் பயன்படுத்தும் சொல்வழக்கிது.
தரையில் அமர்ந்திருக்கும் கோலத்திற்கு சப்பளாங்கால் என்கிறோம். அது சமணங்கால் என்பதின் திரிபேயாகும்.
சமணர்கள் அமர்ந்து தியானம் செய்வதை பார்த்த மக்கள் அவ்வமர்ந்த நிலைக்கு சமண+கால்=சமணங்கால்
என்று அழைக்கலானார்கள். இந்த சொல் பரவலாகத் தமிழகத்தில் புழக்கத்தில் இருந்திருக்கலாம்.
தமிழர்களிடம் சமணர் தாக்கத்தை இது காட்டுவனவாக திகழ்கிறது இச்சொல்.

 

சிற்ப குறியீடுகள்

 

அக்காலத்தில் மக்கள் தங்கள் தேவைகளுக்கு மன்னனை (தலைவன்) நோக்கி இருந்ததுபோல, அரசர்களாகவும்,
சக்கரவர்த்திகளாக திகழ்ந்த அறப்புணைவோர் சிற்பங்களை அமைக்கும்போது அரசனின் குறியீடுகளான, சாமரம்,
குடை, சிம்மாசனம், சிம்மாசனத்தில் சாய்ந்துக் கொள்ள பயன்படும் திண்டு ஆகியவற்றை அமைத்திருக்கிறார்கள்.
அக்குறியீடுகள் அறப்புணைவோர்களின் வாழ்க்கை வரலாற்றை பிரதிப்பலிப்பதாக கொள்ளலாம்.

 

எண்வகை சிறப்புகள் 

 

அறப்புணைவோர் (தீர்த்தங்கரர்) வாழ்க்கையில் முக்கிய ஐந்து சம்பவங்களை ”பஞ்ச கலியாணங்கள்” என்று
பெயரிட்டு அழைப்பார்கள். அவை முறையே,

1.கர்ப்பாவதரண கல்யாணம்,
2.ஜன்மபிஷேக கல்யாணம்,
3.தீட்சாக் கல்யாணம்,
4.கேவலாற்பத்தி கல்யாணம்
5.பரிநிர்வாணக் கல்யாணம்

 

என்பன. இவற்றில் கேவலாற்பத்தி கலியாணம் என்பது அறப்புணைவோர்களுக்கு கேவல ஞானம்
(வாலறிவு – தூய அறிவு) ஏற்படும்போது கொண்டாடப்படுகிறது. அவ்வமயம், அமரர் உலக அரசனான
தேவேந்திரன் அறப்புணைவோர் அடிதாழ்ந்து ”சமவசரணம்” என்னும் கோயிலை(கோட்டம்/திருமணிக்
கோயில்) அமைப்பான்.

 

சமவசரண படம்

 

(இச்சமவசரணத்தை நினைவிற் கொள்ளும் வகையில் மானிடர்கள் தீர்த்தங்கரர்களின் கோயில்களை அமைத்து
வழிபாடு செய்கிறார்கள்)
 

அறப்புணைவோர் அச்சமவசரணத்தில் எழுந்தருளும்போது பகவானிடத்து எண்வகைச் சிறப்புகள் தோன்றும்.
அவைகள் பின்வருமாறு:

1. அசோக மரம் அல்லது பிண்டி மரம்
2. தேவர் மலர்ப் பொழிவு அல்லது புஷ்பவிருஷ்டி
3. திவ்யத்தொனி
4. சாமரம் வீசுவோர்
5. சிம்மாசனம் அல்லது அரியாசனம்
6. தேவ துந்துபி ஒலி
7. ஒளி மண்டலம்
8. முக்குடை

 

சமண சிற்ப விளக்கப் படம்

 

 

இந்த எண்வகைச் சிறப்பை கீழே வரும் பாடல் அழகாகக் கூறுகிறது.

 

“சுடர்மண் டலஞ்சுர துந்துபி தெய்வத் துவனிசிங்கப்
பிடர்மண் டலவணை பிண்டிவெண் சாமரை பெய்மலரி
னடர்மண் டலமழை யம்பொற் குடைமும்மை யாமடியோ
மிடர்மண் டலம்கெடுப் பார்க்கிமை யார்செயு மென்சிறப்பே”

(இதில் திவ்யதொனியும், தேவ துந்துபியின் ஒலி ஆகியவைச் சிற்பங்களில் காட்டமுடியாது)

 

1.அசோக மரம் அல்லது பிண்டி மரம்

இதில் இரண்டு தீர்த்தங்கரர்கள் தவிர ஏனையோர் அசோக மரத்தின் கீழே ஞானம் பெற்றதால் அதன்
குறியீடாக அசோகமரம் சிற்பங்களில் காட்டப்படும். (மற்ற இருவருக்கு அரசமரம் காட்டப்படும். ஆனால்
சிற்பங்களில் அவ்வித்தியாசம் காட்டமுடியாது).

 

சிலப்பதிகாரத்தில், மதுரைக் காண்டம், காடுகாண் காதையில்,

“திங்கள்மூன்று அடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதைதாழ் பிண்டிக் கொழுநிழல் இருந்த
ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம்”

என்று இளங்கோவடிகள் வாழ்த்தில், முக்குடையும், பிண்டியும் குறித்திருப்பதைக் காணலாம்.

 

2.தேவர் மலர்ப் பொழிவு

பகவான் வாலறிவு பெற்று, சமவசரணத்தில் எழுந்தருளும் போது தேவர்கள் மலர்மாரிப் பொழிவார்கள்.
இதனை குறிக்க புஷபவிருஷ்டி என்னும் மலர்ப் பொழிவுக் காட்டப்படுகிறது.

 

திருப்பாமாலை – பஞ்ச குருபக்தி – பாடல் எண்.1-10

“ஒருபெருங் கேவலத் துலகம் மூன்றும்
பொருவற உணர்ந்த புண்ணிய ராகிப்
பேரொளி மண்டிலம் பெரிதினிது விளங்க
அரிசுமந் தேத்திய அணி ஆசனத்துப்
பொங்கு சாமரை புடைநின் றிரட்ட
எங்குந் துந்துபி அந்தரத் தியம்ப
மருவிய பூமழை வானோர் சொரிதர
எரிதளிர்ப் பிண்டி யின்னிழன் மேவி
இலங்கொளி முக்குடை இயல்பெற நிழற்றக்
கலங்கிய இருவினைக் கடிபடை உடையப்”

 

3.திவ்யதொனி

தேவேந்திரன் அமைக்கும் சமவசரணத்தில் மன்னுயிர்கள் (மானிடர்கள், மிருகங்கள், பறவைகள்)
மட்டுமல்ல வானுலகத்திலுள்ள நான்கு வகைத் தேவர்களும் பகவான் அறம் கேட்க வருவார்கள்.
பகவான் திருவாய் மலர்ந்தருளுவார். (அவருடைய வாய் அசையாது, ஆனால் அவர் திருவாய்
பொழியானது அனைத்து மிருக, பறவை உயரிகளுக்கும் தத்தம் மொழிகளிலும், மானிடர்களுக்கு
அவரவர் மொழிகளில் (18 மொழிகள்) கேட்கும். இவற்றை திவ்யதொனி என்பார்கள். தமிழில்
“திருவாய் மொழி” என்றும் ”திருமொழி” என்றும் அழைக்கப்படும்.

 

திருநூற்றந்தாதி – பாடல்:52

கதமொழி தீர்முன் கறுவுக டேய்மின் கருணைநெஞ்சோ
டிதமொழி கூறுமி னின்னுயி ரோம்புமி னெப்போழுதுஞ்
சுதமொழி கேண்மின் சுகமிக வேண்டிற் றுறவர்சொன்ன
வதமொழி யேன்மி னிவைசிந னார்திரு வாய்மொழியே”

 

4.சாமரம்

அரசருக்கு இரண்டு பக்கமும் சாமரம் வீசுவோர் இருப்பது போன்றே அரச வம்சமான தீர்த்தங்கரர்களுக்கும்
தேவர் சாமரம் வீசுவதாக குறியீடு அமைத்திருப்பர்.

 

5.சிம்மாசனம் அல்லது அரியாசனம்

அரசர்கள் சிம்மாசனத்தில் அமருவதுபோல தீர்த்தங்கர சிற்பங்களிலும் சிம்மாசனம் குறியீடாகக்
காட்டப்பட்டிருக்கும். தீர்த்தங்கரர் சிலைகளில் கீழ் காட்டப்படும் சிங்க முகங்களை வைத்து அது
வர்த்தமான மகாவீரர் இலாஞ்சனம் (சின்னம்) என்றும் அந்தச் சிற்பம் அவரின் சிற்பவடிவம் என்று
கருதுகிறார்கள். இது தவறு. எல்லா தீர்த்தங்கரர் சிலைகளிலும் சிங்க முகங்கொண்ட ஆசனங்கள்
(சிம்மாசனம்) அமைக்கப்பட்டிருக்கும்.

 

இங்கு ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும், தீர்த்தங்கர பகவான் அமர்ந்த கோலத்தில் சிலை
அமைக்கும்போது அரியாசனத்திலும், நின்ற கோலத்தில் தாமரை மலரில் நிற்பது போலவும் காட்டப்படும்)

 

6.தேவ துந்தூபி ஒலி

சமவசரணத்தில் பகவான் எழுந்தருளும்போது தேவர்கள் துந்துபி என்ற வாத்தியத்தை முழங்கும்போது
ஏற்படும் ஒலி. இவற்றை சிற்பங்களில் காட்டமுடியாது.

 

7.ஒளி மண்டலம்

இஃது எல்லா சமய சிற்பங்களிலும் காட்டப்படுவதுதான். தென்னக சமண சிற்பங்களில் இப்பிரபாவளி
நீள்வட்டத்தில் காட்டப்பட்டிருக்கும். வடநாட்டு சமண சிற்பங்களில் அவை முழுவட்டவடிவில் காட்டப்பட்டிருக்கும்.

 

8.முக்குடை

அரசர்கள் அமரும் அரியாசனத்தின் மேல் ஒரு குடையிருக்கும். எல்லா தேசங்களையும் அரசர்கள் வெற்றிக்
கொண்டாலும் மற்ற உலகங்களை வெற்றிக் கொள்ள முடியாது என்பதால் ஒரு குடை மட்டும் இருக்கும்.
ஆனால், அறப்புணைவோர்கள் தங்கள் கேவல ஞானத்தால் மூன்று உலகங்களையும் (மேல்,நடு மற்றும் கீழ்)
வென்றவர்கள் என்பதால் குறியீடாக மூன்று குடைகள் காட்டப்பட்டிருக்கும்.

(முக்குடை முறையே சந்திராதித்தம், நித்திய விநோதம், சகலபாசனம் என்று அழைக்கப்படும்)

 

You may also like

Leave a Comment