Home History கல்வெட்டு அட்டவணை

கல்வெட்டு அட்டவணை

by Dr.K.Subashini
0 comment

இந்த கல்வெட்டு இணைய அட்டவணை தொல்லியல் நிபுணர் டாக்டர்.இரா.நாகசாமி அவர்களது “உங்கள் ஊர் கல்வெட்டுத் துணைவன்” நூலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு அட்டவணைகளை தமிழ் மரபு அறக்கட்டளைக்காக தட்டச்சு செய்து வழங்கியவர் திருமதி.கீதா சாம்பசிவம். இணைய அட்டவணை உருவாக்கம், தகவல் வங்கி பராமரிப்பு : முனைவர்.க.சுபாஷிணி. இந்த அட்டவணை உங்கள் வாசிப்புக்கு பயனளிக்கும் என்று நம்புகின்றோம்.
                                                                                                        சுபா – மே, 2010


 

 

உங்கள் ஊர் கல்வெட்டுத் துணைவன்

 

இந்நூலை எப்படிப் பயன்படுத்துவது??

 

முதலில் இதைப் படியுங்கள்

 

ஒரு நாட்டின் பண்பாடு என்பது அந்நாட்டின் வரலாற்றிலிருந்து அறியப் படுகிறது. வரலாற்றை அறிய சான்றுகள் தேவை. உண்மை வரலாற்றை அறிய பண்டைய கல்வெட்டுகள் தாம் இன்றியமையாத சான்றுகளாக உதவுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள ஏராளமான ஊர்கள் ஆயிரம் ஆண்டுகட்கும் மேலாக அதே பெயரில் இன்றும் திகழ்கின்றன. சில ஊர்கள் பிற்காலத்திலும் தோற்றுவிக்கப்பட்டன. அவற்றில் நம்போல் பல மக்கள் வாழ்ந்துள்ளனர். கல்வெட்டின் வாயிலாக ஊர்களைப் பற்றியும் அங்கு வாழ்ந்த மக்களைப் பற்றியும் நம்மால் அறிந்து கொள்ளமுடியும். ஒவ்வொரு மனிதனுக்கும் தனது ஊரைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டும் என்னும் ஆர்வம் எழுவது இயற்கையே.

 

உங்கள் ஊர் எவ்வளவு பழைமையானது? உங்கள் ஊரில் உள்ள கோயில் எவ்வளவு பழைமையானது? அதை யார் கட்டினார்கள்? அதன் பழைமையான பெயர் என்ன? யாரெல்லாம் அதைப் பராமரித்து இருக்கிறார்கள்? அதற்கு யாரெல்லாம் நிலம் கொடுத்தார்கள்? எத்தனை நிலம் கொடுத்தார்கள்? அதன் எல்லைகள் என்ன?? கோயிலுக்கு வேறு என்ன பொருள்கள் கொடுத்தார்கள்? உங்கள் ஊரில் ஊராட்சி எப்பொழுது தோன்றியது? அதில் யாரெல்லாம் இடம் பெற்றிருந்தார்கள்? அவ்வூராட்சி என்ன பணி செய்தது? உங்கள் ஊரில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் வாணிகம் எப்படி நடந்தது? என்ன காசுகள் புழக்கத்தில் இருந்தன? நீதிமன்றம் இருந்ததா? இவற்றையெல்லாம் பற்றி அறிய வேண்டுமா உங்கள் ஊர் கல்வெட்டுகள் தான் அவற்றையெல்லாம் கூறும் சான்றுகள். உங்கள் ஊரில் கல்வெட்டு இருக்கிறதா?? உங்கள் ஊர் கல்வெட்டுகளைப் படி எடுத்து இருக்கிறார்களா? உங்களுக்குத் தெரியவேண்டுமா? இந்நூலைப் பாருங்கள்.

 

கடந்த ஒரு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அரசு இதற்கென துறையை அமைத்து ஊர் ஊராகச் சென்று, அந்த ஊர் கல்வெட்டுக்களைப் படி எடுத்து வருகின்றது. இவ்வகையில் சுமார் முப்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகளைப் படி எடுத்து இருக்கிறார்கள். இவற்றைச் சுருக்கமாக “கல்வெட்டு ஆண்டு அறிக்கை” என ஆங்கிலத்தில் அச்சிட்டும் உள்ளனர். அதைப் பற்றி செய்திகளை எங்கு கண்டுபிடிக்க முடியும் என்பதை அறிய உதவுவது தான் இந்த நூலின் நோக்கம். அதனால் தான் இந்நூலின் பெயரே “உங்கள் ஊர் கல்வெட்டுத் துணைவன்” என்பதாம்.

 

தமிழ்நாட்டில் உள்ள எத்தனை ஊர்களில் கல்வெட்டுகளைப் படி எடுத்து இருக்கிறார்களோ அத்தனை ஊர்களையும் மாவட்டம் வாரியாக அகர வரிசையில் பட்டியல் போட்டு இந்நூல் கொடுக்கிறது. இந்நூலைக்கொண்டு உங்கள் ஊரில் கல்வெட்டு இருக்கிறதா இல்லையா என்று உங்களாலேயே அறிந்து கொள்ள முடியும். படி எடுத்த கல்வெட்டுகளுக்கு வரிசையாகப் பதிவு எண் கொடுத்து இருக்கிறார்கள் அந்தப் பதிவு எண் என்ன?? எந்த ஆண்டு படி எடுத்திருக்கிறார்கள் முதலியசெய்திகள் இந்நூலில் உள்ளன.

 

எடுத்துக்காட்டாக உங்கள் ஊரைப் பற்றித் தெரிந்து கொள்ள உங்கள் மாவட்டத்தின் கீழ் பாருங்கள். அகர வரிசையில் உங்கள் ஊர் உள்ளதா? அது எந்த வட்டத்தில் (தாலுகாவில்) உள்ளது என்று பாருங்கள். அதற்கு நேரே ஒரு ஆண்டு காணப்படும். அந்த ஆண்டில் தான் உங்கள் ஊர் கல்வெட்டை அரசு படி எடுத்துப் பதிவு செய்திருக்கிறது. அதகு அடுத்த பத்தியில் எண்கள் உள்ளன. 15-35 என்று இருக்கிறது என்றால் அந்த ஆண்டில் கல்வெட்டுப் பட்டியலில் 15-வது எண்ணில் இருந்து 35-வது எண் வரை உங்கள் ஊர் கல்வெட்டுகள் பதிவு செய்யப் பட்டுள்ளன என்பது பொருள். அச்செய்தியை இந்நூல் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம். அதன் பிறகு அந்த ஆண்டுக் கல்வெட்டு அறிக்கை பக்கம் சென்று பார்த்தால் உங்கள் ஊர் கல்வெட்டின் செய்திச் சுருக்கம் கிடைக்கும். இந்நூலில் எந்த ஆண்டு எந்த எண்களில் உங்கள் ஊர் கல்வெட்டுகள் உள்ளன என்ற செய்தி மட்டும் கிடைக்கும்.

 

அச்செய்தியை இந்நூல் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம். அதன் பிறகு அந்த ஆண்டுக் கல்வெட்டு அறிக்கை நூலைச் சென்று பார்த்தால் உங்கள் ஊர் கல்வெட்டின் செய்திச் சுருக்கம் கிடைக்கும். இந்நூலில் எந்த ஆண்டு எந்த எண்களில் உங்கள் ஊர் கல்வெட்டுகள் உள்ளன என்ற செய்தி மட்டும் கிடைக்கும்.

அந்த ஆண்டறிக்கைகள், அரசு துறைகளில் உள்ளன. மத்திய தொல்லியல் ஆய்வுத் துறை, மாநிலத் தொல்லியல் ஆய்வுத் துறை அல்லது உங்கள் ஊருக்கு அருகில் உள்ள பல்கலைக் கழகம் முதலிய நிறுவனங்களின் நூலகங்களில் அந்த ஆண்டறிக்கைகள் இருக்கும். அங்கு கேட்டு அறிந்து கொள்ளலாம். அல்லது அந்தத் துறைகளுக்கு எழுதித் தெரிந்து கொள்ளலாம். அந்தத் துறைகளின் முகவரியும் இங்கு கொடுக்கப் பட்டிருக்கிறது.

 

அந்தக் கல்வெட்டுகளை முதலில் அன்றிருந்த அரசு, “மெட்ராஸ் கல்வெட்டு ஆண்டு அறிக்கை” என்று வெளியிட்டு வந்தது. பிறகு அது மத்திய அரசுக்கு மாற்றப் பட்டது. இப்பொழுது மத்திய அரசு அவற்றை “இந்திய கல்வெட்டு ஆண்டு அறிக்கை” எனத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்நூலில் தான் மாவட்டம், வட்டம், ஊர்கள், படியெடுக்கப் பட்ட கல்வெட்டுகள், அரசு, காலம் ஆகிய அனைத்தும் சுருக்கமாக ஆங்கிலத்தில் கொடுக்கப் பட்டுள்ளன. 1887-ம் ஆண்டு தொடங்கி 2000 வரையில் தொடர்ந்து ஆண்டாண்டாக வெளிவந்துள்ள ஆண்டு அறிக்கைகளில் இருந்து இந்த நூல் தொகுக்கப் பட்டுள்ளது.

 

கல்வெட்டு முழு வாசகமும் கல்வெட்டு ஆண்டறிக்கையில் இருக்காது. சில கல்வெட்டுகளின் முழு வாசகங்களையும் தனியாக “தென்னிந்தியக் கல்வெட்டுகள்” (South Indian Inscriptions Volumes Series) எனப் பல தொகுதிகளாக அரசு வெளியிட்டுள்ளது. அவற்றில் தான் முழு வாசகங்களையும் பார்க்க இயலும். ஆதலின் எந்தெந்த ஊர் கல்வெட்டுகளின் முழு வாசகங்கள் வெளியிடப் பட்டுள்ளன என இந்நூலின் இரண்டாம் பகுதியில் காணலாம்.

 

அது தவிர கல்வெட்டுகளின் முழு வாசகங்களையும் விரைவில் கொண்டுவர தமிழ்நாடு அரசு தனியாக ஒரு பிரிவை மாநிலத் தொல்லியல் துறையின் கீழ் ஏற்படுத்தி அதன் வாயிலாகவும் பல நூல்களை வெளியிட்டு இருக்கிறது. அவை “தமிழ்நாடு மாநில கலவெட்டுகள்” என்ற பெயரில் உள்ளன. அவ்வரிசையில் வந்துள்ள ஊர்களின் பட்டியலும் இந்நூலில் தனியாகக் கொடுக்கப் பட்டுள்ளது. ஆதலால் உங்கள் ஊரின்  பெயர் இரண்டாம் பகுதியில் இல்லாவிட்டால் மூன்றாம் பகுதியில் இருக்கக் கூடும். அப்பகுதியில் பாருங்கள்.

 

அக்காலத்தில் புதுக்கோட்டை மாவட்டம் தனியாக அரசரின் கீழ் இயங்கி வந்தது. அக்காலத்திலேயே புதுக்கோட்டை அரசு தன் ஆட்சியின் கீழ் இருந்த ஊர்களை ஆய்ந்து கல்வெட்டுகளை படியெடுத்து ஊர்வாரியாகத் தமிழில் முழு வாசகங்களையும் அச்சிட்டிருக்கிறது. அவற்றைச் சுருக்கி ஆங்கிலத்திலும் தனி நூலாக வெளியிட்டிருக்கிறது. நம் நாடு சுதந்திரம் பெற்றவுடன் புதுக்கோட்டை அரசு இந்திய அரசுடன் இணைந்துவிட்டது. அதன்பின் தனியாக அங்கு எதுவும் வெளியிடப் படவில்லை. புதுக்கோட்டை அரசு வெளியிட்ட ஊர்களின் பட்டியலும், கல்வெட்டு எண்களும் இங்கு தனிப்பகுதியாக கொடுக்கப் பட்டுள்ளன. புதுக்கோட்டை ஊர்களைப் பற்றி அறிய விரும்பினால் தனியாக வந்துள்ள அந்தப் பகுதியைப் பாருங்கள். அதில் இல்லையென்றால், இப்போது புதுக்கோட்டை வட்டமாக மாறியபின் எடுக்கப் பட்ட பகுதியும் தனியாக உள்ளது. அங்கு பார்க்கலாம்.

 

இது தவிர, பல தனி நிறுவனங்களும் இவ்வாராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. ‘ஆவணம்’ என்ற நூலில் புதிய கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்ட பல ஊர்களைக் குறித்து வெளியிட்டிருக்கிறார்கள். அவற்றின் பட்டியலும் ஐந்தாவது பகுதியாக இந்நூலில் கொடுக்கப் பட்டுள்ளது. அதிலும் பாருங்கள்.

 

இந்நூலில் பல ஊர்களின் பெயர்கள் பழைமையான பெயர்களாக இருக்கக் கூடும்! வட்டத்தின் பெயர்களிலும் வேறுபாடுகள் இருக்கலாம். மாவட்டப் பெயர்கள் கூட இப்பொழுது அதிகரித்துள்ளன. ஆதலின் பெயர்களில் சில வேறுபாடுகளை நீங்கள் இந்நூலில் காணலாம். கல்வெட்டு படி எடுக்கப்பட்டபோது ஊர் என்ன பெயரில் இருந்ததோ அப்பெயர்தான் இங்கு பெரும்பாலும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பெயரில்தான் ஆண்டறிக்கையில் இருப்பதால், அங்கு பார்த்தால்தான் தெரியும் என்பதால், பழம் பெயர்களே கொடுக்கப்பட்டுள்ளன. பிழை இருந்தால் எழுதுங்கள். அடுத்த பதிப்பில் திருத்தி வெளியிட உதவியாய் இருக்கும்.

 

இந்நூலை தொகுப்பதற்கு எனக்கு மிகவும் உதவிய என் மனையாளின் உடன்பிறந்தார் ஸ்ரீவி.நாகராஜன் அவர்களுக்கும், திருமதி மாலதி சுந்தரம் அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்நூலைத் தொகுக்க உதவியது மட்டுமின்றி ஒவ்வொரு ஊர்வாரியாக சரிபார்த்து அச்சுப்பிழை திருத்தி அயராது உழைத்த திருமதி மாலதி சுந்தரம் அவர்கள் என்னிடம் கல்வெட்டு படித்து வருகிறார். அவரது உழைப்பையும் ஆர்வத்தையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவருக்கு என் மனமார்ந்த நன்றியை உரித்தாக்கிக்  கொள்கிறேன்.

 

இந்நூலைச் சீருடனும், சிறப்புடனும் அச்சிட்டு உதவிய நண்பர் திருமயிலை ஜெய் கணேஷ் உரிமையாளர் திரு இரவி அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

இந்நூல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும், கல்லூரிகளிலும், பள்ளிகளிலும், பஞ்சாயத்துப் பெருநகர்களிலும், மாவட்ட ஆணையர், வருவாய்த்துறை அதிகாரிகள் அனைவரிடத்திலும் அவசியம் இருக்கவேண்டிய இன்றியமையாத நூல். தமிழகம் இந்நூலைப் படித்து, தனது வரலாற்றைப் போற்றும் என உறுதியாக நம்புகிறேன்.

 

இவ்வரும் கல்வெட்டுப் பொக்கிஷங்களை ஊர் ஊராகச் சென்று ஆய்ந்து படி எடுத்து வரலாற்றுக்குப் பெரும் தொண்டு ஆற்றிய அரசுக்கும் கல்வெட்டாய்வாளர் அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.

 

இரா.நாகசாமி

You may also like

Leave a Comment