Home Tamilmanigal அபிநவ காளமேகம்

அபிநவ காளமேகம்

by Dr.K.Subashini
0 comment

தமிழ்ப் பேரை "அபிநவ காளமேகம்"

முனைவர் கு.சடகோபன்

 

  • ஆசுகவி
  • சிலேடைப்புலி
  • அபிநவ கார்மேகம்
  • அபிநவ காளமேகம்
  • அபிநவ பிள்ளைப் பெருமாளையங்கார்

என்றெல்லாம் போற்றப்படும் தென் திருப்பேரை அநந்த கிருஷ்ணையங்கார் 19 – 20 நூற்றாண்டுகளில் வாழ்ந்த மாபெரும் புலவர்.

 

  • ஆசுகவி
  • சிலேடைக்கவி
  • வித்தக்கவி
  • சித்திரக்கவி

ஆகிய நான்கு கவிகளிலும் வல்லவராய்த் திகழ்ந்த இவரை "நாலுகவிப் பெருமாள்" என்றே அழைக்கலாம்.

 

இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தென்திருப்பேரை என்ற ஊரில், ஜைய்மினி சூத்திர தலவகார சாம வேதியர் வம்சத்தில், நூற்றெண்மர் மரபில், பிள்ளை மங்கலத்தார் மரபில், கவிராயர் குடும்பத்தில், கவி சீனிவாசய்யங்கார் – குழைக்காத நாச்சியார் அம்மாள் தம்பதிக்கு எட்டாவது குழந்தையாக, 1869ஆம் ஆண்டு பிறந்தார். இவர், பரம்பரைக் கவிராயர் குடும்பத்தில் தோன்றியவர். இவருடைய பாட்டனார், சின்னத்தம்பு குழைக்காத அய்யங்கார், பெரும் கவிராயகாதத் திகழ்ந்தவர். இவர், திருவனந்தபுரம் அரசர் சுவாதித்திருநாள் மன்னரின் அவைப் புலவராக விளங்கியவர்.
கவி அநந்த கிருஷ்ணையங்கார் தமிழையும், வடமொழியையும் தம் தந்தையிடமே கற்றார். நம்மாழ்வாரின் வேதமாகிய திருவாய்மொழியை நடு நாயகமாகக் கொண்ட திவ்யப் பிரபந்தத்தையும், மணவாள மாமுனிகளின் தமிழ்ப் பனுவல்களையும், வைணவ மரபு நூல்களையும், இதிகாச, புராணங்களையும், தமிழ் இலக்கியங்கள் பலவற்றையும் கற்றுத்தேர்ந்தார்.

 

அபிநவ காளமேகம், இளம் வயதிலேயே கவிபாடுவதில் வல்லவராக, நினைத்த மாத்திரத்தில் சிலேடைப் பாடல்களைப் பாடும் ஆற்றல் உடையவராகத் திகழ்ந்தார். இரு பொருள் தரும் சிலேடை முதல், ஐந்து பொருள் வழங்கும் சிலேடை வரை இவர் பாடித் தந்திருப்பது தமிழுக்கு இவர் வழங்கிய பெருங்கொடையாகும். தமிழ் இலக்கிய உலகில் சிலேடைக் கவிகளில் இவர் சக்ரவர்த்தியாக விளங்கியவர் என்றால் மிகையில்லை.

வானமாமலை மடம் 25வது பட்டத்தை அலங்கரித்த சின்னக்கலியன் இராமானுஜ ஜீயர் சுவாமிகள் இவரது திறம் அறிந்து "அபிநவ பிள்ளைப் பெருமாளையங்கார்" என்ற கிடைத்தற்கரிய விருதை வழங்கியுள்ளார்.

 

"தமிழ்த்தாத்தா" உ.வே.சாமிநாதையருக்கும், பெருமாளையங்காருக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. உ.வே.சா., இவரது ஈடு இணையற்ற புலமையையும், விரைந்து பாப்புனையும் ஆற்றலையும் கண்டு வியந்து, பெரும் புவலர்கள் முன்னிலையில், "அபிநவ கார்மேகம்" என்ற விருதை அளித்துப் பாராட்டியுள்ளார். உ.வே.சா., வழங்கிய "அபிநவ கார்மேகம்" என்ற விருதே, காலப் போக்கில் "அபிநவ காளமேகம்" என்று வழங்கலாயிற்று.

இவர், காளமேகத்தை விஞ்சிநிற்கும் மேலான கவிஞர் என்பது இரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியாரின் கருத்தாகும். "காளமேகத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற புலவர்கள் கூட ஐயங்கார் அவர்களின் பாடலைக் கேட்டுவிட்டால் காளமேகம் எல்லாம் சூரியனைக் கண்ட பனிதான் என்று கூறி விடுவார்கள்,"என்பது டி.கே.சி.யின் வைர வரிகளாகும்.

 

இவர் தமது இருபத்தைந்தாம் வயதில், 1894இல் "பத்மநாபசுவாமி மாலை"யை வெளியிட்டிருக்கிறார். திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் புலவராகத் திகழ்ந்த யாழ்ப்பாணம் கணபதிப்பிள்ளை இந்நூலுக்குச் சிறப்புப் பாயிரம் நல்கியுள்ளார்.

 

இவர், "கண்ணன் கிளிக்கண்ணி" என்ற நூலை 1903ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். திரிசிரபுரத்தில் ஞான சித்தராக விளங்கிய அம்பிகை அருட்பிரசாதி ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க, "ஞானசித்தர் வேள்வி விளக்கம்" என்ற நூலையும் இயற்றியுள்ளார்.

 

1911ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் மாமணி மகுட விழாவைப் போற்றி, "மகுட தாரண வைபவ வெண்பா" என்ற நூலை இயற்றியுள்ளார். உ.வே.சா., இந்நூலைப் பாராட்டி ஒரு சிறப்புப் பாயிரம், விருத்தப்பா பாடியுள்ளார். இந்த நூலுக்கு மன்னர், தங்கத்தோடா பரிசாக வழங்கியுள்ளார். அம்மன்னரின் வெள்ளிவிழாவிலும் "கமலபந்த வெண்பா" என்ற நூலை இயற்றியுள்ளார். இந்த நூலை, இலண்டன் மாநகரில் வாழ்ந்த தமிழ் கற்றுணர்ந்த போப்பையர் பாராட்டி, மன்னர் மற்றும் இராணியின் உருவம் பொதித்த பதக்கத்துடன் கூடிய பொற்சங்கிலியைக் இவருக்கு வழங்கப் பரிந்துரைத்தாராம்.

 

இவர் தாம் அவ்வப்போது பாடிய பாடல்களைத் தொகுத்து, "தனிப்பா மஞ்சரி" என்ற நூலை 1836இல் வெளியிட்டுள்ளார்.

 

தமிழ் இலக்கிய வகைகளில் சிறுகாப்பிய வகைகள் பல. அவற்றுள் சிலேடை மாலையும் ஒன்று. இவர், திருவரங்கச் சிலேடை மாலை என்ற நூறு பாடல்கள் கொண்ட ஒரு பிரபந்தத்தை 1900இல் இயற்றி, 1936இல் அதை அச்சிட்டு வெளியிட்டுள்ளார்.

 

தாம் பிறந்த ஊரின் சிறப்பைக் கூறும் விதமாக "திருப்பேரைக் கலம்பம்" என்ற கலம்பக நூலும் இயற்றியுள்ளார். இவர் இயற்றிய மற்றொரு நூல், "திவ்ய தேசப் பாமாலை". அபிநவ பிள்ளைப் பெருமாளையங்கார் என்ற விருதுக்கேற்ப, திருவரங்கம் பிள்ளைப் பெருமாளையங்கார் பாடிய நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி போன்று இவரும் "திவ்யதேசப் பாமாலை" என்ற நூலை இயற்றியுள்ளார். தாம் நேரில் சென்று தரிசித்தத் தலங்களையும், ஆழ்வார்கள் பாடாது விட்ட தலங்களையும் சேர்த்துப் பாடியுள்ளார்.

 

உ.வே.சா.,வின் கருத்துக்கிணங்க பழைய திருப்பதிகளுடன்

  • திருப்பெரும்புதூர்
  • திருநாராயணபுரம்
  • ராஜமன்னார் கோயில்
  • திருமுட்டம்
  • விருந்தாவனம்
  • வற்கலை
  • பண்டரிபுரம்
  • திருமழிசை
  • திருமண்டக்குடி
  • திருவுறையூர்
  • தில்லைவிளாகம்

முதலிய ஆழ்வார்கள் பாடாத திருத்தலங்களையும் சேர்த்து நூற்றெட்டுப் பாடல்களுக்குள் இப்பாமாலையைப் பாடியுள்ளார். வைணவ ஆசாரியர்களில் கடைசி ஆசாரியராகக் கருதப்படும் மணவாள மாமுனிகள் பேரில், "மணவாள மாமுனி ஊசல் திருநாமம்" என்ற நூலை எழுதி 18.1.1938இல் வெளியிட்டுள்ளார்.

 

  • நீதிவெண்பா நாற்பது
  • கற்பக விநாயகர் பதிகம்
  • வேண்டும் நீதி
  • சுபத்திரா பரிணயம்

ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.

 

சுபத்திரா பரிணயம் என்னும் நூலின் கையெழுத்துப் பிரதி காணாமல் போய்விடவே, அவர்தம் நினைவில் இருந்த பாடல்களை மட்டும் தனிப்பா மஞ்சரியில் கடைசி பகுதியாகச் சேர்த்து வெளியிட்டிருக்கிறார். இவர், தென் திருப்பேரையில் வீற்றிருக்கும் மகர நெடுங்குழைநாதன் மீது பிள்ளைத் தமிழ் பாடியதாகத் தெரிகிறது. அந்நூலைத் தம் இரசிகர்களிடம் படித்துக் காட்டியபோது, ஏற்கெனவே அப்பெருமாள் மீது ஒரு பிள்ளைத் தமிழ் பாடப்பட்டிருப்பது இவர் கவனத்துத்துக் கொண்டுவரப்பட்டது. ஒரு பிள்ளைத் தமிழ்தான் ஓர் இறைவனுக்கு இருக்க வேண்டும் என்ற  மரபைப் பின்பற்றி, தாம் இயற்றிய பிள்ளைத் தமிழைக் கிழித்தெறிந்துவிட்டாராம். இவர் சித்திரக்கவி பலவும் தீட்டியுள்ளார். தமிழ் இலக்கிய வகைகள் அனைத்திலும் அபிநவ காளமேகம் முத்திரை பதித்து, வெற்றிக்கொடி நாட்டியுள்ளார் என்றால் அது மிகையாகாது.

 

1911இல் சென்னையில் கவர்னராக இருந்த கோஷன் பிரபு இவரது கவிதா சாமர்த்தியத்தை நேரில் கண்டு உணர்ந்து, கைகுலுக்கிப் பாராட்டியிருக்கிறார். தமிழ்க் கவிஞர்களில் பரிசில் வாழ்க்கை வரலாற்றிலேயே, மிகப்பெரிய பேரரசரிடமிருந்து பரிசு பெற்ற பெருமை தென்பேரை அபிநவ காளமேகத்தையே சாரும். இப்பெருமை செந்திறத்த தமிழ் மொழிக்குக் கிடைத்த பெருமையாகும்.

 

ஆங்கிலப் பேரரசின் விருதுபெற்ற உத்தமக் கவிஞரான இவர், அன்னிய ஆட்சிக்கெதிராக விடுதலைப் போரை அறவழியில் நடத்திக்கொண்டிருந்த அன்றைய காங்கிரஸ் கட்சியின் பொன்விழா (1835)வில் வாழ்த்திப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

உ.வே.சா., இவரை, "தமிழ்ப் புலமை, பழைய நிலையில் குறைந்துவிட்ட காலத்தில் இத்தகைய கவித்துவ சக்தியுடைய ஒருவரைக் காணுவது அருமையிலும் அருமை" என்று போற்றுகிறார்.

1928ஆம் ஆண்டு சிதம்பரம் மீனாட்சி தமிழ்க் கல்லூரியில் உ.வே.சா., தலைமையாசிரியராகப் பணியாற்றிய காலத்தில் அக்கல்லூரிக்குச் சென்றுள்ளார் அபிநவ காளமேகம். கு.அருணாசலக் கவுண்டர் அப்போது ஐயரவரிடம் பாடம் பயின்று வந்தார். ஐயரவர், அபிநவ காளமேகத்தை மாணவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அங்கே காளமேகம் கவிதை மழை பொழிந்தது. அப்போது கு.அருணாசலக் கவுண்டர்,  "அவ்வளவுதான்! காளமேகம் மின்னாமல் கவிமாரி பெய்யத் தொடங்கியது. கடல் மடை திறந்தாற்போல் கவிவெள்ளம் பாயத் தலைப்பட்டது. சிலேடைப் பொருத்தம், செம்பாகத் தெளிவு, வழக்குச் சொல்லாட்சி இவற்றில் ஐயங்காரவர்கள் காளமேகத்தை வெகு எளிதில் வென்றுவிட்டார்கள். சிலேடை வெண்பாக்களுள் மிகச் சிறந்தது கலசைச் சிலேடை வெண்பா என்பார்கள். ஐயங்காரவர்களுடைய அரங்கச் சிலேடை, மற்றுமுள்ள இராசாவுக்கும், கூசாவுக்கும், கருடனுக்கும், திருடனுக்கும், வேம்புக்கும் ஸ்டாம்புக்கும் முதலிய சிலேடைகள் எங்கள் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தன" என்று கூறினாராம்.

 

இவர் பிறந்த ஆண்டைத் தவிர, தேதி, மாதம் மற்றும் இறையடி சேர்ந்த தேதி, மாதம், ஆண்டு போன்றவை அறியக்கிடைக்கவில்லை என்பது வருத்தத்தக்கது.

 

காளமேகத்தையும் வென்ற தென்பேரைக் காளமேகத்தின் கவித்திறன் குன்றிலிட்ட விளக்கின் ஒளியாகத் தமிழகத்தில் ஒளிரவேண்டும்.

 

 

நன்றி:- தினமணி

You may also like

Leave a Comment