​நண்டூருது.. நரியூருது..

​நமது பாரம்பரிய விளையாட்டுக்களில் முதன்மையானது.. மிகவும் பிரசித்தி பெற்றது..
ஒரு குழந்தை முதன் முதலில் விளையாடும் விளையாட்டு இதுவாகத்தான் இருக்கும்.. தாய்க்கும் குழந்தைக்குமான ஒரு அழகியல் விளையாட்டு..
மூன்று வயதுக்குள் உள்ள குழந்தைகள் விளையாடுவார்கள்…

தாயின் மிக அருகே குழந்தை அமர்ந்திருக்கும் ..
குழந்தையின் வலதுகையைத் தாய் பிடித்து, குழந்தையின் உள்ளங்கையில், தாய் தன் முழங்கையை வைத்து கடைவது போல் ஒரு சுற்று.. வழக்கம் போல் ஒரு பாட்டு..

*பருப்பு கடை.. கீரை கடை.. பருப்பு கடை.. கீரை கடை.*

ஒரு சிலிர்ப்பான அனுபவம் பெற்ற குழந்தை அடுத்த நகர்வை ஆவலோடு அம்மாவை எதிர்நோக்கும்..

குழந்தையின் கைவிரல்கள் ஐந்தையும் விரிப்பார் அம்மா..

ஒவ்வொறு விரலையும் தொட்டு, இது சோறு, இது குழம்பு, இது கூட்டு, இது ரசம், இது மோர்..என்பார்..

குழந்தை தன் கை விரல்களையும் அம்மாவின் முகத்தையும் மாறி மாறி பார்க்கும்..

இது அம்மாக்கு, இது அப்பாக்கு, இது பாட்டிக்கு, இது பாப்பாக்கு என்று பங்கு பிரிப்பார்..

பிறகு குழந்தையின் உள்ளங்கையை வருடியவாறு..

*கழுவி கழுவி காக்காய்க்கு ஊத்து..*
*கழுவி கழுவி நாய்க்கு ஊத்து..*

இனிதான் விளையாட்டின் முக்கியப் பகுதி ஆரம்பம்..

குழந்தையின் கையை நன்றாக நீட்டச்சொல்லி..
தாய் தன் சுட்டுவிரல் மற்றும் நடுவிரல் இரண்டையும்
குழந்தையின் உள்ளங்கையில் வைத்து மெதுவாக தனது விரல்களால் ஊர்ந்து செல்வார்.. இவ்வாறு சொல்லிக்கொண்டே..

*நண்டூருது… நரியூருது..*

குழந்தையின் முகத்தில் ஒரு சிரிப்பு..

ஊர்ந்து சென்ற தாயின் விரல்கள் குழந்தையின் கம்புகூட்டுப்பகுதியை அடைந்து ஒரு கிச்சு கிச்சு மூட்டும்..

உடனே…

குழந்தையின் முகத்தில் ஒரு குறுகுறுப்பு.. உடம்பை ஒரு உலுக்கு உலுக்கி..
கல கலவென்று தொடர்ச்சியாய் ஒரு நிமிடம் சிரிக்கும்..
தாய்க்கும் ஆனந்தம்..

அடுத்தமுறை இவ்விளையாட்டை ஆடும்போது..
குழந்தையின் விரலை பிடித்தவுடன்..
குழந்தையே சொல்லும்.. *இது சோறு.. இது குழம்பு..*

( உற்று நோக்கல்.. கற்றுக் கொள்ளுதல்.. கற்றதை வெளிப்படுத்தல்.. இதுவே இவ்விளையாட்டின் சிறப்பு.)

-திரு.மாரிராஜன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *