Home Printing&Publishing பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையின் பதிப்புமுறைகள்

பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையின் பதிப்புமுறைகள்

by Dr.K.Subashini
0 comment

பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையின் பதிப்புமுறைகள்
மு. சண்முகம் பிள்ளை.

 

தமிழ்நூற்பதிப்பின் நிலை

 

தமிழ்நூற்பதிப்பு வளர்ச்சியின் பல்வேறு படிநிலைகளை எல்லாம் தாம் பதிப்பித்த நூல்களில் கையாண்டு, பதிப்புத் துறைக்குக் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை.  1946 ஆண்டில் பேராசிரியர் வெளியிட்ட ‘திராவிட மொழிகளின் ஆராய்ச்சி’ என்னும் நூலில் அந்நாளில் தமிழ்நூற்பதிப்புகள் வெளிவந்த நிலையப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

 

‘பொதுப்பட நமது பதிப்புகள் குறித்து ஒரு சில விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.  மேலை நாட்டினர் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் நூல்களைப் பதிப்பிப்பதோடு நம் பதிப்பாளர்களின் முயற்சியைச் சிறிதேனும் ஒப்பிடுவதற்கில்லை.  ஓலைச்சுவடிகள் கிடைத்தபோதிலும், அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதில்லை.  அவசியம் வேண்டும் முன்னுரையோ, செய்யுள் முதற்குறிப்பகராதி, சொல்லகராதி, பொருளகராதி முதலியனவோ பல பதிப்புகளில் காணப்படமாட்டா.  ஓலைச்சுவடிகளை ஒப்புநோக்குவதன் மூலம் கிடைக்கும் பாட பேதங்களையும் குறிப்பிடுவதில்லை.  இவை பெருத்த குறைபாடுகள் ஆகும்.  ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் நூல்களைப் பதிப்பித்தல் வேண்டும்.  மொழியாராய்ச்சிக்கும், நூலகளின் காலத்தை நிர்ணயிப்பதற்கும், இலக்கியத்துறையில் பல்வேறு காலங்களைத் துணிவதற்கும், அகராதி தயாரிப்பதற்கும் மற்றும் அடிப்படை விஷயங்களை அறிவதற்கும் இவை பயன்படும் என்பது மனம் கொள்ளத்தக்கது.’
(திராவிட.. பக். 62)

சென்ற நூற்றாண்டு நிலைமை
 

இந்த நூற்றாண்டின் இடைப்பகுதி நிலை இதுவாயின் சென்ற நூற்றாண்டின் நிலை எப்படியாயிருந்திருக்கும்?  எவ்வளவோ குறைபாடுடையதாகத்தான் இருந்தது பழம் பதிப்பாசிரியர்களில் பெரும்பாலாரும் தமக்குக் கிடைத்த இரண்டொரு சுவடிகளை வைத்துக் கொண்டு நூல்களைப் பதிப்பித்தனர்.  அவர்கள் செய்வதெல்லாம் அச்சுவடிகளில் கண்ட கரலிகித வழுக்களைக் களைந்து திருத்தியும், புதுக்கியும், அச்சிட்டமைதான்.

 

பல பிரதிகளைத் தேடி ஒப்பிட்டுப் பதிப்பித்த பதிப்பு முன்னோடிகளில் முதற்கண் குறிப்பிடத்தக்கவர் ராவ்பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளையாவார்.  தன்னந்தனியராய்ப் பண்டைத் தமிழ்ச்செல்வப் புதையலைத் தமிழ் மக்களுக்கு அகழ்ந்தெடுத்துதவும் பெருமுயற்சியை அவர் மேற்கொண்டார்.

 

தாமோதரம் பிள்ளையைப் போலவே அந்நாளில் உ.வே.சாமிநாதையரும் சிந்தாமணிப் பதிப்பு முயற்சியில் பல ஏடுகளைப் பரிசோதித்துப் போராடிக் கொண்டிருந்தார்.  இதனைக் கருத்திற் கொண்டே தாமோதரம் பிள்ளை ஓரிடத்து,

”எனக்கு ஸ்ரீமத் சாமிநாதையரும் அவருக்கு நானுமே சாட்சி” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 

பேராசிரியர் பெற்ற தெளிவு

பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை தமக்கு முன்னும் தம் காலத்தும் தமிழ்ப்பதிப்பாசிரியர்களின் பதிப்பு முறைகளை எல்லாம் நன்கு உணர்ந்திருந்தார்.  மேனாட்டு நூற்பதிப்புகள் எந்தெந்த வகையில் வளர்ந்து வந்துள்ளன என்பதை நுணுகிக் கண்டார்.  எனவே எந்தெந்த நூல்களை எவ்வெவ்வகையில் பதிப்பிக்க வேண்டும் என்பதனைப் பேராசிரியர் நன்கு உணர்ந்திருந்தார்.  பேராசிரியர் பதிப்பித்துள்ள நூல்களை நோக்கின் அவருடைய பதிப்புமுறைகள் நன்கு தெரியவரும்.

 

பேராசிரியரின் பதிப்புகள்:

 

நிகண்டுகள்

 

பேராசிரியர் அகராதிப் பணியில் பெரிதும் ஈடுபட்டிருந்த காலத்தும் வெளிவராத நூல்களைச் சுவடிகளிலிருந்து பதிப்பிக்கும் பணியையும் மேற்கொண்டார்.  அகராதியோடு நெருங்கிய தொடர்புடைய நிகண்டுகளை ஒன்றன்பின் ஒன்றாகப் பதிப்பிக்கவேண்டும் என்று திட்டமிட்டு உழைத்து வரலானார்.  ”தமிழகராதியின் ஆதார நூற்றொகுதி” என்னும் வரிசையில் நாமதீப நிகண்டு, அரும்பொருள் விளக்க நிகண்டு, பொதிகை நிகண்டு, கயாதர நிகண்டு என்னும் நான்கு நூல்களை வெளியிட்டார்.  சொற்பொருள் விளக்கம் தரும் நிகண்டுகளை எம்முறையில் பதிப்பிக்க வேண்டும் என்பதற்கு இப்பதிப்புகள் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

 

சிற்றிலக்கியம்

 

சிற்றிலக்கியங்கள் பலவற்றைத் தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளார்.  இவ்வகையில் பதிப்பித்த நூல்கள் வருமாறு: அருள் முருகாற்றுப்படை, இராஜராஜ தேவர் உலா, குருகூர்ப் பள்ளு, கொண்டல் விடுதூது, சாத்தூர் நொண்டி, திருக்குறுங்குடி அழகியநம்பி உலா, திருப்பணிமாலைகள்(தென் திருப்பேரை, திருக்கோளுர்), தினகர வெண்பா, துகில்விடு தூது, தெய்வச் சிலையார் விறலிவிடு தூது, நெல்விடு தூது, பணவிடு தூது, பூகோள விலாசம், மதுரைக் கோவை, முப்பத்தொட்டியுலா, இராமப்பய்யன் அம்மானை, இரவிக் குட்டிப் பிள்ளைப் போர்.

 

இவற்றுள் பெரும்பாலன திரு வி.க நடத்திவந்த ’நவசக்தி’ இதழில் ’நவசக்திமாலை’ என்னும் தொடரில் வெளிவந்தன. செந்தமிழ்ப் பத்திரிக்கையிலும் திருக்குருகூர் திருஞான முத்திரைக்கோவை சார்பிலும் சிற்சில நூல்கள் வெளிவந்தன.  தம் செலவிலும் சில நூல்களைப் பதிப்பித்தார்.

 

ஒவ்வொரு பிரபந்தம் பற்றிய செய்திகளை விளக்கும் முகவுரையுடன் பாட வேறுபாடுகளை அடிக்குறிப்பில் காட்டியுள்ளார்.  விளங்காத இடங்களில் தாம் சேர்த்துள்ள எழுத்துகளை இருதலைப் பகரத்துள் [ ] அமைத்துள்ளார்.  நூற்பொருளகராதி, சொல்லகராதி முதலிய அகராதிகளையும் அவ்வந்நூலுக்கு ஏற்பச் சேர்த்துள்ளார்.

 

இலக்கண நூல்கள்

இவர் வெளியிட்ட இலக்கண நூல்கள் களவியற் காரிகையும், தொல்காப்பியப் பொருளதிகார இளம்பூரணர் உரையும், நவநீதப் பாட்டியிலும் (பாட்டியலும்) ஆகும்.  இவற்றுள் களவியற் காரிகை முதலும் முடிவுமில்லாத ஒரு குறைநூல்.  கிடைத்த அளவில் நோக்கியதில் இந்நூற் பகுதி மிகவும்  பயன்படக்கூடியதாயிருந்தது.  கிலமான ஒரே பிரதியை வைத்துக் கொண்டு வெகு சிரமப்பட்டு ஒருவாறு செப்பம் செய்து பதிப்பித்தார்.  நூற்பெயரும் புலப்படா நிலையில் நூலின் அமைப்பைக் கொண்டு ’களவியற் காரிகை’ என்னும் பெயரை இவரே படைத்துக் கொண்டார்.  இந்த நூலை அதற்குரிய பழைய உரையுடன் தந்த்தோடு சூத்திரவகராதி, மேற்கோள் அகராதி, மேற்கோட் செய்யுள்களின் அகராத், மேற்கோள் நூல்களைப் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் சேர்த்திருப்பது காணலாம்.

 

நவநீதப் பாட்டியலைப் புத்துரையுடன் பல்வேறு விளக்க அகராதிகளுடன் தந்துள்ளார்.

 

தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் இளம்பூரணர் உரைப்பதிப்பு இவர்களால் முற்றுவிக்கப் பெற்றது.  முதல் இரண்டு இயல்களின் உரைகளை வ.உ.சிதம்பரம் பிள்ளை வெளியிட்டுக் குறையாக நின்றதான வ.உ.சியின் வேண்டுகோளை ஏற்றுப் பின் ஏழு இயல்களையும் பதிப்பித்து முற்றுவித்த பெருமை பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்களையே சாரும்.  தமிழ்நாட்டில் கிடைத்த ஒரேயொரு ஏட்டின் துணையால் இந்தப் பதிப்பை எத்துணைச் சிரமமெடுத்து உருவாக்கியுள்ளார் என்பது அப்பதிப்பினை நோக்குவார்க்கு நன்கு புலனாகும்.

 

புறத்திரட்டு

 

பேராசிரியர் சுவடியிலிருந்து பதிப்பித்த நூல்களுளெல்லாம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது புறத்திரட்டு.  இந்நூலில் சங்கச் செய்யுள்கள் முதலாகக் கம்பனின் இராமாவதாரம் வரையிலும் உள்ள பற்பல நூற்பாடல்கள் இடம் பெற்றுள்ளன.  பல பிரதிகளை ஒப்பு நோக்கி இதனை அவர்கள் பதிப்பித்துள்ள அருமைப்பாட்டினை அப்பதிப்பினை நோக்குவார் நன்கு உணர்வர்.  இத்திரட்டு நூலிலே நாரத சரிதை, சாந்தி புராணம், தகடூர் யாத்திரை, முத்தொள்ளாயிரம் முதலிய எத்தனையோ மறைந்துபோன நூல்களின் பாடல்கள் அமைந்திருக்கக் காணலாம்.  பாட வேறுபாடுகளை ஒவ்வொரு பக்கத்தும் அடிக்குறிப்பாகத் தந்துள்ளார்.  இந்நூலுக்கு அவர்கள் எழுதியுள்ள முகவுரை தமிழிலுள்ள தொகை நூல்களைப் பற்றிய வரலாறு ஆகும்.  அனுபந்தங்களாகத் தரப்பட்டுள்ள செய்யுள் முதற்குறிப்பு அகராதி முதலிய பல்வேறு அகராதிகளும் இப்பதிப்பின் சிறப்பிற்குக் கட்டியங் கூறுவனவாம்.

பலநூல்களின் மறுபதிப்பு
 

ஏற்கனவே வெளிவந்த நூல்களைப் பிரதிகளின் துணைக் கொண்டு மீண்டும் ஆராய்ந்து வெளியிட்ட பதிப்புகளும் பலவாம்.  அவர்கள் திருவனந்தபுரத்திலே வக்கீல் தொழில் புரிந்து வந்த காலத்தில் 1922 ஆம் ஆண்டு வெளியிட்ட பேராசிரியர் சுந்தரம் பிள்ளை இயற்றிய ’மனோன்மணீயம்’ நூலின் மறுபதிப்பு அந்நூலுக்கு ஒரு புதுப்பொலிவினைத் தந்துள்ளது. 

 

சென்னைப் பல்கலைக்கழகப் பணிகளின்போது வெளிவந்தவை, திருமுருகாற்றுப்படை, திருமந்திரம், தொல்காப்பியப் பொருளதிகாரம்-நச்சினார்க்கினியம், சங்க இலக்கியம், சீவக சிந்தாமணி, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் திரிகடுகம், சிறுபஞ்சமூலம், நான்மணிக்கடிகை, இன்னாநாற்பது, இனியவைநாற்பது என்பனவாம்.

 

இவற்றுள் சங்க இலக்கியம் ஆசிரியர் அகரவரிசையில் அவரவர் பாடிய பாடல்களை எல்லாம் ஒருங்கு தொகுத்துத் தரும் பெரும் பதிப்பு.  பாட்டு தொகைநூல்களை எல்லாம் ஒரு சேர உள்ளடக்கிய இப்பதிப்பு சங்கநூற் பயிற்சியாளர்களுக்குக் கிடைத்தவோர் அரும்புதையலாகும்.  இந்நூலுக்கு விளக்கமாக அமைந்த பல்வேறு அகராதிகளும் அட்டவணைகளும் கற்பார்க்குக் கைவிளக்கமாய் முன்னிற்கின்றன.

 

சீவக சிந்தாமணிப் பதிப்புகளில் டாக்டர் ஐயரவர்கள் தம் காலத்துப் பதிப்பித்த பதிப்புகளில் பற்பல திருத்தங்களை மூலபாடத்திற் செய்து அவற்றைச் செப்பஞ் செய்து வந்துள்ளமையை அவர்தம் பதிப்புரைகளால் அறியலாகும்.  அந்நூலின் மேலும் திருத்தம் பெற வேண்டிய பகுதிகள் பலவாக இருந்தன.  பேராசிரியர் தமக்குக் கிடைத்த ஏடுகளின் துணைக் கொண்டு திருத்திய மூலப்பதிப்பை வெளியிட்டார்.  சீர்முறையில் பாடல்கள் அச்சிடப்படாமல் இருந்த குறையையும் இப்பதிப்பில் நிறைவு செய்துள்ளார்.  இதன் முகவுரையில்,

”ஆராய்ச்சிக்கு முடிவில்லை.  முயற்சி மிகுந்தோறும் பிரதிகளின் உதவி பல்குந்தோறும் திருத்தங்கள் ஏற்பட்டுக் கொண்டிருத்தல் இயல்புதான்.  தமிழ்க்கல்வி மேன்மேலும் பரவ வேண்டுமாயின் பிழைகளைப் பிழையென உணர்தல் வேண்டும்.  அவற்றைப் பொதிந்து வைத்தலைக் காட்டினும் தமிழன்னைக்குச் செய்யும் பெருந்தீங்கு ஒன்றுமில்லை.”

என்று ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார்.  ஆகவே, ஒரு நூலுக்கு மேலும் புதிய பிரதிகள் கிட்டுமாயின் அவற்றுடன் ஒப்பு நோக்கி ஆராய்தல் மிகவும் அவசியமானதாகும் என்பது அவர்கள் கருத்து.

பிறருடன் சேர்ந்து பதிப்பித்தவை

 

தம் பதிப்புப் பணியில் ஏனையருடன் கலந்தும் அவர்தம் உதவியைப் பெற்றும் பதிப்பித்த நூல்களுள் ’திருமந்திரம்’ சமாஜப்பதிப்பு முதலாவதாகக் குறிப்பிடத்தக்கது.  பேராசிரியர் எஸ்.அனவரத விநாயகம் பிள்ளையும், பெ.நா. அப்புஸ்வாமி ஐயரும், திருமந்திர ஏடுகளை ஒப்பு நோக்குவதில் உதவி புரிந்தனர்.  ஆய்வில் கண்ட பாட வேறுபாடுகளை இப்பதிப்பில் அடிக்குறிப்பில் தந்துள்ளார்.

 

திருமுருகாற்றுப் படைக்கு எளிய நடையில் உரையெழுதி சமாஜத்தின் வழி வெளியிட்டார்.  பாராயணமுஞ் செய்பவர்கள் சொற்களின் வடிவையுணரும் வண்ணம் அடைமொழி முதலியன விளங்க இப்பதிப்பில் பிரித்துத் தந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  இந்நூலுக்கு உரை காணும்போது பெ.நா. அப்புஸ்வாமி ஐயரும் துணையாக இருந்தார்.

 

கம்பராமாயணப் பதிப்பு

 

கம்பராமாயண ஆய்வில் பேராசிரியர் தாம் வக்கீல் தொழில் புரிந்து வந்த காலத்திலிருந்தே ஈடுபட்டு வந்துள்ளார்.  கம்பராமாயண முற்பதிப்புகள் பலவும் தொகுத்துவைத்து  அவற்றின் போக்கினைக் கண்ட்து ஒருபுறம்.  இராமயணச் சுவடிகள் பலவற்றைத் தேடித் தொகுத்தும் வைத்தார்.  ஏனைய பணிகளுக்குகிடையில் இராமாயண ஆய்விலும் ஈடுபட்டு வந்தார்.  திருவாளர்கள் கா. நமசிவாய முதலியார், இலக்கணவிளக்கப் பரம்பரைச் சோமசுந்தர தேசிகர், மு.இராகவையங்கார், பெ.நா.அப்புஸ்வாமி ஆகியவர்களும் அவர்களுடைய கம்பராமாயணச் சுவடி ஆய்வுக்கு உதவியதுண்டு.  இவர்களோடு நீண்ட காலமாக உடன் இருந்த (இருந்து) உதவியவர் பெ.நா.அப்புஸ்வாமி ஐயரே.  அவர், தாம் ஆய்ந்துகண்ட பாடவேறுபாடுகள், மிகைச் செய்யுள்கள், இடைச்செருகல் முதலியவற்றைக் காட்டி பாலகாண்டத்தின் முதல் ஏழு படலங்களை 1937-ல் வெளியிட்டார்.  இப்பதிப்புக் குறித்து முன்னுரையில் அவர் தெரிவித்த கருத்துகள் இந்நூற்பதிப்பில் அவர்கள் கொண்டிருந்த நோக்கத்தை வெளிப்படுத்தும்.

 

”இப்பதிப்பில் நூதன முறைகள் சில கையளப்பட்டுள்ளன.

  1. பாலகாண்டத்தின் ஆரம்பத்தில் நூற்குப் புறம்பாகக் காணப்படும் தனியன் முதலிய செய்யுள்கள் ஒருமுறை தழுவாது முன்பின்னாகப் பிரதிகளிற் காணப்பட்டன.  அவற்றை ஒரு முறைப்படுத்து இப்பதிப்பில் தந்துள்ளமை காணலாம்.
  2. படலச் செய்யுளின் எண் தொடக்கத்தில் தமிழிலும் நூற் செய்யுளின் தொடர்ந்த எண் செய்யுளின் இறுதியில் ஆங்கிலத்திலும் தரப்பட்டுள்ளன.
  3. அடிக்குறிப்பில் இருதலைப் பகரக் குறியுள் [ ] காணப்படும் தமிழ் எண் படலச் செய்யுளின் எண்ணைக் குறிப்பது.
  4. இத்தமிழ் எண்ணை அடுத்துள்ள ஒற்றையுடுகுறி அச்செய்யுள் ஒன்றிரண்டு பிரதிகளிற் காணப்பெறவில்லை என்பதையும், இரட்டையுடுகுறிகள் அது பல பிரதிகளிற் காணப்பெறவில்லை என்பதையும் குறிப்பன.
  5. அடிக்குறிப்பிற் பாட பேதங்களுக்கு முன்னுள்ள எண்கள் செய்யுளின் சீர்களைக் குறிப்பன, சீரொன்றிற்கே பாடங்களிருப்பின் அவற்றாஇக் கோலன் (:) அடையாளமிட்டுப் பிரித்துக் காட்டியிருக்கிறது.
  6. நூலகத்துச் சேர்க்கும் தகுதியற்ற மிகைச் செய்யுளை எச்செய்யுளின் பின் அது காணப்படுகிறதோ அச்செய்யுட்குரிய தொடரெண்ணோடு (a) முதலியவற்றைச் சேர்த்துக் அடிக்குறிப்பிலே கொடுக்கப்பட்டுள்ளது.
  7. செய்யுட் கிரமத்திலுள்ள வேறுபாடும் படலக் கிரமத்திலுள்ள வேறுபாடும் பிறவும் உரியவிடங்களில் அடிக்குறிப்பிற் காட்டப்பட்டுள்ளன.  பாட பேதங்களாகத் தரப்பட்டுள்ளனவற்றிற் பல பாடமாகவே கொள்ளத் தக்கனவாயிருக்கும்.  எழுத்துப் பிழைகளென்று எளிதிலரியக் கூடியவற்றையும் உண்மையான பாடங்களை அறுதியிடுவதற்கு உதவுமாதலின் பாடபேதமாகவே காட்டியிருக்கிறது.

உலக மகாகவிகளுள் ஒருவரெனப் போற்றத் தகும் கம்பநாடரது செய்யுள்களின் உண்மைப் பாடங்களை வரையறை செய்வதில் எத்துணை இடர்பாடுகள் உள்ளனவென்பதை இப்பதிப்பு விசதமாக்கவல்லது.

பல பிரதிகளை ஒப்பிட்டுப் பெற்ற பாடங்களுடன் பதிப்புகள் வெளிவர வேண்டுவது இன்றியமையாதது.  இங்ஙனமே ஒவ்வொரு பிரதேசத்திலும் வழங்கி வந்த பிரதிகளின் படியே வெளியிடும் பதிப்புகளும் அவசியமாக வேண்டற்பாலனவாம்.  இவ்விரண்டு வகைப் பதிப்புகளும் நூற்பாடங்களையும் பாடபேதங்களையும் பலமுறை ஆராய்ச்சி செய்து உண்மைப்பாடம் காணுதற்கு இன்றியமையாக் கருவிகளாகும்.”

 

ஆராய்ச்சிப் பதிப்பு
 

பல பிரதிகள் கிட்டும் கம்பராமாயணத்திற்குப் பாட வேறுபாடுகளுடன் கூடிய பதிப்புகள் வரவேண்டும் என்பது அவர்களுடைய கருத்து.  இவற்றின் அடிப்படையில் சீரான உண்மையான கம்பன் பதிப்புகள் கொண்டுவர இவை துணையாம் என்ற அளவிலேயே அவற்றைக் கொண்டார்.  ஆனால் கம்பனுக்கு இத்தகைய பதிப்புகளிலும் மேலாக ’ஆராய்ச்சிப் பதிப்பு’ உருவாக வேண்டும் என்றே அவர்கள் விரும்பிப் பலகாலும் சிந்தித்து வந்தனர்.  1950ஆம் ஆண்டு காரைக்குடிக் கம்பன் கழகத்திலே நிகழ்ந்த கம்பன் விழாவில் கம்பன் ஆராய்ச்சிப் பதிப்பின் அவசியத்தை வலியுறுத்திப் பேருரை நிகழ்த்தினார்.  இவ்வுரையில் ஆராய்ச்சிப் பதிப்புப் பணி எவ்வாறு உருவாக வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.  இவ்வுரை பேராசிரியரின் பதிப்புமுறைக் கோட்பாடுகளை விளக்குவதாதலின் அவர்கள் தந்துள்ள விளக்கத்தை அவருடைய வாக்கிலேயே காண்போம்.

 

”குறைபாடுகள் நீங்கிய ஆராய்ச்சிப் பதிப்பில், நாம் மேற்கொள்ள வேண்டும் முறைகளைக் குறித்து இனி நோக்குவோம்.

 

முதலாவது நாம் செய்யவேண்டுவது, அச்சுப் பதிப்புகள் அனைத்தையும், ஏட்டுப் பிரதிகளில் கிடைக்கக் கூடியனவற்றையும் ஒருங்கு தொகுத்தலாம்.  எட்டுப் (ஏட்டுப்) பிரதிகள் சேகரிப்பது பற்றி நாம் ஞாபகத்தில் வைக்க  வேண்டுவது ஒன்று உண்டு.  தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரதேசத்திற்கும் உரிய ஏடுகளைப் பெறுவதில் நாம் முயல வேண்டும்.  தமிழ்நாடு என்று சொல்வதில் திருவிதாங்கூர், இலங்கை, யாழ்ப்பாணம் முதலிய இடங்களைச் சேர்த்துத்தான் சொல்லுகிறேன்.  இங்ஙனம் பிரதேச வாரியாகச் சேர்க்கும் ஏடுகளில் காலத்தால் மிகப் பழமையானவை நமக்குப் பெரிதும் பயன்தருவன ஆகலாம்.  ஆகவே இங்கு கூறியதை ஞாபகத்தில் வைத்து ஏடுகள் சேகரிக்க நாம் முயலுதல் வேண்டும்.

 

அடுத்தபடியாக இந்த ஏடுகளைப் பொருத்தமான நியதிகளைக் கையாண்டு வகைப்படுத்தி வைத்தல் வேண்டும்.  ஓர் ஊரிலுள்ளாரை எடுத்துக் கொண்டால் இன்னஇன்ன மரபை, இன்னஇன்னக் குடும்பத்தை, இன்னஇன்ன நிலையைச் சார்ந்தவர்கள் என்று பிரித்து உணருகின்றோமல்லவா?  அதுபோல, இவ்வாறு வகைப்படுத்துதலில் மிக்க கவனம் செலுத்தல் வேண்டும்.  மேல் நாட்டுப் பதிவாளர்கள் மேற்கொண்டுள்ள முறை நமக்கு மிகவும் பயபடுவதாகும்.  ஷேக்ஸ்பியரை குறித்தும், சாஸரைக் குறித்தும் இவர்கள் மூல பாடத்தை நிர்ணயிப்பதற்குக் கையெழுத்துப் பிரதிகள் முதலியவற்றை வகைப்படுத்திப் பயன்படுத்தியுள்ள முறையே இங்கு நான் கருதுவது.  இரண்டொரு நூல்களை உதாரணமஅகக் குறிப்பிடலாம். ஷேக்ஸ்பியர் பதிப்பு பற்றி ஜான்சன் எழுதியுள்ள முகவுரை நன்கு கற்றுத் தெளிதற்குரியது.  இதுபோலவே கிரேக் (W.W.Greg) என்னும் ஆசிரியர் இயற்றியுள்ள  The Calculus of Varients என்ற நூலும் நமது முயற்சிக்குப் பெரிதும் பயன்படுவதாகும்.  நமது நாட்டிலும் மகாபாரதப் பதிப்புப் பற்றி ஆசிரியர் வி.எஸ்.ஸூக்தாங்கர் எழுதிய முன்னுரை நமக்கு ஒரு சிறந்த வழிகாட்டி.  சமீபத்தில் பர்த்ருஹரியின் சதகத் திரையம் சுமார் 300 பிரதிகளுக்குமேல் ஒப்பிட்டு நோக்கிப் பதிப்பிக்கப்பட்டுள்ளமை நம்மிற் பலரும் அறிந்திருக்கலாம்.  இப்பதிப்புமுறையும் ஒருவாறு நமக்குப் பயன்படக் கூடியதே.

 

பின்பு, ஏட்டுப் பாடங்கள் பரிசோதிக்கப்படுதல் வேண்டும்.  இவ்வாறு பரிசோதிப்பதற்கு ஏடுகளை வாசிப்பதில் தக்க பயிற்சியுடையவர்களே உரியர்.  பயிற்சியற்றவர்கள் ஏடு வாசிப்பதால் பெரும் பிழைகள் நேரிடுதல் கூடும்.  பயிற்சி என்ற அளவில் ஏடுகளைச் செய்யுளோசை, பொருள் முதலியவற்றைக் கவனியாதபடி வாசித்தல் மட்டும் அன்று.  அது போதுமானதல்ல.  செய்யுலிலக்கணம் முதலியவற்றிலும் தக்க பயிற்சியுடையவரே இதற்கு உதவக் கூடியவர்கள்.  இத்தகுதியுள்ள ஒரு சிலர் ஏடுகளை வைத்துக் கொண்டு பாடபேதங்களையெல்லாம் குறித்துத் தொகுத்தல் அவசியமாகும்.  இப்பாட பேதங்களும் இன்னஇன்ன பிரதிகளில் உள்ளன என்று பிரதிகளின் பெயர்களுடன் குறிப்பிடுதல் வேண்டும்.

 

பாட பேதங்கள் அனைத்தையும் இடைச் செருகல்கள் அனைத்தையும் நாம் ஆராய்ச்சிப் பதிப்பில் கொடுத்து விடுவது அவசியமானதாகும்.  நாம் மேற்கொள்ள வேண்டும் பாடங்கள் எவை என்பதைத் திட்டமாக வரையறுத்துணர்தல் வேண்டும்.  பிற பாடங்களையும் அவை பற்றிய விவரணங்களையும், ஆராய்ச்சிகளையும், ஆராய்ச்சிக்குறிப்பு என்ற தனிப்பகுதியில் சேர்த்துவிடுதல் வேண்டும்.  இப்போது அச்சில் வழங்கும் செய்யுள்கள் பிரதிகளின் உதவியாலும், பிறவகை ஆராய்ச்சியாலும் இடைச்செருகல் என உணரப்படுமாயின் அவற்றை உரிய இடங்களில் அடிக்குறிப்பாகக் கொடுத்துவிடுதல் நலம்.  அதிகப்படியாயுள்ள ஏனைச் செய்யுள்களும் பாட பேதங்களும் ஆராய்ச்சிக் குறிப்புகளும் ஒவ்வொரு காண்டத்திற்கும் இறுதியில் ஒரு சேரக் கொடுத்துவிடலாம்.  எனவே, நூற்பகுதி ஒன்று ஆராய்ச்சிக் குறிப்புப் பகுதி ஒன்று என இரண்டு பகுதிகள் இப்பதிப்பில் அமைக்கலாம் என்று கருதப்படுகிறது.

 

ஒரு விஷயம் நாம் மனங்கொள்ளுதற்குரியது.  கம்பன் மேற்கொண்டபாடம் ஒன்றேயாகத்தான் இருக்க வேண்டும்.  அவனது இராமாயண மூல பிரதியும் ஒன்றேயாகத்தான் இருத்தல் கூடும்.  அதனின்றும் பிறந்தனவே தமிழ் நாட்டிலுள்ள ஏனைப் பிரதிகள் அனைத்தும் ஆகவே அவனது மூல பாடத்தை நிச்சயிப்பதுதான் நமது பெருமுயற்சி.  இதை விடுத்துச் ‘சிறந்த’ பாடத்தைக் காணுவோம் என்று முயலுதல் அறிஞர்கள் சிலருக்கு உகந்ததாயினும், கம்பனது உண்மையான பாடத்தைக் காணுவதாகாது.  ஆனால் பல இடங்களில் சிறந்த பாடமும் மூலபாடமும் ஒன்றாகவே அமைதலும் கூடும்.  இங்கே கூறும் முயற்சியைக் கடைபோக முற்றுவித்தல் மிக அருமையாயிருப்பினும் அதுவே செய்யத்தக்கது.  அதுவே கம்பனை நமக்கு உள்ளபடி உணர்த்துவது.  இப்பணியைச் செய்து முடித்தற்கு அருமை என்று கருதி நாம் கைவிடுதல் தகாது.  வள்ளுவர்,
 
 அருமை யுடைத்தென்று அசாவாமை வேண்டும்
 பெருமை முயற்சி தரும்

என்றனர்.  அவரது பொன்மொழியே நமக்கு வழிகாட்டி அமைதல் வேண்டும்.

 

மேற்கூறியபடி தெரிந்த உண்மையான மூலபாடத்தை நூற்பகுதியில் அமைத்தலோடு இப்பகுதியிலுள்ள செய்யுள்களை ஓசை கெடாதபடி சந்திபிரித்தலும், பொருள் விளக்கத்திற்கு வேண்டும் குறியீடுகளை அமைத்தலும் இப்பதிப்பில் நாம் கையாள வேண்டிய முறைகளுள் சிலவாகும்.  மேலும் நூற்பகுதியின் அடிக்குறிப்பில் பட்சர்ந்தரமாகக் கையாளக் கூடிய பாடபேதங்களுள் முக்கியமானவற்றைக் கொடுத்துவிடுவதும் பயன்படுவதாகலாம். மிக இன்னியமையாததான குறிப்புரையும் அடிக்குறிப்பாகச் சேர்க்க எண்ணியுள்ளோம்.

 

ஒவ்வொரு காண்டத்தின் முன்பும் கம்பன் அமைத்துள்ளவாறு நயம் தோன்ற எழுதிய கதைச்சுருக்கமும், ஒவ்வொரு படலத்தின் முன்பும் அப்படலத்திற்குரிய கதைச் சுருக்கமும், படலப் பொருளின் விவரணமும் சேர்ப்பது வாசகர்களுக்குப் பயன்படலாம் என்றுதான் தோன்றுகிறது.  அன்றியும் ஒவ்வொரு படலத்திலும் உரிய இடங்களில் தலைப்புகள் கொடுத்து கதைத் தொடர்ச்சியை எளிதில் அமைத்துக் கொள்ளுமாறு செய்தலும் அவசியமானதாகும்.  இங்கு கூறிய அம்சங்களெல்லாம், பாடபேத ஆராய்ச்சி செய்யும் அறிஞர்களைக் கருதியல்ல.  பொது மக்களுக்கும் இப்பதிப்புச் சிறிதளவேனும் பயன்படுதல் வேண்டும் என்று கருதியே இவற்றை அமைக்கக் கருதியுள்ளோம்.

 

ஆராய்ச்சிக் குறிப்புப் பகுதிக்குப் பின்பு அனுபந்தப்பகுதி ஒன்று அமைக்கப்படும்.  அதில் அபிதான விளக்கம், செய்யுள் முதற்குறிப்பு முதலிய அகராதிகள் சேர்க்கப்படுவதாம்.  இறுதியாக வால்மீகி கூறியுள்ளபடி இராமாயணக்கதைச் சுருக்கமும் காணப்படும்.

 

இப்பதிப்பிற்குப் பூர்வாங்கமாக ஒரு விரிந்த முன்னுரை அமைக்க வேண்டுவது மிகவும் இன்றியமையாததாகும்.  அதில் இப்பதிப்பிற்கு உதவிய ஏட்டுப் பிரதிகளின் விவரங்கள் ஏட்டுப் பிரதிகளின் இனப்பாகுபாடுகள், ஏட்டுபிரதிகளின் வகைகளில் ஒன்றற்கொன்றுள்ள தொடர்பு, முற்பதிப்புகளின் விவரங்கள், கதை பேறுபாடுகளின் விவரங்கள, வரலாறுகள், மிகைச் செய்யுள்கள், சில பிரதிகளில் காணாமொழிந்த செய்யுள்கள், பாட ஆராய்ச்சியிலுள்ள இடையூறுகள், இடைச் செருகல்களின் விசாரணை, உத்தேசப் பாடங்கள் இவை முதலிய பொருள்கள் பற்றி விரிவாக ஆராய்ந்து எழுத எண்ணியுள்ளேன்.’’

 

மேலும் சொல்தொடர் முதலியவற்றின் அகராதி, மேற்கோளொடு கூடிய நூற்பொருள் அகராதி, கம்பன் அகராதி முதலிய அகராதிகளும் அமைக்கப் பெறவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

பதிப்புச் சிந்தனைகள்

இவ்வாறே பேராசிரியரால் பதிப்பிக்கப் பெற்ற பிற நூல்கள் சிலவற்றிலும் தாம் மேற்கொண்ட பதிப்பு நியமங்களைத் தெரிவித்திருக்கிறார்.  நூல்களின் தன்மை, பொருள் நிலைகளுக்கு ஏற்ற வண்ணம் பதிப்பு முறையிலும் சிற்சில மாறுபாடுகள் செய்து ஏற்றுக் கொள்வது அவசியமானதாகும்.

 

பேராசிரியர் தம் வாழ்வின் இறுதி நாளில் பதிப்பித்த நூல் ஸ்ரீ திவ்யப் பிரபந்தம்- முதலாயிரம் ஆகும்.  இதனை இலக்கண அறிவு இசையறிவு இல்லாதோரும் படிக்கும் வகையில் சந்தி பிரித்துப் பொருட்போக்கிற்கு இயைபுடைய குறியீடுகள் அமைத்துள்ளார்.  இந்த பதிப்பில் அவர்கள் கொண்டுள்ள நியமங்கள் பற்றித் தந்துள்ள விளக்கங்களும் அவர்களுடைய பதிப்புச் சிந்தனைகளை நமக்குத் தெரிவிக்கின்றன.

 

பேராசிரியர் அறிவுறுத்தும் பதிப்புமுறை
 

பல்வேறு இடங்களிலும் அவர்கள் எழுதியுள்ள பற்பல குறிப்புகளையும் ஒருங்கு வைத்து நோக்குவோமானால் பின்வருவன அவருடைய பதிப்பு முறைகளைப் புலப்படுத்தும்.

 

1) ஒரு நூலுக்குக் கிட்டும் பிரதிகள் எல்லாவற்றையும் தேடி ஒருங்கு தொகுத்தல்.
2) முன்பு அச்சில் வந்துள்ள நூலை மீண்டும் பதிப்பிப்பதாயின் அந்நூலுக்குரிய எல்லாப் பதிப்புகளையும் தொகுத்தல் வேண்டும்.  மேலும் அந்நூலுக்குக் கொட்டும் சுவடிகளையும் பயன்படுத்தல் வேண்டும்.
3) முதன்முதல் சுவடியிலிருந்து வெளியிடப் பெறும் புதிய நூலாய்இன் கிட்டும் ஏட்டுச் சுவடிகளைப் பரிசோதித்து ஒன்றற்கொன்றுள்ள இயைபுகளைக் கொண்டு இனவாரி பாகுபடுத்த வேண்டும்
4) பழமையான ஒரு சுவடியைப் பிரதி செய்து வைத்துக் கொண்டு ஏனைய சுவடிகளை அத்துடன் ஒப்பு நோக்கிப் பாட வேறுபாடுகளைக் குறித்தல் வேண்டும்.
5) அதன்பின் பாடலின் ஓசைக்கும் பொருளுக்கும் ஏற்புடைய பாடத்தைத் தேர்ந்த்உ மூல பாடத்தில் அமைத்து ஏனைவற்றைப் பாடவேறுபாடுகளாகத் தருதல் வேண்டும்.
6) பழையவுரையுடன் கூடிய நூலாயின் பாட நிச்சயதிற்கு அவ்வுரைப் பகுதியும் துணை செய்யும்.
7) எடுத்துக் கொண்ட நூல் தொடர்பான பிறநூல்களையும் ஆராய்ந்து பார்த்து நூற் பொருளைத் தெளிவு செய்து கொள்ள வேண்டும்.
8) சமயச் சார்பு பற்றிய நூலாயின்  அவ்வச் சமய வல்லுநர்களை அடுத்து விளங்காத பகுதிகளைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
9) நூற்பொருளுக்கு ஏற்புடைத்தான பல்வேறு அகராதிகளும் அமைத்தல் வேண்டும்.
10) நூல் முழுமைக்கும் சொல்லடைவு, பொருளடைவு செய்து கொடுத்தல் பல்வேறு ஆய்வுகளுக்கும் பயனுடையதாக அமையும்.

 

பதிப்புக்கடமை தவறலாகாது

 

இவ்வாறாகப் பல்வேறு வகையாலும் பரிசோதித்து வெளியிடப்பெறும் பதிப்பே பயனுடையதாகும்.  இங்ஙனமன்றித் தம் மனம் போனபடி பாடங்களைத் திருத்தியும், மாற்றியும் பதிப்பிடுபவர்களைப்  பதிப்புக் கடமை தவறியவர்கள் என்றே கொள்ள வேண்டும்.  இத்தகையாருடைய பதிப்புகள் தவறானவை, கண்டிக்கத் தக்கவை என்பது பேராசிரியரின் அவர்களின் கருத்து.

 

”சில பதிப்பாளர்கள் தங்கள் கடமையினின்றும் வழுவியிருப்பது வருந்தத் தக்கதாகும்.  அவசியமின்றியே பதிப்புகளில் அவர்கள் திருத்தங்கள் செய்துள்ளனர்.  இதனால் அவர்களுடைய பிரசுரங்கள் நம்பிக்கைக்கு இடமளிப்பதாக அமையவில்லை.  வடமொழிச் சொற்களை நீக்கிவிட்டு மொழியைத் தூய்மைப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு பல இடங்களில் ஆசிரியர் கையாண்டுள்ள சொற்களை மாற்றிப் பதிப்பித்துவிடுகிறார்கள்.  ’நூற்றொகை விளக்கம்’ ’பிரதாப முதலியார் சரித்திரம்’ ஆகிய நூல்கள் இவ்வாறு பதிப்பிக்கப்பட்டுள்ளன.  மனம் போனவாறு பதிப்பாளர்கள் நூல்களை மாற்றிப் பதிப்பித்திருப்பதை நாம் எத்துணை கண்டித்தாலும் தகும்”
(திராவிட. பக். 61-62)

 

சென்ற நூற்றாண்டில் சுகாத்தியர் என்னும் ஒரு பாதிரியார் திருக்குறளில் எதுகை மோனை சரியாகயில்லை என்று குறளைத் திருத்திப்ல் பதிப்பித்தார்.  அந்நாளில் பெருவித்துவான்களாக விளங்கிய திரிசிரபுரம் தியாகராசச் செட்டியார் மதுரைத் தமிழ்ச்சங்கம் நிறுவிய பாண்டித்துரைத்தேவர் முதலியோர் இதனைப் பெரிதும் கண்டித்தனர்.  திருக்குறள் அறத்துப்பாலுக்கு மணக்குடவர் உரையைப் பதிப்பித்த பதிப்பாசிரியர் ஒருவர் ”சிருஷ்டி, திதி, சங்காரம் என்னும் முத்தொழிலையும் செய்து” அந்நூலைப் பதிப்பித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.  நூலின் உண்மை நிலையைப் பாதுகாத்து உலகத்திற்குத் தரவேண்டுமேயன்றித் தாமாகப் புதியது படைத்தல்உம் இருந்தவற்றை மஅற்றுவதும் தகாத செயலாகும்.  பண்டை நூல் முதலாக எந்த நூலாயினும் ஓர் ஆசிரியரின் நூலை அவர் படைத்த வண்ணமே பதிப்பித்து வெளியிடுதலே பதிப்பாசிரியரின் தனிப் பெருங்கடமையாகும்.


 

இக்கட்டுரையை தட்டச்சு செய்தவர்: இராஜ.தியாகராஜன் (புதுச்சேரி மின்னிதழின் ஆசிரியர்)

 

You may also like

Leave a Comment