Home Historymalaysia புனித மர “பாலசுப்ரமணியர் கோயில்” [ஈ சூன்]

புனித மர “பாலசுப்ரமணியர் கோயில்” [ஈ சூன்]

by Dr.K.Subashini
0 comment

 

புனித மர “பாலசுப்ரமணியர் கோயில்”  [ஈ சூன்]

Yishun Bala Subramaniyar kovil

கிருஷ்ணன், சிங்கை.

ஒவ்வொரு கோயிலிலும் தலமரம் எனப்படும் ’தலவிருட்சம்’ இருப்பது நாம் அறிந்ததே. சிங்கப்பூர் போன்ற நாடுகளிலுள்ள ஆலயங்களில் அவ்வாறு தலவிருட்சங்கள் அமையாதிருப்பதற்கு  நகர அமைப்பும் ஒரு காரணமாகும்.

இடத்தின் விசேஷம், தீர்த்தத்தின் விசேஷம் இவற்றோடு ஏதேனும் ஓர் அற்புதம் நிகழ்ந்த இடம், அடியார்கள் சித்தி பெற்ற – இறையருள் பெற்ற இடம்; முனிவர், சித்தர், மகரிஷி, ஞானியர் போன்றோர் தவம் செய்த இடம் என்று சிறப்பு வாய்ந்த இடங்களில்தான் ஆகம சாஸ்திர முறையில் கட்டப்பட்ட கோயில்கள் எல்லாமே அமைந்துள்ளன.
முனிவர், சித்தர், மகரிஷி, ஞானியர் போன்றோர் மரங்களின் அடியில் அமர்ந்துதான் தவம் செய்தனர்; தியானம் செய்தனர்; சித்தி பெற்றனர்.

 

எந்தெந்த மரங்களின் அடியில் அமர்ந்து தவம் செய்தால் எந்தெந்த அளவுக்குப் பலன் சித்திக்கும் என்பதையும், எந்தெந்த மந்திரங்களை உச்சரிக்க வேண்டும், அங்கே எந்தெந்த தேவதைகளைத் தியானிக்க வேண்டும் என்பதையும் அறிந்து அதன்படி செய்தனர். மேற்குறித்த மிக நுட்பமான விஷயங்களை எல்லாம் நூல்களில் எழுதி வைத்தனர். எந்தெந்தத் தலத்தில் யார் யார் எந்தெந்த மரங்களின் கீழிருந்து நீண்ட காலம் தவம் அல்லது தியானம் செய்து சித்தி பெற்றார்களோ, அத்தலங்களில் உள்ள மரங்கள் எல்லாம் தல மரங்களாகப் போற்றப்பட்டு, வழிபாட்டுக்கு உரியதாயின. இப்படித்தான் ஒவ்வொரு தலத்துக்கு உரிய மரம் ’தலவிருட்சம்’ என்று பெயர் பெற்றது.

புத்தர் பிரான் ஞானம் பெற்ற இடம் போதி மரம். எனவே அரச மரம் ஞானத்தின் சொரூபம்.மரம் மனித குலத்துக்கு ஒரு வரம் என்பது மிகையன்று. மனிதன் தோன்றிய காலம் தொட்டு இன்றுவரை மரம் என்பது வாழ்வின் சகல பரிமாணங்களிலும் ஒன்றி நின்று பிரிக்க முடியாததாக இருக்கிறது.

வேத காலத்திலிருந்து தற்காலம் வரை தெய்வ வழிபாடு, மதம் தொடர்பான சடங்குகள்  பலவும் மரங்களோடு இணந்துள்ளன.

 

மரங்கள் மருத்துவ குணம் உள்ளவை. அம்மன் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது வேப்பமரம். தமிழ் நாட்டுக் கோவில்களில் பெரும்பாலும் ஸ்தல விருட்சமாக வழிபாட்டுக்குரியதாக இருப்பது மரம். “மரங்களில் நான் அசுவத்தமாக (அரச) இருக்கிறேன்” என்கிறான் கிருஷ்ணன் கீதையில். காலத்தால் முந்திய நூல் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல். தொல்காப்பியம் இலக்கணத்தை மட்டும் கூறாமல் தமிழர்களின் வாழ்வியலையும் கூறுகிறது. தொல்காப்பிய காலத்தில் மக்கள் நிலங்களைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு வகையாகப் பிரித்து நான்கு நிலங்களுக்கும் தனித்தனி இறைவனையும்  படைத்து வழிபட்டு வந்தனர்-

”மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.”

எனத் தொல்காப்பியத்தில் இடம்பெறும் செய்தி மூலம் குறிஞ்சி நிலத்திற்குரிய கடவுள் முருகன் என்பது  புலனாகிறது.

 

சிங்கப்பூர் தீவின் வடப் பகுதி வட்டாரமாக அமைந்திருக்கும் இடம் செம்பவாங். சிங்கப்பூர் புவியியல் ரீதியாக ஒரு முக்கியமான இடத்தில் அமைந்திருப்பதால்,பிரிட்டிஷார் தங்கள்  படை பலத்தைத் தூரக்கிழக்கில் நிலைப்படுத்தச் சிங்கப்பூரைத் தேர்ந்தெடுத்தார்கள்.ஆகையால் தங்களின் கப்பல் படையின் பெரும் பகுதியை இங்கு நிறுத்தி வைத்திருந்தார்கள். இவ்வட்டாரத்தின் தலைமை இடமாகச் சிங்கப்பூர் அமைந்திருந்தது. சிங்கப்பூரின் பாதுகாப்புக்கு
விமானப்படையும்,கப்பற்படையும் தேவைப்பட்டன. சாங்கி வட்டாரத்தில் விமானப்படையும், செம்பவாங்கில் கப்பற்படையும் அமைக்கப்பட்டன. அத்துடன் போர்க் கப்பலைப் பழுது பார்க்கும் மிகப் பெரிய பட்டறையும் இங்கு அமைந்திருந்தது. நூற்றுக்கணக்கான இந்தியர்களுடன் உள்ளூர் மக்கள் என சுமார் பத்தாயிரத்திற்கு மேல் பல்வேறு துறையில் பணி புரிந்தனர். அவர்களில் பெரும் பகுதியினர் இந்தியர்கள். அவர்களின் குடியிருப்புக்காகக் சுமார் நூறு மனைகள் [புளோக்] நேவல் பேஸ் எனப்படும் இவ்விடத்தில் அமைந்திருந்தது.

 

 

கனவில் தோன்றிய பாலசுப்ரமணியர் 
 

இப்பட்டறையில் பணிபுரிந்தவர்களில் திரு.பி.கருப்பையாவும் ஒருவர். 1962-ஆம் ஆண்டு பொங்கலுக்கு முதல் நாள் திரு.பி.கருப்பையா ஒரு கனவு கண்டார். கனவில் முருகன் ஒரு தங்க நிற இராஜநாகத்துடன் ஓர் இலந்தை மரத்தடியின் கீழ்க் காட்சி அளித்துள்ளார். அவ்விடம் நேவல் பேஸ் குடியிருப்புப் பகுதியின் அருகாமையில் அமைந்திருந்த புற்களும், புதர்களும் நிறைந்த இருந்த இடமாகும். 

1962 ம் ஆண்டு பொங்கல் அன்று அவர் கனவில் கண்ட இடத்தினைச் சென்று பார்த்திருக்கிறார். அங்கு அவர் கனவில் கண்ட இலந்தை மரத்தினைக் கண்டுள்ளார். ஆறு கிளைகொண்ட அந்த இலந்தை மரம் திரு.கருப்பையாவுக்கு ஆறு முகம் கொண்ட முருகனாகத் தோற்றமளித்தது. ஒரு பாம்புப் புற்றும், அருகில் அரச மரத்துடன் வேப்பமரம் ஒன்றும் இருக்கக் கண்டுள்ளார்.

அக்கம் பக்கமிருந்த நண்பர்கள், தெரிந்தவர்களிடம் தான் கண்ட கனவைப் பற்றிய விபரம் கூறினார். உடன் சில இளைஞர்களுடன் சென்று செடிகொடிகளுடன், புற்களும், புதர்களும் நிறைந்த இடத்தைச் சுத்தம் செய்து நிலத்தைச் சமன் செய்து விநாயகர், முருகன்,சிவன்,அம்பாள் படங்களையும், முருகனுக்குரிய ஒரு பெரிய வேல் ஒன்றையும் வைத்துப் பூஜை செய்தார். தொடர்ந்து இலந்தை மரத்தைச் சுற்றிச் சிறு குடில் அமைத்து விரிவாக்கப் பணியும் நடைபெறத் தொடங்கியது.

திரு.கருப்பையா நாள்தோறும் பணி முடிந்து மாலையில் விளக்கேற்றிப் பூஜைகள் செய்து வந்துள்ளார். இச்செய்தி அக்கம் பக்கம் உள்ள தமிழ் மக்களுக்குத் தெரியவரவே அவர்களும் வந்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

செம்பவாங் பகுதியில் (நேவல் பேஸ் உட்பட) சுற்றியுள்ள வட்டாரங்களில் இந்தியர்கள் குறிப்பாகத் தமிழ் பேசும் தமிழர்கள் அதிகமிருந்த காரணத்தாலும், சுற்று வட்டாரத்தில் கோயில் இல்லாத காரணத்தாலும் அங்கு ஓர் ஆலயம் அமைக்கலாம் என்ற எண்ணம் மேலோங்கவே சிறு குழு ஒன்றை அமைத்தார்கள்.

இலந்தை மரமிருந்த இடம் பிரிடிஷ் கப்பற்படைக்குச் சொந்தமான இடமானதால், முறைப்படி அத்தளத்தின் அதிகாரி கமாண்டரிடம் அனுமதி வேண்டினர். கமாண்டர் மறுப்பு எதுவும் கூறாது சுமார் இரண்டு ஏக்கர் நிலத்தை அளித்து அப்பகுதியில் வழிபாடு செய்ய அனுமதி  வழங்கினார்.

 

கோவில் தோற்றம் / பதிவு

1964-ல் சிங்கப்பூர்ச் சட்டப்படி இக்கோயில் பதிவு செய்யப்பட்டது. திரு.சரவணன் தலைமையில் ஒரு குழு அமைந்து, முருகனுக்கு ஒரு நிலையான கோயில் அமைப்பதற்காக ஒரு குழு அமைந்தது. கப்பற்படை அதிகாரிகள் கோவிலுக்கு வேண்டிய கட்டுமானப் பொருட்களைக் கொடுத்து உதவினர். அவர்கள் ஆங்கிலேயரானாலும் இப்பணிக்குப் பேருதவி புரிந்தனர். 1964 முதல் இக்கோயில் தொடர்ந்து வளர்ச்சி கண்டது.

 

ஆரம்ப கால (1965) ஆலயத் தோற்றம்

 

மக்களின் வரவு அதிகரித்தது;  அவர்களின் வேண்டுதல்கள் பலவும் நிறைவேறின. பக்தர்கள் அளித்த காணிக்கையும் பெருகவே மரப்பலகையாலான  கூரையுடன் இருந்த கோயில் சிமெண்ட,செங்கல் கொண்டு நிலையான கோயிலாக மாறியது. கோயில் திருப்பணிக்குத் தமிழ்நாட்டிலிருந்து ஸ்தபதிகள் வரவழைக்கப்பட்டார். கால்கோள் விழா திரு.P. கோவிந்தசாமி பிள்ளை அவர்களால் நடத்தப்பட்டது.

விநாயகர், முருகன், அம்மன் விக்ரஹங்களை திரு.S.L. பெருமாள் அவர்கள் 1969ம் ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து வரழைத்துத் தந்தார்.

1971 -ஆம் ஆண்டு சனவரி 31- ஆம் தேதி புனித மரம் ஸ்ரீ பாலசுப்ரமணியர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுமார் 20,000 பக்தர்கள் சிங்கப்பூரின் பல பகுதியிலிருந்தும், மலேசியாவிலிருந்தும் வந்து கண்டு களித்தனர்.
சிவபெருமான் அருவுருவில் லிங்கமாகவும்,காசி விசாலாட்சி, துர்க்கை, மாரியம்மன், தேவி கருமாரி அம்மை,பெரியாச்சி, பைரவர், முனீஸ்வரர், இடும்பன், நவக்கிரகங்கள் போன்ற விக்ரஹங்களும் இடம் பெற்றன. தனி சன்னிதியாக சுவாமி ஐயப்பனும் இருக்கிறார்.திரு. P.A. தாசா என்பரின் வேண்டுகோளுக்கிணங்க புத்தர் சிலையும் நிறுவப்பட்டது.

 

புதிய நிர்வாகம்

1976 ம் ஆண்டு திரு.E. நாராயணசாமி தலைமையில், ஆர்வமும், துடிப்பும் கொண்ட இளைஞர்கள் புதிய நிர்வாகத்தில் இணைந்தனர். கோயில் கட்டிடத்தில் மாற்றங்கள் செய்து, புதிய சிற்பங்களை உருவாகியதோடு பழைய சிற்பங்களைச் செம்மைப்படுத்தினர் கோயில் புதிய தோற்றத்தையும், புதிய பொலிவினைப் பெற்றது.இரண்டாவது கும்பாபிஷேகம் 1977 நவம்பர் மாதம் நடைபெற்றது.

 

ஆலயத்தின் இடைக்காலத் தோற்றம்        

 

 

கோயில் இடமாற்றம்.

பிரிட்டன் அரசு  பொருளாதார நெருக்கடியால் தூரக்கிழக்கில் தனது இராணுவப் படையைக் குறைக்க எண்ணியது. 1971 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31- நாள் தொடங்கிக் கட்டம் கட்டமாக படை மீட்பைத் தொடங்கியது. இதன் காரணமாக கோயில் நிலத்தோடு கப்பற்படைத்தளமும் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அன்று முதல் அரசாங்க வரியாகக் கோவிலுக்கு சிங்கப்பூர் வெள்ளி  ஒன்று வசூலிக்கப்பட்டது.

இதற்கிடையில் அரசு மேற்கொண்ட எம்.ஆர்.டி எனும் விரைவு இரயில் மேம்பாட்டுத் திட்டங்களுக்காவும் கோவில் வேறு இடம் மாற வேண்டிய நிலை உருவாகியது. நிலத்திற்கு நஷ்ட ஈடாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் ஒரு லட்சத்து எட்டாயிரம் வெள்ளியைக் கொடுத்தது.

நிர்வாகக் குழுவினர் மாற்று இடத்தைத் தேடித் தற்போது கோவில் அமைந்திருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்தனர். நிதி திரட்டும் முயற்சியில் கோயில் நிர்வாகம் ஈடுபட்டது. நான்கு லட்சத்து எட்டாயிரம் வெள்ளிக்கு நிலம் வாங்கப்பட்டது. 1996-ஆம் ஆண்டு சனவரி 26ம் நாள் பாலாலயப் பிரதிஷ்டை செய்யப்பட்டு, 1997 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் புதிய ஆலயக் கட்டுமானப் பணி தொடங்கியது.

 

பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், இராஜ கோபுரம் என முழு ஆலயமாக உருப்பெற்றது. இவ்வமைப்புகள் யாவும் பாண்டியர் கட்டிடக் கலை முறைப்படி 16 தூண்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 16 பேறுகளைக் குறிப்பதாக அமைந்துள்ளது. இந்தத் தூண்களுக்கு ‘சித்திரங்கண்ட ஸ்தம்பம்’ என்று பெயர். அதாவது சித்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட தூண்கள் என்பது பொருளாகும். மேலும் இக்கோவிலுக்கு கருங்கல்லில் பதினாறு அடி உயரம் கொண்ட ஆஞ்ஜனேயர் விக்ரஹம் சண்முகம் ஸ்தபதியாரின் ஊரான தேவகோட்டையில் உருவாக்கப்பட்டு இங்கு கொண்டு வந்து ஸ்தாபிக்கப்பட்டது. கோவில் வளாகத்திலேயே திருமண மண்டபமும் கட்டப்பட்டது.

 

 

1999ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாக்களில் முக்கியமாகப் பங்குனி உத்திரம் வெகு விமரிசையாக இங்கு  கொண்டாடப்படுகிறது.

 

பங்குனி உத்திர விழா

பங்குனி மாதத்தில் வரும் மிக முக்கிய நாள் பங்குனி உத்திர திருநாள். உத்திர நாளோடு பெளர்ணமியும் சேர்ந்து வரும் நன்னாள். பங்குனி உத்திர திருநாளைச் சைவர்களும், வைணவர்களும் தொன்று தொட்டுப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கொண்டாடி வந்துள்ளனர் என்பதற்கு இலக்கியச் சான்றுகள் உண்டு.முருகன் ஆலயங்களில் பால்காவடி எடுத்தல், படியேற்று விழா போன்ற விழாக்கள் நடைபெறுகின்றன.

 

 

முதன் முதலாக 1965-ல் பங்குனி உத்திரவிழா ஆரம்பிக்கப்பட்டது. சிவசாமி பண்டாரம்  ஆறு  இளைஞர்களுடன் காவடிதூக்கிப் பங்குனி உத்திர விழாவைத் துவக்கி வைத்தார். இன்று பல நூறு காவடிகளும்,பால் குடங்களும் முருகனின் பாதகமலங்களில் சமர்ப்பணமாகின்றன.பங்குனி உத்திரத் திருவிழாவுடன் இணைந்து இரத ஊர்வலமும் ஏற்பாடு செய்யப்பட்டது. 1966- ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் கொடுத்த சிறு வாகன வண்டியை 14 அடி இரதமாக மாற்றி அமைத்து முருகப் பெருமானின் படத்துடன் ஊர்வலமாக இழுத்துச் சென்றனர். அப்போது நேவல் பேஸ் குடியிருப்பு புளோக் வட்டாரத்தில் மட்டுமே இரத ஊர்வலம் நடைபெற்றது. இன்று காலமாற்றத்திற்கு ஏற்ப ஈ சூன்  குடியிருப்பு வீடமைப்பு வட்டாரப்பகுதியில் இரத ஊர்வலம் நடக்கிறது.

 

ஆலய முகவரி :

HOLY TREE SRI BALASUBRAMANIAR TEMPLE
10, Yishun Industrial Park A.
Singapore 786772.
Tel : 67561912 / 67585528

 

     
      
 

You may also like

Leave a Comment