நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 9

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு]

8. நாடு பிடித்து விளையாடுதல் விளையாட்டு

இவ்விளையாட்டு இருபாலராலும் விளையாடப்படுகின்ற விளையாட்டு. நான்கு நபர்கள் மட்டுமே விளையாடக்கூடிய விளையாட்டாகும்.

– விளையாடுபவர்கள் முதலில் நிற்குமிடங்கள்

¬- அடுத்த மூன்று கட்டங்களில் வரையப்பட்டிருக்கும் வரைபடங்கள் வெற்றி பெற்றவருக்குச் சொந்தமான இடங்கள்
படத்தில் வரைந்துகாட்டியபடி நான்கு சிறிய கட்டங்கள் கொண்ட சதுரமான கட்டத்தை தரையில் வரைந்து கொள்கின்றனர். நான்கு நபர்களில் ஒருவரை சாட்பூட்தீரீ என்கிற முறையின் மூலம் பட்டவராகத் தேர்ந்தெடுக்கின்றனர். பின் மற்ற மூவரும் நான்கு சிறிய கட்டங்களில் தங்கள் தங்களுக்குரிய கட்டம் இதுவெனத் தீர்மானித்துக் கொள்கின்றனர். அவரவர் கட்டங்களின் வெளிப்பக்கமாக உள்ள மூலையில் நின்று கொள்ள பட்டவராக இருப்பவர் ஒரு சிறிய நீளமான குச்சியினை எடுத்துக்கொண்டு சதுரமான கட்டத்திலிருந்து சிறிது தூரம் தள்ளி (10அடி தொலைவில்) கட்டத்திற்குத் தன்னுடைய முதுகைக் காட்டியவாறு நின்றுகொண்டு பின்புறமாக அக்குச்சியினைத் தூக்கிக் கட்டத்திற்குள் எறிகின்றார். அந்தக் குச்சியானது நான்கு கட்டங்களில் யாருடைய கட்டத்தில் விழுகின்றதோ அவர் உடனே அந்தக் குச்சியினை எடுத்து மற்றவர்கள் மேல் வீசுகிறார். வீசப்படுகின்ற குச்சி யார்மேல் படுகிறதோ அவருக்குரிய விளையாட்டு இடத்திலிருந்து குச்சியை வீசியவர் தன்னால் முடிந்தவரை இடத்தை அளந்து எடுத்துக்கொள்கின்றார்.

இதற்கு முன் பட்டவரால் குச்சி வீசப்பட்டபின் குச்சி இருக்கின்ற கட்டத்திற்குரியவர் அதனை எடுப்பதற்கு முன் மற்றவர்கள் தொலைவில் ஒடிவிடுகின்றனர். கட்டத்தில் விழுந்த குச்சியை எடுப்பவர். அவர்கள் நிற்கின்ற இடத்தை நோக்கிக் கட்டத்திலிருந்து மூன்று அடிமட்டும் தாண்டி மூன்றாவது அடியில் நின்று கொண்டு ஓடுபவர்கள் குச்சியை வீசுகிறார் குச்சியை அவர்கள் ஓடுகின்ற பொழுதும், ஒடிமுடிந்து நின்றபிறகும் வீசலாம்.
ஓடுகின்ற ஒருவரின் மீது குச்சி பட்டவுடன் குச்சியை வீசியவர் குச்சி பட்டவரின் கட்டத்தை நோக்கியவாறு தன் கட்டத்தின் இரண்டு கோடுகளின் மீது இரு கால்களையும் அகலமாகப் பரப்பிவைத்து நின்றுகொண்டு, வீசிய குச்சியை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டு அவருடைய கட்டத்தில் தனக்கு கை எட்டுகின்ற தூரம் வரையில் ஒரு அரைவட்டம் வரைகிறார். அரைவட்டத்திற்குட்பட்ட இடம் குச்சியினை வீசியவருக்குச் சொந்தமானதாகும். விளையாட்டு மீண்டும் தொடர்கின்றது. இப்பொழுது தன் இடத்தை இழந்தவர் பட்டவராகிறார். அவ்வாறின்றி குச்சியை ஒருவர் மற்றவர் மேல் வீசும்பொழுது ஒருவர் மீதும் குச்சி படாவிட்டால் மீண்டும் அவரே பட்டவராகிறார். இவ்வாறு நான்கு சிறிய கட்டங்களில் அதிகமான இடம் ஒருவருக்குச் சொந்தமாகும் வரையில் இவ்விளையாட்டு தொடர்கின்றது.

விளையாட்டில் ஒருவர் முதலில் தன் இடத்தை முழுவதுமாக இழந்துவிட்டால் அவர் விளையாட்டை விட்டு வெளியேறிவிட மீண்டும் மற்றவர்களால் விளையாட்டு தொடரப்படுகிறது.
சேகரித்த இடம் – வண்ணாம்பாறைப்பட்டி-14.6.94

பிற:-

இவ்விளையாட்டில் விரைவு மிக முக்கியமான ஒன்றாகும். குச்சியானது யாருடைய கட்டத்தில் விழுகிறதோ அதை அவர் வேகமாக எடுத்து மற்றவர்கள் ஓடுவதற்கு முன் வேகமாக அவர்கள் மேல் எறிந்து விட வேண்டும்.
முதலில் பட்டவராக இருக்கும் கம்பு எறிகின்றவர் தன்னுடைய கட்டத்திலேயே கம்பை எறிந்துவிட்டாலும் அவரே ஓடிவந்து கம்பை எடுத்து ஓடுகின்ற மற்றவர்களின்மேல் எறிகின்றார்.

இவ்விளையாட்டு பெரும்பாலும் சிறுவன்களாலேயே விளையாடப்படுகிறது. சிறுவன்களுக்குரிய விளையாட்டாகச் சிறுமியர்களால் கருதப்படுகின்றது. ஆனால் நகர்ப்பகுதிகளில் இது இருபாலராலும் சேர்ந்து விளையாடப்படுகிறது (கோ. புதூர்)

நான்கு சிறிய கட்டங்களுக்கும் இந்தியா-பாகிஸ்தான், ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளின் பெயர்கள் வைத்துக்கொள்ளப்படுகின்றன.

[பகுதி 10 க்குச் செல்க]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *