நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 6

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு]

5. தில்லி தில்லி பொம்மக்கா விளையாட்டு

இருபாலரும் விளையாடும் விளையாட்டு இது. வயது வரம்பு இல்லை. இதில் இரண்டுபேர் மட்டுமே விளையாடமுடியும். கிச்சு கிச்சு தாம்பாளம், திரித்திரி பம்பக்கா ஆகிய வேறுபெயர்களும் இவ்விளையாட்;டிற்கு உள்ளன.

அதிகமாக மணல் இருக்கின்ற இடங்களில் இதனை விளையாடமுடியும் முதலில் இருவர் எதிரெதிரே அமர்ந்து கொள்கின்றனர். தங்களுக்கு இடையில் உள்ள மணலை நீளமாகக் குவித்துக் கொள்கின்றனர். முதலில் ஒருவர் சிறிய கல், அல்லது செத்தை அல்லது குச்சி அல்லது சிறிய துணி போன்ற பொருளில் ஒன்றை எடுத்துக் கொண்டு அதனை ஆள்காட்டிவிரல் மற்றும் கட்டைவிரல் நுனிகளால் பிடித்துக்கொண்டு குவிக்கப்பட்ட மணலில் நுழைத்து கையை முன்னும், பின்னுமாகக் கொண்டு சென்று அப்பொருளை மணலில் மறைத்துவிடுகிறார். அவ்வாறு மறைக்கின்ற பொழுது

“தில்லி தில்லி பொம்மக்கா
தில்லாட்டம் பொம்மக்கா
அள்ளி அள்ளி வெச்சுக்கோ
அள்ளி அள்ளி வெச்சுக்கோ”

என்ற பாடலைப் பாடுகிறார். பொருளை மறைத்ததும் எதிரேயிருப்பவர் தன் இருகைவிரல்களையும் கோர்த்துக்கொண்டு அக்கைகளை மணலின் ஓரிடத்தில் வைக்கிறார். அவருடைய கைகளுக்குள் மறைக்கப்பட்ட பொருளிருந்தால் அவர் வென்றவராகிறார். ஆட்டத்தை அவர் விளையாடுகின்றார். அதற்கு அடையாளமாகத் தனக்குப் பக்கத்தில் சிறிய மண் குவியலை (கும்மலாக) வைத்துக் கொள்கிறார். அவ்வாறு கண்டுபிடிக்க முடியாவிட்டால் முதலில் பொருளை மறைத்து வைத்தவரே வென்றவராகிறார். அவரே மீண்டும் ஆடத்தொடங்குகிறார். தான் வென்றதற்கு அடையாளமாகத் தனக்கருகில் ஒரு மண்குவியலை வைத்துக் கொள்கிறார். ஆட்டம் தொடர்ந்து நடைபெற்று முதலில் பத்து மணல் குவியல்களைச் சேர்த்து வைப்பவரே விளையாட்டில் வென்றவராகிறார். எண்ணிக்கை பத்து என்பது விளையாட்டு ஆரம்பமாகின்றபொழுதே வெற்றி எல்லையாக நிர்ணயிக்கப்படுகிறது.

இச்சமயத்தில் விளையாடியவர்களுடன் வேடிக்கை பார்க்கின்ற மற்றவர்களும் சேர்ந்துகொள்கின்றனர்.
பிறகு தோற்றவரின் இருகைகளையும் அவரின் முதுகுப்பக்கமாக ஒன்றன் கீழ் ஒன்றாக வைக்கச் சொல்லி கைநிறைய (வெற்றிபெற்ற 10 மணல் குவியலைப் போட்டு அவரிடம் – ‘யானை முடிவேணுமா, பூனை முடிவேணுமா’ என்று கேட்கிறார். அவர் யானைமுடி என்று கூற தலையிலிருந்து பெரிய முடியினைப் பிடுங்கிக் கையிலுள்ள மணலினுள் வைக்கிறார் (பூனை முடி என்றால் சிறிய முடி) பிறகு அவருடைய கண்களை இறுக்கமாகத் தன் கைகளால் மூடி விளையாடிய இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கூட்டிச் செல்கிறார். அப்போது

அனைவரும் – எங்கபோற
தோற்றவர் – காசிக்குப்போறேன் என்று பாடிக்கொண்டே செல்கின்றனர். ஓரிடத்தில்
முடியுடன் கூடிய மணலைப் போட்டுவிட்டு மீண்டும்
அனைவரும் – எங்க போற
தோற்றவர் – வீட்டுக்குப் போறேன் –

என்று பாடிக் கொண்டே விளையாடிய இடத்திற்கு வந்துவிடுகின்றனர். வந்தபிறகு கண்களை முடிய கைகளை எடுத்து விட தோற்றவர் மணலையும், முடியையும் கண்டுபிடித்து எடுத்து வருகிறார். இப்பொழுது கண்டுபிடிக்க முடியாவிட்டால் வென்றவரை மணலைப் போட்ட இடத்திலிருந்து விளையாடிய இடம் வரை குதிரை சுமப்பது போன்று சுமந்து செல்கிறார். கண்டுபிடித்துவிட்டால் குதிரை சுமக்க வேண்டியதில்லை.
சேகரித்த இடம் – புளியங்குளம்- 12.5.93

 

பிற

1. இவ்விளையாட்டில் பயன்படுத்தப்படும் மற்றொரு பாடல்

திரித்திரி பம்பக்கா
தீத்தக்கா பம்பக்கா
பாத்தவங் கண்ணுல
பாம்பு கொத்த
எடுத்தவங் கையில
எறும்பு கடிக்க

2. சில இடங்களில் இவ்விளையாட்டில் யானைமுடி என்றால் தலைமுடியும். பூனைமுடி
என்றால் கண் இமையிலுள்ள முடியும் எடுக்கப்படுகிறது.

 

[பகுதி 7 க்குச் செல்க]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *