Home Games நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 5

நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 5

by Dr.K.Subashini
0 comment

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு]

4. கிளித்தட்டு விளையாட்டு

சிறுவர்கள் மட்டும் விளையாடும் விளையாட்டு இது. (8-15 வயது). எட்டு அல்லது பத்து நபர்கள் மட்டுமே இவ்விளையாட்டை விளையாடமுடியும். விளையாடுபவர்கள் உத்திபிரித்தல் முறையில் இரு அணிகளாகப் பிரிந்து கொள்கின்றனர். பின் தரையில் கீழ்க்காண்பது போல் விளையாட்டுக் கட்டம் வரைகின்றனர்.

உப்பு எடுக்குமிடம்

தட்டு

– பிடிக்கும் அணியினர் நிற்குமிடங்கள்
– ஓடும் அணியினர் களத்தில் இறங்கத் தயாராக நிற்குமிடம்

படத்தில் கண்டவாறு நீளவாக்கில் ஒரு சதுரக்கோடு கிழித்து அதன் நடுவில் மற்றொரு நீளமான கோட்டினால் இரண்டாகப் பிரிக்கின்றனர். பின்பு குறுக்காக மூன்று கோடுகள் கிழித்து இரண்டு நீளப்பிரிவில் ஒரு பிரிவிற்கு நான்கு கட்டங்களாக மொத்தம் எட்டுக் க ட்டங்களைக் கொண்ட கோடு கிழிக்கின்றனர். இந்தக் குறுக்குக் கோடுகள் ‘எலை’ – எனப்படுகின்றன. எட்டுக் கட்டங்களும் ‘தட்டு’ என்றழைக்கப்படுகின்றன.

எச்சில் ஓடு சுண்டுதல் முறையில் ஓடுகின்ற அணியினரும், பிடிக்கின்ற அணியினரும் யார்-யாரெனத் தீர்மானித்துக் கொள்கின்றனர். பிடிக்கும் அணியின் தலைவர் சுற்றுக்கோட்டில் நின்று கொண்டிருக்கிறார். ஓடும் அணியினர் கட்டத்தில் இறங்குவதற்குத் தயாராக நின்றவுடன் அவர் ‘இறங்கலாம்’ என்று கூறுகிறார். உடனே ஓடும் அணியினர் தனித்தனியாகவோ மொத்தமாகவோ விளையாட்டுக் கட்டத்தினுள் இறங்குகின்றனர். ஒவ்வொரு கட்டமாகத் தாண்டி எதிர்ப்பக்கம் சென்று அங்கிருந்து சிறிது மண்ணை எடுத்துக்கொண்டு மீண்டும் பழைய இடத்திற்கே வருகிறார்கள். இவ்வாறு போகின்றபோதும், வருகின்றபோதும் பிடிபடும் அணியினரிடம் அடிபடாமல் செல்கிறார். வெற்றிக்குக் குறிப்பிட்ட எண்ணை நிர்ணயித்துக் கொண்டு விளையாடுகின்றனர். வெற்றி எண்ணிக்கையை முதலில் அடையும் அணியினரே வென்றவர்களாவர்
சேகரித்த இடம் – கச்சைகட்டி-12.12.94

பிற

1. பிடிக்கும் அணியின் தலைவர் தன்னுடைய அணியினருக்கும் தெரிவிக்கும் வகையில் ‘கிளி இறங்குதுடோய்’ என்று சத்தமாக அறிவிக்கிறார். நால்வரில் ஒருவர் மண் எடுத்துக் கொண்டு வந்தாலும் அவ்வணியினரே வென்றவர் என்பதால் ஒருவர் மட்டும் மண் எடுத்துக்கொண்டு வருவதில் அனைவரும் கவனமாக இருக்கினறனர். கட்டத்தைத் தாண்டுகின்ற சமயத்தில் ஓடுகின்றவர்களைப் பிடிக்கின்றவர்கள் தொட்டு விட்டால் ‘கிளி அடி’ என்று கூறுகின்றனர். உடனே அடிபட்டவர் வெளியேறிவிடுகிறார். அவர் அவுட். விளையாட்டிற்கு இல்லை.

2. இவ்விளையாட்டில், விரைவும். சுதாரிப்பும் (கவனமும்) அதிகமாகத் தேவை. ஒருவர் வேகமாகச் சென்று எதிர்ப் பக்கத்தில் உப்பு எடுத்துக்கொண்டு வருவது எளிது. அதுவும் தன் அணியினர் அனைவருமாகக் கூட்டமாகக் கட்டத்தினுள் இறங்கும்போது பிடிக்கும் அணியினர் யாரைத் தொடுவது என்று நிற்கும்போதே ஒருவர் வேகமாகத் தாண்டிச் செல்வது எளிது. ஆகவேதான் ஓடும் அணியினர் கூட்டமாகக் கட்டத்தினுள் இறங்குகின்றனர். இவ்வாறு நடைபெறின் ஒரு ஆட்டம் வேகமாக முடிவடைந்து விடும். தனியொருவராக மாட்டிக்கொண்டால் உப்பு எடுப்பதும் கடினம். மீண்டும் பழைய இடத்திற்கு வருவதும் கடினம். ஆட்டம் முடிவதற்கு வெகுநேரமாகும். ஆகவேதான் விரைவாக விளையாடுகின்றவர்களே விளையாட்டிற்கு சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள்.
இரண்டாவது, கவனம் அதிகம் வேண்டும். ஒரு கட்டத்தினுள் ஒருவர் நிற்கும்போது அவர் நான்கு புறமும் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும். ஏனெனில் ஒரு கட்டத்தின் நான்கு கோடுகளிலும் நகர்ந்து வந்து அடிக்கும் வாய்ப்பு பிடிக்கும் அணியினருக்கு இருப்பதால் கவனமாக நிற்க வேண்டியிருக்கிறது.

3. பிடிக்கும் அணியினரில் தலைவர் சுற்றுக் கோட்டிலும், நடுவிலுள்ள நீளக்கோட்டிலும் மட்டுமே நகரமுடியும். மற்றவர்களால் குறுக்குக் கோட்டில் (எலை) மட்டுமே நகரமுடியும். ஓடும் அணியினர் கட்டத்திற்குள் மட்டுமே ஓடவேண்டும். வெளியே செல்லக்கூடாது.

4. ஓடும் அணியினரில் ஒருவர் மட்டுமே உப்பு எடுத்து வந்தாலும் போதுமானது என்றாலும் அனைவருமே ஆரம்பத்தில் விளையாட்டுக்கட்டத்தினுள் இறங்கியிருக்க வேண்டும். ஒருவர் மட்டும் இறங்காமலிருந்தால் உப்பு எடுத்துவர இயலாது. ஆதலால் ஆரம்பத்திலேயே பிடிக்கும் அணியினர் ஓடுகின்ற ஒருவரை இறங்கவிடாமல் செய்துவிடுகின்றனர். ஓடுகின்ற அணியினர் கட்டத்தினுள் இறங்குமிடத்தில் அக்கோட்டில் தலைவரே நிற்கிறார். மேலும் அங்கே அனைவரும் இறங்கமுடியாதாகையால் இறங்கும் போதே சிலர் அடிபட்டு விடுகின்றனர். ஆதலால் விளையாட்டின் துவக்கத்தில் இறங்கும்போது அதிக நேரமாகிறது. இச்சமயத்தில்தான் பிடிக்கும் அணியினர் பிடிப்பதில் கவனமாக இருக்கும்போது இருவரை அடிகொடுத்துவிட்டு ஒருவர் வேகமாக எதிர்ப்பக்கம் சென்று விடுகிறார்.

5. ஒருவர் ஒரு கட்டத்தினுள் நிற்கும்போது அவரை மற்ற நான்கு கோடுகளிலிருந்தும் கை நீட்டித் தொடலாம் என்பது விதியாக இருந்திருக்கிறது. இன்று இது பல இடங்களில் இல்லை. அனைவரும் விரைவில் அடிபட்டு விடுவார்கள் என்பதாலும் விளையாட்;டில் ஒரு அணியினராவது வெல்வது கடினம் என்பதாலும் இவ்விதி அதிகமாக மேற்கொள்ளப்படவில்லை.

6. இவ்விளையாட்டு மற்றொரு ஊரில் ‘கீரிவிரட்டுதல்’; என்கிற பெயருடன் விளையாடப்படுகிறது. (வண்ணாம்பாறைப்பட்டி) விளையாட்டுப் பெயர் மட்டும்தான் மாற்றம். மேலும் கிளிகளுக்குப் பதிலாகக் ‘கீரி’ என்கிற பெயர் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பிடிக்கும் அணியின் தலைவர் கீரி, கீரி, கீரி என்று கூறிக்கொண்டே சுற்றுக்கோட்டில் ஓடவேண்டும். நடுக்கோட்டில் அவரால் ஓடமுடியாது. குறுக்குக்கோட்டில் நிற்கும் பிடிக்கும் அணியினர் அதற்கருகிலிருக்கும் நடுக் கோட்டை மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்விளையாட்டில் அணிக்கு ஐந்து பேராக பத்துபேர் மட்டும் விளையாடமுடியும்;.

[பகுதி 6 க்குச் செல்க]

You may also like

Leave a Comment