Home Games நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 29

நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 29

by Dr.K.Subashini
0 comment

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு]

29. வளையல் விளையாட்டு

சிறுமிகளாலும் பருவமடைந்து வீட்டிலிருக்கும் பெண்களாலும் (வயது 5 – 15) விளையாடப்படும் விளையாட்டு. உடைந்துபோன வளையல் (கண்ணாடி) துண்டுகளை வைத்து விளையாடுகின்றனர்.

அ. பல்வேறு நிறங்களுடைய சுண்டுவிரல் நீளமுடைய கண்ணாடி வளையல் துண்டுகளை வலதுகை நிறைய வைத்துக்கொண்டு அவற்றை மெதுவாக உயரே தூக்கிப்போட்டு புறங்கையில் வாங்குகின்றனர். கீழே விழுந்த வளையல் துண்டுகளைத் தவிர கையிலிருக்கும் மீதித்துண்டுகளில் ஒரு வளையல் துண்டை மட்டும் கை விரலிடுக்கில் பற்றிக்கொண்டு மற்றவற்றைக் கீழே போட்டுவிடுகின்றனர். விரலிடுக்கில் பற்றிய வளையல் துண்டைக் கீழே விட்டுவிடாமல் தரையில் கிடக்கின்ற வளையல் துண்டுகளை ஆள்காட்டிவிரல் மற்றும் பெருவிரலால் பற்றி எடுத்து இடதுகையில் வைத்துக்கொள்கின்றனர். அவ்வாறு எடுக்கும்போது தரையில் கிடக்கும் வளையல் துண்டுகள் ஒன்றின்மேல் மற்றொன்று பட்டுவிடாமல் பார்த்துக் கொள்கின்றனர். அவ்வாறு பட்டுவிட்டால் விளையாட்டுகின்றவர் ஆட்டத்தைத் தொடராமல் மற்றவருக்குத் தந்துவிடுகிறார். இதுவரை அவர் சேகரித்த வளையல் துண்டுகள் அவருக்கே சொந்தமாகின்றன. மற்றவர் ஆட்டத்தைத் தொடருகிறார். வளையல் துண்டுகள் தீரும் வரை ஆட்டம் தொடருகிறது. இறுதியில் அதிகமாக வளையல் துண்டுகளை வைத்திருப்பவரே வென்றவராகிறார்.
சேகரித்த இடம்: கொடிக்குளம்

ஆ. இவ்விளையாட்டில் வளையல் துண்டுகள் சோடிகளாக இரட்டைப்படையில் அதாவது 30, 32, 34, 36, 38 என்று இரண்டிரண்டாக இருக்குமாறு பார்த்துக்கொள்கின்றனர். இரட்டைகளாக இருப்பது என்பது ஒரே நிறம் மற்றும் ஓரே மாதிரி (DESIGN) யில் தேர்ந்தெடுத்துக் கொள்வதாகும். வளையல் துண்டுகளைச் சேகரித்து வைப்பதற்கு தமது வலப்பக்கத்தில் தரையில் ஓரிடத்தையும் தேர்வு செய்து கொள்கின்றனர்.

வளையல் துண்டுகளனைத்தையும் ஓருவர் தன்னிரு கைகளிலும் வைத்து நன்றாகக் குலுக்கிப் பின் விளையாடும் நபர்களுக்கு மத்தியில் உள்ள இடத்தில் வளையல் துண்டுகள் பரவலாக விழுமாறு வீசுகிறார். அதனால் வளையல் துண்டுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறி விழுகின்றன. பிறகு ஒரு துண்டின் மீது ஆள் காட்டிவிரலை வைத்துத் தரையுடன் சேர்த்து அழுத்தி அதனை நகர்த்திக் கொண்டே அதனுடைய சோடியான மற்றொரு வளையல் துண்டுடன் சேர்த்துப் பிறகு இரண்டையும் சேர்த்து நகர்த்தித் தன்னுடைய வளையல் துண்டுகளி;ன் சேகரிப்பு இடம் வரைக் கொண்டு செல்கிறார். இவ்வாறு கொண்டு செல்லும்போது தரையில் கிடக்கும் மற்ற வளையல் துண்டுகளின் மீது கையோ நகர்த்திச் செல்லும் வளையல் துண்டோ படாமலும் கைவிரலினை வளையல் துண்டைவிட்டு எடுக்காமலும் கொண்டு செல்கிறார். தவறும் போது ஆட்டத்தை மற்றவர் இதே முறையில் தொடருகிறார். இவ்வாறு விளையாடி அதிக எண்ணிக்கையில் வளையல் துண்டுகளைச் சேகரித்தவரே வென்றவராகிறார்
சேகரித்த இடம் : தல்லாகுளம்

இ. வளையல் விளையாட்டின் முன்றாவது வடிவம் இது. இதுவும் ஒரே நிறமுடைய வளையல் துண்டுகளைச் சேகரிப்பது ஆகும். விளையாட்டு முறை மட்டும் ஆடவர் விளையாடும் ரம்மி விளையாட்டைப் போன்றது.

விளையாட்டு நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து வளையல் துண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு நபருக்கு ஒரே நிறமுடைய முன்று அல்லது ஆறு என்கிற கணக்கில் ஆறு நபர் என்றால் 6 x 3 = 18 (அ) 6 x 6 = 36 என்கிற எண்ணிக்கையில் மட்டும் வளையல் துண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு நபர் தன் கையில் அனைத்து வளையல் துண்டுகளையும் வைத்துக் குலுக்கி மற்றவர்கள் அறியாமல் அவர்களது கைகளில் எண்ணிக் கொடுக்கிறார். அவைருக்கும் குடுத்து முடித்த பிறகு ஒருவர் தன் கைகளில் உள்ளதில் ஒன்றைத் தரையில் வைக்க அடுத்தவர் அதை எடுத்துக்கொண்டு தன்னிடமிருந்து ஒன்றை வைக்க வேண்டும். இப்படியாக சுற்றிக்கொண்டே வந்து இறுதியில் ஒரே மாதிரியாக நிறமுடைய வளையல் துண்டுகளைச் சேர்த்தவர் தனது கையினை ஐ{ட் என்று கத்திக்கொண்டே தரையில் வைக்கிறார். மற்றவர்கள் வேகமாக அக்கையின் மேல் தங்கள் கைகளை வைக்கின்றனர். பின்னர் தரை அடியிலிருந்து தொடங்கி மேலுள்ள கைவரை 100, 90, 80 என்று எண்ணிக்கை எண்ணப்பட்டு ஒரு தனித்தாளில் அவரவர் பெயருக்குக் கீNழு எழுதப்படுகிறது. விளையாட்டு இப்படியே தொடர்ந்து இறுதியில் அதிக எண்ணிக்கை பெற்றவரே வென்றவராகிறார்.
சேகரித்த இடம்: டோக் பெருமாட்டி கல்லூரி

 

[பகுதி 30 க்குச் செல்க]

You may also like

Leave a Comment