Home Games நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 28

நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 28

by Dr.K.Subashini
0 comment

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு]

28. அக்கக்கா சிணுக்குரி விளையாட்டு

விளையாடுகின்ற அனைவரும் தரையில் வட்டமாக அமர்ந்து கொள்கின்றனர். முதலில் ஒருவர் தன் கால்களிரண்டையும் தரையில் உட்புறம் நேராக நீட்டிக்கொள்ள மற்றவர்கள் அந்தக்கால்களுக்கு மேல் ஒருவர் பின் ஒருவராக தங்களிருகால்களையும் நீட்டிக்கொள்கின்றனர். அனைவரும் கால்களை நீட்டிய பிறகு நீட்டப்பட்ட கால்களின் முடிவில் மையத்தில் ஒரு வட்டம் கிடைக்கிறது. அவ்வட்டம் கிணறு எனப்படுகிறது. பின்னர் விளையாட்டு ஆரம்பமாகின்றது. அப்போது பேசும் உரையாடல் கீழே தரப்படுகிறது. முதலாவது நபர் தலைக்குச் சிக்கெடுப்பது போன்று பாவனை செய்து தனக்கடுத்த இரண்டாவது நபரிடம் கேட்கிறார்.

முதலாவது நபர் : அக்கக்கா கொஞ்சம் சிணுக்குரி தாங்க
இரண்டாவது நபர் : எங்க வீட்டுக்காரர் திட்டுவாரு
முதலாவது நபர் : நான் உடனே தந்துர்றேன்
இரண்டாவது நபர் : இந்தாங்க சீக்கிரம் தந்துருங்க
இரண்டாவது நபர் : தலையைச் சிக்கெடுப்பதுபோல பாவனை செய்ய
மூன்றவாவது நபர் : அக்கக்கா சிணுக்குரி தாங்க
இரண்டாவது நபர் : எங்க அப்பா திட்டுவாங்க
மூன்றாவது நபர் : உங்க அப்பா வர்றதுகுள்ள தந்துவேன்
2-வது நபர் : சரி சீக்கிரம் தந்துருங்க

இவ்வாறு ஒவ்வொரு நபரும் மற்றவருக்கு சிணுக்குரியைத் தரும்போது எங்க மாமியா திட்டுவாங்க, எங்க அம்மா வைவாங்க என்று கூறிக்கொண்டே தந்துவிடுகிறார்கள். இறுதியாகச் சிணுக்குரியை வாங்கிச் சிக்கெடுக்கின்ற நபர் அதனைத் தங்கள் கால்களுக்கிடையி;ல் உள்ள பள்ளத்தில் போட்டு விடுகின்றார்.
கிணற்றில் சிணுக்குரியைப் போட்டவுடன் அடுத்ததாகச் சீப்பு எடுத்து தலையைச் சீவுகின்றனர். மேற்கூறியது போன்ற உரையாடலுடன் சீப்பும் அனைவருக்கும் தரப்பட்டு இறுதியில் கிணற்றுக்குள் போடப்படுகின்றது. இவ்வாறு பவுடர், பொட்டு, கண்மை, கொலுசு வளையல், ரிப்பன், என்று பெண்களால் உபயோகப்படுத்தப்படும் அனைத்துப் பொருள்களையும் உபயோகப்படுத்தி இறுதியாகக் கிணற்றுக்குள் போட்டுவிடுகின்றனர்.

இறுதியில் முதன்முதலில் சிணுக்குரி தந்தவர் அக்கக்கா சிணுக்குரி எங்க? என்று கேட்ட அவர் மற்றவரிடம் கேட்க வரிசையாகக் கேட்டு கடைசியில் கிணற்றுக்குள் போட்டவர் அய்யய்யோ கெணத்துக்குள்ள விழுந்துடுச்சே என்று கூறுகிறார். இவ்வாறு அனைத்துப்பொருட்களும் எங்கே? என்று கேட்கப்பட்டு கிணற்றுக்குள் விழுந்ததாகக் கூறியவுடன் அனைவரும் தங்கள் கைகளைத் தங்களுக்குப் பக்கவாட்டில் தரையில் ஊன்றி தங்கள் உடம்பை ஒரு பக்கமாக நகர்த்திப் பின் கைகளை முன்னுக்குக் கொண்டு வந்து தட்டுகின்றனர். அப்போது அக்கக்கா சிணுக்குரி என்று கூறுகின்றனர். உடம்பை நகர்த்துகின்ற போது கால்களைப் பிரிப்பது கிடையாது. முதலில் மெதுவாகத் தொடங்கிப் பின் வேகமாக அக்கக்கா சிணுக்குரி என்று பாடிக்கொண்டே சுற்றுகின்றனர். வேகமாகச்சுற்றும் போது அனைவருடைய கால்களும் பிரிந்துவிடுவதால் பின் கீழே கிடக்கின்ற சிணுக்குரி முதலிய பொருட்களை எடுத்துக்கொண்டு விளையாட்டை முடித்துக்கொள்கின்றனர்.
இவ்விளையாட்டில் சிறிய குச்சிகள் (விளக்கமாற்றின் குச்சிகள்) விளையாட்டுப்பொருளாக பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் குச்சிகளைக் கொண்டு தலையைச் சீவுவதுபோல பாவனை செய்யப்படுகின்றது.
சேகரித்த இடம்: நல்லூர், தல்லாகுளம்

[பகுதி 29 க்குச் செல்க]

You may also like

Leave a Comment