நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 12

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு]

11. பூப்பூ புளியம்பூ விளையாட்டு

சிறுமிகள் மட்டும் இரண்டிரண்டு பேராக விளையாடும் விளையாட்டு இது. சிறுமிகளிருவரும் எதிரெதிராக நின்று கொள்கின்றனர் (8-12 வயது)

1.
பூப்பூ புளியம்பூ
பொட்டில வச்ச தாழம்பூ
காத்துக்கு அணிஞ்ச பூ
கந்தசாமிய தொடுத்த பூ
ஆட்டு மாட்டு கொம்பெடுத்து
மேட்டு மேல சாத்தி
ஆழகான மாரித்தாயிக்கு பரிசம் போட்டு
மக்களு மக்களும் நாங்கதா (ன்)
மனுச மக்களும் நாங்கதா (ன்)
கப்பலேறிக் கூத்துபோட்ட
கவுண்ட மக்களும் நாங்கதா(ன்)
உற்றியோ சாட்ட உற்றியோ சாட்ட

இருவரும் கையைத் தட்டிக்கொண்டு பாடுவது இது. அவரவர் கைகளை ஒரு முறையும், இருவர் கைகளையும் சேர்த்து ஒருமுறையுமாகத் தட்டிக்கொண்டே இப்பாடலை பாடுகின்றனர். பாடலின் கடைசி வரியினைப் பாடும்போது மட்டும் கையிரண்டையும் இடுப்பில் வைத்துக்கொண்டு கால்களிரண்டையும் சேர்த்து வைத்துக்கொண்டு முன்னும், பின்னுமாகக் குதித்து ஆடுகின்றனர். இப்படியே குதிக்கும்போது அதிகநேரம் விடாமல் குதிப்பவரே வென்றவராகிறார்.சேகரித்த இடம் :- வலையபட்டி

2.

பூப்பூ புளியம்பூ
பொட்டில வச்ச தாழம்பூ
நாலுகரண்டி நல்லெண்ண
நாப்பத்தாறு தீப்பெட்டி
நீயும் நானும் ஒண்ணு
ஒம் புரு~ன் வாயில மண்ணு

இப்பாடலும் மேற்கூறிய விளையாட்டின்போது பாடப்படுவதுதான். கடைசி வரியின்போது ஆடும் ஆட்டம் கிடையாது.

சேகரித்த இடம் – தேன்கல்பட்டி-8.5.95

[பகுதி 13 க்குச் செல்க]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *