Home Games நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 11

நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 11

by Dr.K.Subashini
0 comment

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு]

10. காலாட்டுமணி கையாட்டுமணி விளையாட்டு

சிறுமிகள் மட்டுமே விளையாடக்கூடிய விளையாட்டு இது (8-12 வயது) சிறுமிகளனைவரும் இரண்டு அணிகளாக உத்திபிரித்தல் முறையில் பிரிந்து கொள்கிறார்கள். பின்னர் இரண்டு அணியினரும் ஒருவருக்கெதிர் ஒருவராக தங்கள் இருகால்களையும் நீட்டி அமர்ந்து கொள்கின்றனர். ஒருவருக்கெதிராக அமர்ந்திருப்பவர் அவருடன் சோடியாக உத்திபிடித்து வந்தவரே ஆவார்.

பிறகு இரண்டு அணித்தலைவர்களும் தங்கள் அணியினருக்கு வைக்கப்படும் ‘புனைப்பெயர்கள் எதைப்பற்றியது என்று கூறிக்கொள்கின்றனர். இவை நடிகைகள், பூக்கள், பழங்கள், சில பொருள்கள் போன்றவற்றின் பெயர்களாக இருக்கின்றன. இரண்டு அணித்தலைவர்களும் தங்கள் அணியினருக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புனைப்பெயரை மற்றவருக்குத் தெரியாமல் காதுக்குள் கூறுகின்றனர். பிறகு ஒரு அணித்தலைவர் மற்றொரு அணியினரிடம் சென்று அவர்களில் ஒருவரின் கண்ணைத் தன் இரு கைகளாலும் இறுக மூடிக்கொண்டு

குட்புவே வா காலாட்டு மணி கையாட்டுமணி
கட்டிக்குடுத்தா எட்டுமணி

என்று சொல்ல குட்பு என்கிற புனைப்பெயருடையவர் மெதுவாக எழுந்து சென்று கண் மூடப்பட்டவரை மெதுவாகக் கிள்ளிவிட்டு மீண்டும் வந்து அமர்கிறார். அவரும், அவரணியினரும் தலையைக் குனிந்து கொண்டு கால்களை ஆட்டிக் கொண்டிருக்கின்றனர். கண் மூடப்பட்ட பெண் தன்னைக் கிள்ளிய கு~;பு என்கிற புனைப்பெயருடையவரைச் சரியாக இவர்தான் என்று கூறிவிட இந்த அணியினர் ஒரு கேம் (எண்ணிக்கை) எடுத்ததாக அறிவிக்கப்படுகின்றனர். பிறகு வென்ற அணியின் தலைவர் எதிரணிக்குச் சென்று ஒருவரின் கண்ணை மூடி

ரோஜாவே வா காலாட்டு மணி கையாட்டு மணி
கட்டிக்குடுத்தா எட்டுமணி –

என்று சொல்ல ரோஜா என்கிற புனைப்பெயருடையவர் வந்து அவரை கிள்ளிவிட்டுச் செல்கிறார். பின் அனைவரும் தலையைக் குனிந்து கொண்டு காலை ஆட்ட, கண்மூடப்பட்டவர் ரோஜா – என்கிற புனைப்பெயருடையவரைச் சரியாகச் சொல்லவில்லை. ஆதலால் மீண்டும் முதலில் வெற்றி பெற்றவரே இரண்டு கேம்ப் (எண்ணிக்கை) பெற்றவராக அறிவிக்கப்பட்டனர். மீண்டும் இவ்வணித் தலைவரே தோற்ற அணியினரில் ஒருவரின் கண்ணை மூடுகிறார். இதற்கு முன்னர் ஒவ்வொரு ஆட்டத்திற்குப் பின்னும் அனைவருக்கும் தெரிந்த புனைப்பெயர் மாற்றப்படுகிறது. வேறு புதுப்பெயர் வைக்கப்படுகிறது. ஆட்டம் இவ்வாறு தொடர்கிறது.
விளையாட்டின் ஆரம்பத்திலேயே 10 கேம்ப் எடுக்கவேண்டும் என்று வெற்றி எல்லை தீர்மானிக்கப்பட்டது. முதலில் 10 கேம்ப் எடுப்பவர்களே வென்றவர்கள் ஆகிறார்கள்.

தண்டனை
தோல்வியடைந்தவர்கள் வெற்றி பெற்றவர்களைக் குறிப்பிட்ட தூரம் வரையில் குதிரை சுமப்பது போன்று சுமந்து செல்ல வேண்டும். விளையாடிய இடத்திலிருந்து குறிப்பிட்ட தூரம் வரை வெற்றி எல்லையான 10 (கேம்ப்) எண்ணிக்கை வரை அதாவது பத்துமுறை சுமந்து சென்று மீண்டும் சுமந்து வரவேண்டும். விளையாட்;டின் ஆரம்பத்தில் உத்திபிடித்து வந்தவர்களே இப்பொழுது ஒருவரையொருவர் சுமந்து செல்லவேண்டும்.
சேகரித்த இடம்- நல்லூர்- 10.9.04

பிற
1. இரண்டு அணியினரும் எதிரெதிராக அமரும்போது இருவருடைய கால்களும் உரசிக்;கொண்டிருக்க வேண்டும் என்பது ஒரு விதியாக இருந்திருக்கிறது. அவ்வாறிருந்தால் எதிரேயிருப்பவர் கிள்ளுவதற்காக எழுந்திருக்கும்போது அவருடைய கால் விலகுவதிலிருந்து கண்டுபிடிப்பது எளிதாகையால் இன்று வழக்கில் இல்லை

2. ஒரே சமயத்தில் ஒருவருக்கே ஒன்றுக்கு மேற்பட்ட புனைப்பெயர்களை வைக்கின்றனர். கு~;பு, கண்ணாடி, கண்ணாடிவளையல் என்கிற மூன்று புனைப்பெயர் ஒருவருக்குமட்டும் வைக்கப்பட்டது (வலையபட்டி)

3. கண்மூடப்பட்ட பெண்ணைக் கிள்ளுதல் மட்டுமன்றி அடித்தல், தலையில் குட்டுதல் போன்றவையும் காணப்படுகின்றன.

4. தலைவர் ஒருவரின் கண்ணை மூடி ரோசாப் பூவே ரோசாப் பூவே, மெல்ல வந்து கிள்ளிப்போ – என்று கூற அவர் வந்து கிள்ளிவிட்டுச் சென்று அமர்ந்தவுடன் அவ்வணியினர் காலாட்டு மணி கையாட்டு மணி என்று பாடுகின்றனர் (தல்லாகுளம்)

5. தரையில் கையின் ஒரு விரலால் மண்ணைத் தடவி நாக்கில் நக்கிப் பார்த்து – யாருக்கெதிரில் இருக்கும் மண் உப்புக்கரிக்கின்றதோ அவர்களே தன்னைக் கிள்ளியவர்கள் என்று கண்டுபிடிக்கின்றனர். அப்படியும் இது சரியாகக் கூறப்பட இல்லை (கொடிக்குளம்)

6. இவ்விளையாட்டில் குழப்பம் விளைவிக்கவும், ஒரு அணியினரே வெற்றிபெறவும் வேண்டுமென்றால் ஒரு அணிக்கு வேண்டப்பட்ட நபர் அல்லது ஒரு அணித்தலைவருக்கு வேண்டப்பட்டவர் எதிரணிக்கு உத்திப்பிரித்தலின் போதே அவர்களுக்குத் தெரியாமல் சென்றுவிடுகிறார். அவர் ஏதாவதொரு சைகையின் மூலமாகக் கிள்ளியவர் யாரெனக் காட்டிக்கொடுத்து விடுகிறார்.

7. தனக்குப் பிடிக்காதவரை அழுத்தமாகக் கொட்டுவதும், கிள்ளுவதும், அடிப்பதுமுண்டு. இதை வைத்தே சிலர் தன்னைக் கிள்ளியவரை எளிதில் கண்டுபிடித்துவிடுகின்றனர்.

8. ஒரு அணியின் தலைவியே தன் அணியினருக்குக் கொட்டியவரின் ஃ அடித்தவரின் ஃகிள்ளியவரின் பெணரை சைகைமூலமாகக் கூறுவதால் இரண்டு அணியினருக்கும் சண்டை ஏற்படுகிறது.

[பகுதி 12 க்குச் செல்க]

 

You may also like

Leave a Comment