நாட்டுப்புற விளையாட்டுக்கள் – பகுதி 10

[முனைவர்.பாப்பா ஆறுமுகம் –உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை, தமிழ்நாடு]

9. கொல கொலயா முந்திரிக்கா விளையாட்டு

சிறுவர், சிறுமியர் ஆகிய இருபாலரும் விளையாடுகின்ற விளையாட்டு இது. அனைவரும் தரையில் வட்டமாக அமர்ந்து கொள்ள ஒருவர் கையில் சிறிய துணி ஒன்றை வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பவர்களைச் சுற்றி வட்டத்திற்கு வெளியே ஓடுகின்றார். ஓடுகின்றபொழுது அவர் பாடப்பாட அவருக்குப் பதில் கூறுவதுபோன்று அமர்ந்திருப்பவர்கள் பாடுகின்றனர். அந்தப் பாடல் கீழே தரப்பட்டுள்ளது.

ஓடுபவர் – கொல கொலயா முந்திரிக்க்h
அமர்ந்திருப்பவர்கள் – கொலஞ்சுபோச்சு கத்திரிக்கா/(உன் வாயில பூசணிக்கா)
ஓடுபவர் – மாமரத்துல மாங்கா
அமர்ந்திருப்பவர்கள் – ஒன் வாயில ஊறுகா
ஓடுபவர் – ஓட்டு மேல ஏறுவேன்
அமர்ந்திருப்பவர்கள் – ஈட்டிய வச்சு குத்துவேன்
ஓடுபவர் – காலு வலிக்குது
அமர்ந்திருப்பவர்கள் – கட்டையக்கொண்டு சாத்திக்கோஃ(கட்டுலுல சாஞ்சுக்கோ)
ஓடுபவர் – மேலு வலிக்குது
அமர்ந்திருப்பவர்கள் – மெத்தையில படுத்துக்கோ
ஓடுபவர் – வடிச்ச கஞ்சி கொட்டிப்போச்சு
அமர்ந்திருப்பவர்கள் – வாரி வாரி நக்கிக்கோஃ(குடிச்சுக்கோ)
ஓடுபவர் – கப்பலோர் கப்பல்
அமர்ந்திருப்பவர்கள் – தூத்துக்குடி கப்பல்
ஓடுபவர் – உருளைக் கிழங்கு வேகுது
அமர்ந்திருப்பவர்கள் – உருண்டு உருண்டு போகுது
ஓடுபவர் – பச்சரிசியத் திம்பே(ன்)
அமர்ந்திருப்பவர்கள் – பல்ல ஒடப்பேன்

இவ்வாறு பாடியபடி ஓடிக்கொண்டே இருக்கின்ற நபர் ஓடும்பொழுது தன்னுடைய கையிலுள்ள துணியை அமர்ந்திருப்பவர்களில் ஒருவர் பின்னால் போட்டுவிட்டு போட்டதைக் கூறாமல் மேலும் பாடிக்கொண்டே ஓடுகிறார். பின்னால் துணி விழுந்த நபர் உடனே அதனை எடுத்துக் கொண்டு ஓடுபவரை விரட்டுகிறார். விரட்டிப்பிடித்துவிட்டால் மீண்டும் முதலில் ஓடியவரே மீண்டும் சுற்றி வருகிறார். அவ்வாறின்றி முதலில் ஒடியவர் பிடிபடாமல் எழுந்தவரின் காலியான இடத்தில் அமர்ந்துவிட்டால் விரட்டியவர் பாடிக்கொண்டே சுற்றிவருகிறார். இப்படியே விளையாட்டு தொடர்கிறது. மேலும் ஓடுகின்றவர் ஒருவரின் பின்னால் துணியைப் போட்டு ஒரு சுற்றுச் சுற்றி வரும் வரையிலும் அமர்ந்திருக்கும் நபர் கவனிக்காமலிருந்தால் ஓடுபவர் அந்தத் துணியை எடுத்து நன்றாக முறுக்கி அவருடைய முதுகில் அடிக்கிறார். மீண்டும் ஒரு சுற்று சுற்றும் வரையில் அடிக்கிறார். பின் அடித்தவர் அமர்ந்து கொள்ள அடிபட்டவர் பாடிக்கொண்டே சுற்றுகிறார்.
சேகரித்த இடம் – கச்சைகட்டி-12.12.94

பிற :

1. இவ்விளையாட்டிற்கு மற்றொடு பாடல் பாடப்படுகிறது

ஊசிவிழுந்திருச்சு – உத்து உத்து பாத்துக்க
பாசி விழுந்திருச்சு – பாத்து பாத்து பெறக்கிக்க
பச்சரிசியைத் திம்பேன் – பல்ல உடைப்பேன்
புழுங்கரிசியைத் திம்பேன் – புதுப்பல்ல உடைப்பேன்

இங்கு விளையாடும்போது துணியினால் ஒருவர் அடிபட்டுவிட்டால் அவர் வெளியேறிவிடவேன்டும். அவர் அவுட்டாகக் கருதப்படுகிறார். இவ்வாறு ஒவ்வொருவராக வெளியேறிவிட வட்டம் குறுகிக்கொண்டே செல்கிறது. இறுதியில் ஒருவர் மிஞ்சுகின்றபோது அவர் வெற்றி பெற்றவராகக் கருதப்படுகிறார் (ஊமச்சிகுளம்)

2. இப்பாடலின் முதலிரண்டு வரிகள் மற்றொரு இடத்தில் ஓடிப்பிடிக்கும் விளையாட்டில் பயன்படுத்தப்படுகின்றன. மேல் முதல்பாடலின் ‘காலுவலிக்குது’ – என்பதிலிருந்து ஆறுவரிகளும் பாடப்படுகின்றன.

முதலில் ஒரு வட்டம் போட்டுக் கொள்கின்றனர். ஓடுபவர்களனைவரும் வட்டத்திற்குள் நின்று கொள்ள பட்டுவருபவர் வட்டத்திற்காக போடப்பட்டிருக்கும் வட்டக் கோட்டின் மேல் ஓடிவருகிறார். வட்டக்கோட்டின் மேல் ஓடிக்கொண்டே வட்டத்திற்குள் ஓடுபவர்களைக் கைநீட்டித் தொடுகிறார். அப்பொழுது ஓடுபவர்களும் பட்டவரும் இந்தப் பாடலைப் பாடுகின்றனர்.

பட்டவர் – கால் வலிக்குது
ஓடுபவர்கள் – கட்டயக் கொண்டு சாத்திக்க
பட்டவர் – மேலு வலிக்குது
ஓடுபவர்கள் – மெத்தயில சாஞ்சுக்க
பட்டவர் – வடிச்ச தண்ணி கொட்டிப்போச்சு
ஓடுபவர்கள் – வாரி வாரி நக்கிக்க
பட்டவர் – டம்படக்கோ சிந்திப்போச்சு
ஓடுபவர்கள் – பெறக்கி பெறக்கி திண்டுக்க
பட்டவர் – ஊசியக் காணோம்
ஓடுபவர்கள் – உத்து உத்துப் பாத்துக்கோ
பட்டவர் – பாசியக் காணோம்
ஓடுபவர்கள் – பாத்துப் பாத்து பெறக்கிக்க

பாடலினிடையில் ஒருவர் தொடப்பட்டாலும் அவர் பட்டவராக வரும்போது பாட்டு விட்ட இடத்திலிருந்து தொடர்கிறது (வலையபட்டி).

[பகுதி 11 க்குச் செல்க]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *