Home Tamil Writers தமிழ்வாணன்

தமிழ்வாணன்

by Dr.K.Subashini
0 comment

துணிவைத் துணை கொண்ட தமிழ்வாணன்

கலைமாமணி விக்கிரமன்

 

 

நாற்பது, ஐம்பது ஏன் எழுபதுகளில்கூட பிள்ளைப் பிராயத்தினரை ஆவலுடன் படிக்கத் தூண்டிய பல்வேறு சிறுவர் இலக்கியம் படைத்தவர்களுள் தமிழ்வாணனை மறக்க முடியாது.

நூறு, ஆயிரம் பிரதிகள் விற்பனையாவதற்குப் பத்திரிகைகள் பெருமுயற்சி எடுத்துக்கொண்டபோது ஆயிரம், பதினாயிரம் என்று பரபரப்புடன் படிக்கத் தூண்டியவர் தமிழ்வாணன்.

தேவகோட்டையும், காரைக்குடியும், செட்டிநாட்டுப் பல ஊர்களும் தமிழ்நாட்டுக்குத் தந்த பல செல்வங்களுள் படைப்பிலக்கியச் செல்வங்கள் மறக்க முடியாதவை.

தேவகோட்டை தந்த எழுத்துச் செல்வங்களுள் மிக முக்கியமானவர் தமிழ்வாணன்.

1926ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி, லெ.லெட்சுமணன் செட்டியார் – பிச்சையம்மை ஆச்சி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

பெற்றோர் சூட்டிய பெயர் லெட்சுமணன்.

"தமிழ்வாணன்" என்ற பெயரைச் சூட்டியவர் தமிழ்த்தென்றல் திரு.வி.க. என்று கூறுவர்.

எழுத்தால் வாசகர்களைக் கவர்ந்த "கல்கி"க்குப் பிறகு, செய்தி இதழால் புதிய வாசகர்களைக் கண்டெடுத்த சி.பா.ஆதித்தனாருக்குப் பிறகு, பேச்சாற்றலால் அறிஞர் அண்ணா ஆட்சியைப் பிடித்ததுபோன்று இளைஞர்களைக் கவர்ந்தவர் தமிழ்வாணன்.

யுத்த காலத்திலும் சரி, அதற்குப் பிறகும் சரி  காலணா, அரையணா, ஓரணா என்ற விலையில் தம்பி – தங்கைகளுக்காக வார, மாத இதழ்கள் வெளிவரத்தொடங்கின.

அதன் ஆசிரியர்கள், "அண்ணன்", "மாமா" என்ற அடைமொழியுடன் வளரும் குருத்துகளிடையே படிக்கும் ஆவலைத் தூண்டினர்; வளர்த்தனர்.

"துணிவேத் துணை" என்ற கோஷத்தை முதன் முறையாக தாரக மந்திரமாக ஒலிக்க, தமிழ்வாணன் பத்திரிகையாளராகும் முயற்சியில் ஈடுபட்டார்.

திருச்சி "கிராம ஊழியன்" பத்திரிகையில் சேர்ந்தார்.

வல்லிக்கண்ணன் அந்தப் பத்திரிகையின் முதல் ஆசிரியர். தமிழ்வாணன் உதவி ஆசிரியர்.

முப்பது ரூபாய் சம்பளம்.

அங்குதான் பல எழுத்தாளர்கள் பழக்கமானார்கள்.

பிரபல எழுத்தாளர் நா.பிச்சமூர்த்தியைச் சந்தித்தார். அவருடைய எழுத்து நடை தமிழ்வாணனைக் கவர்ந்தது.

கிராம ஊழியன் அதிபர் கிருஷ்ணசாமி செட்டியாரிடம் பிச்சமூர்த்தி தமிழ்வாணனை அறிமுகப்படுத்தினார்.

"தம்பி! எப்போதும் உன் எழுத்து எளிமையாக இருக்க வேண்டும். பின்னலான வாக்கியங்களை அறவே விட்டுவிடு, நீ ஒரு நாள் பிரபல எழுத்தாளராகி விடுவாய்” என்று கூறினார்.

கிராம ஊழியன் ஆசிரியராய் சில மாதங்களில் பதவி உயர்வு பெற்றார். சென்னை வந்தார்.

எழுத்தாளர்களின் வேடந்தாங்கலாகவும், நல்ல நூல்கள் வெளியிடுவதற்கு வழிகாட்டியாக இருந்தவருமான சக்தி வை.கோவிந்தன் "சக்தி" என்ற மாத இதழை வெளியிட்டு வந்தார்.

அவருக்குப் புதிய, புதிய வெளியீடுகளை வெளியிடுவதில் கொள்ளை ஆசை.

அவர், "அணில்" என்ற பெயரில் குழந்தைகளுக்காகப் புதிய வார இதழ் தொடங்கினார். அதற்குத் தமிழ்வாணன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். 

என்ன துணிவு!

தன் சொந்த வாழ்க்கைப் படிப்பினையால் உழைப்பே துணை என்ற மந்திரச் சொல்லை அறிமுகப்படுத்தினார்.

தன் அறிவாற்றலால் "அணில்" பரபரப்புடன் விற்குமாறு செய்தார். "அணில் அண்ணன்" அப்போதுதான் தோன்றினான்.

வானதி திருநாவுக்கரசு, தமிழ்வாணனின் உயிர் நண்பர் – பள்ளித் தோழர்.

இருவரும் கூட்டாகச் சேர்ந்து "ஜில்,ஜில்" பதிப்பகம் என்ற பெயரில் குழந்தைகளுக்காக நூல்கள் வெளியீட்டகம் ஒன்றைத் தொடங்கினர்.

அந்தப் பதிப்பகத்தின் முதல் வெளியீடு "சிரிக்காதே!".

அடுத்து ஜவாஹர்லால் நேருவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.

தமிழ்வாணனால் எழுதப்பட்டு, நான்கணா விலையில் வெளியிடப்பட்டது. வெற்றிகரமாக விற்பனையானது.

தொடர்ந்து "அல்வாத் துண்டு", "சுட்டுத் தள்ளு", "பயமா இருக்கே" என்ற பல தலைப்புகளில் நூல்கள் வெளிவந்தன.

தமிழ்வாணன் நூல்களின் அமோக விற்பனையைப் பார்த்து – பல பதிப்புகள் அச்சிடப்படுவதைக் கண்ட குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை, தமிழ்வாணனைச் சந்தித்தார்.

தமிழ்வாணனுடைய பேச்சு, உற்சாகம், திட்டங்கள், சுறுசுறுப்பு எல்லாம் எஸ்.ஏ.பி.க்கு மிகவும் பிடித்திருந்தது.

குமுதம் நிறுவனத்திலிருந்து "கல்கண்டு" என்ற புதிய வார இதழ் தொடங்க எஸ்.ஏ.பி. முடிவு செய்தார்.

தமிழ்வாணனுடைய முழுப் பொறுப்பில் கல்கண்டு வெளிவரத் தொடங்கியது.

முயற்சி, ஊக்கம், உழைப்பு எல்லாமே தமிழ்வாணன் பிரபலமாவதற்குக் காரணமாயின.

கல்கண்டால் தமிழ்வாணன் புகழ், திறமை பிரபலமானதா அல்லது தமிழ்வாணனால் கல்கண்டு வார இதழைப் பல்லாயிரம் வாசகர்கள் படித்து அவர் ஆற்றலைப் புகழ்ந்தார்களா? என்பதை எளிதில் தீர்மானிக்க முடியாது.

கேள்வி – பதில் பகுதி அவருடைய ஆற்றலுக்குச் சாட்சியாக விளங்கியது.

கேள்வி – பதில் பகுதியில் தான் ஒரு சகலகலா வல்லவர் என்பதை நிலைநாட்டினார்.

சிரிக்க – சிந்திக்க – செயலாற்ற தமிழ்வாணன் பதில்களைப் படித்தார்கள்.

தலைசிறந்த அரசியல் கேள்வி – பதில்களில் நடுநிலையான பதில்கள் இருக்கும்.

"மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜக்ட்ஸ்" என்று பிரபல ஆன்மிகச் சொற்பொழிவாளர் மேதை கிரிதாரி பிரசாத் புகழ்ந்து கூறியதோடன்றி, "என்னைப் பற்றித் தமிழகம் அன்று அறியவில்லை. அவர்தான் அறிமுகம் செய்தார்” என்று கூறியதைவிட, தமிழ்வாணன் எழுத்து வலிமைக்கு வேறு சான்று வேண்டுமா?

தமிழ்வாணன் இருக்குமிடத்தில் கலகலப்புக்குக் குறைவிருக்காது. தமிழ்வாணன் பேச்சைக் கேட்கவே கூட்டம் கூடும். அவர் பேசிய பிறகு, சபையோர் கலகலவென்று சிரித்துக் களைத்த பிறகு யார் பேசினாலும் எடுபடாது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் பேச்சைக் கேட்பதற்காகவே ஏராளமானவர்கள் கூடுவார்கள். ஆனால், பட்டுக்கோட்டையில் நடைபெற்ற விழா ஒன்றில் சொற்பொழிவாற்றிவிட்டு, வேறு அவசரப் பணி நிமித்தமாகச் செல்ல வேண்டியவர், தமிழ்வாணன் பேசத் தொடங்கியவுடன் அவர் பேச்சை இரசிப்பதற்காக அடிகளார் புறப்படாமல் இருந்துவிட்டார்.

"குற்றாலத்து அருவி போன்ற பேச்சு! அற்புதமான எடுத்துக்காட்டுகள்! நகைச்சுவை! ஒரு மணி நேரத்துக்கு மேலாகப் பேசினார். பொதுமக்களிடையே குறிப்பாக இளைஞர் சமூகத்தினரிடையே நல்ல வரவேற்பு. தமிழ்வாணனுடைய அற்புதமான பேச்சுக்குப் பிறகு நாம் பேச விரும்பவில்லை. சுருக்கமாகக் கூறிப் பேச்சை முடித்துக் கொண்டேன்”

என்று அடிகளார் கூறியதில் மிகை இல்லை.

குழந்தைகள் பத்திரிகை, மாணவர்களுக்குப் பத்திரிகை, இளைஞர்களுக்குத் தனி இதழ் என்று கூறினால் "நமக்குப் பயன்படாது" என்று பலர் நினைக்கலாம்.

ஆனால், தமிழ்வாணன் எழுத்தைச் சிறுவர் முதல் முதியோர் வரை விரும்பிப் படிப்பார்கள்.

வள்ளலாரிடம் மிகுந்த பக்தி கொண்ட தமிழ்வாணன், அருள்செல்வர் நா.மகாலிங்கத்தின் அன்புக்குப் பாத்திரமானவர்.

கைரேகை பார்ப்பதிலும் திறமை மிகுந்தவர் தமிழ்வாணன்.

"பல ஆண்டுகளுக்கு முன்பு எனது கைரேகைப் பார்த்துக் கூறியது அப்படியே பலித்தது” என்று நா.மகாலிங்கம் புகழ்ந்து குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்வாணன் வித்தியாசமான எழுத்தாளர். எழுத்தால் வாசகர்களைக் கவர்ந்தார் என்றால், எழுத்தில் ஆழம் இருக்கும். தகவல் இருக்கும். 

மருத்துவம் முதல் அரசியல் வரை வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு "நறுக் நறுக்"கென்று விடை கிடைக்கும்.

தொப்பி, கறுப்புக் கண்ணாடி என்றெல்லாம் நூதன முறையில் வாசகர்கள் கவனத்தைத் துணிவுடன் ஈர்த்ததால் அவருக்குக் கர்வி என்ற பெயரும் உண்டு. அவர் எதிர்ப்பிலேயே வளர்ந்தவர்.

கோணி மூட்டைகளில் வரும் வாசகர் கேள்விகளுக்கு மளமளவென்று பதில் எழுதுவது சாதாரணச் செயலன்று.

வேகமாக எழுதுவார்; ஒரே இரவில் முழு நாவலை எழுதும் ஆற்றல் படைத்தவர்.

கல்கண்டு வாரப் பதிப்பில் பல ஆண்டுகளுக்கும் மேல் ஆசிரியராக இருந்த, அரசியல் தலைவர் முதல், சாதாரண வாசகர் வரை அனைவரது அன்பையும் பெற்ற தமிழ்வாணன், 1971ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி மாரடைப்பால், தமிழ் வாசகர் உலகை விட்டு மறைந்தார்.

அவரை என்றும் நினைக்கும் வகையில், அவர் ஆசிரியராக இருந்த "கல்கண்டை" அவரது புதல்வர்களுள் ஒருவரான லேனா தமிழ்வாணனும், அவர் தொடங்கிய மணிமேகலைப் பிரசுரத்தை லேனாவின் வழிகாட்டுதலுடன்  இரவி தமிழ்வாணனும் கட்டிக்காத்து வளர்த்து வருகிறார்கள்.

நன்றி:- தினமணி

 

You may also like

Leave a Comment