Home Printing&Publishing தணிகைமணியும் தமிழ்த்தாத்தாவும்

தணிகைமணியும் தமிழ்த்தாத்தாவும்

by Dr.K.Subashini
0 comment

தணிகைமணியும் தமிழ்த்தாத்தாவும்
பேராசிரியர் வே.இரா.மாதவன்

 

தமிழுக்காகவே வாழ்ந்து, தமிழ்ப்பணியையே முதற்பணியாகக் கொண்டு அறுபது ஆண்டுகளுக்குமேல் தமிழ்நூற்பதிப்புகளைச் செய்து வெளியிட்டு மறைந்த பெரும்புலவர்கள் இருவர். ஒருவர் ‘தமிழ்த்தாத்தா’  டாக்டர். உ. வே. சாமிநாத ஐயரவர்கள். மற்றொருவர் ’தணிகைமணி’ வ. சு. செங்கல்வராயப் பிள்ளையவர்கள்.

 

பழந்தமிழ் நூல்களை ஆராய்ந்து வெளியிட்டு, தமிழ்க் கல்வியின் எல்லையை விரிவாக்கி, பழந்தமிழ் இலக்கியங்களையும் காப்பியங்களையும் சமய இலக்கியங்களையும் காலத்தின் அழிவினின்றும் மீட்டுத்தந்து, தமிழ் ஆய்வுத்துறையில் வழிகாட்டிகளாய் அமைந்தவர்கள் இவர்கள்.

 

தமிழ் இலக்கியப் பதிப்புத்துறையில் இவர்கள் பாடுபட்டு உருவாக்கித் தந்த நூல்களின் பயனாக இன்று புதுப்புது ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இன்று உலம் முழுவதும் தமிழ் மொழியைப் பற்றிப்பேசி, தமிழ்மொழியை ஆராய்ந்து வருகிறது என்றால், தமிழ் மாநாடுகள் நடபெறுகின்றன என்றால் அதற்குப் பெருங்காரணமாக அமைபவர்கள் இத்தகைய பெருமக்களேயாவர். இவர்களின் வாழ்வும் பணியும் அனைவரும் அறியத்தக்கன.

 

சென்ற நூற்றாண்டின் இறுதியில் தோன்றி இந்த நூற்றாண்டில் மறைந்த இவ்விருவரும் சோழ நாட்டில் கல்வி பெற்று, தொண்டைநாட்டில் சாண்றோராய்த் திகழ்ந்தவர்கள்.’தொண்டைநாடு சாண்றோருடைத்து’ என்னும் முது மொழிக்கேற்ப இவர்களின் இறுதிகாலம் வரை இவர் தம் இலக்கியப் பெரும்பணிகள் தொண்டை நாட்டிலேயே நிகழ்ந்தது நம் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகும்.

 

ஆண்டுதோறும் தணிகைமணியவர்கள் தமிழ்த்தாத்தா டாக்டர். உ. வே. சாமிநாதையர்அவர்களைப் பார்த்து உரையாடி மகிழ்வது வழக்கம் 1942 ஆம் ஆண்டில் ஒரு நாள் இருவரும் ஐயரவர்கள் இல்லத்தில் உரையாடிக் கொண்டிருந்தனர். அச்சமயம் ஐயரவர்கள் நோயுற்றிருந்தார். தமிழ்நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் உயர்ந்திருந்த நிலையில் ஏற்பட்ட உடற்தளர்ச்சியால் மெலிவுற்றிருந்த அவர், இனி நிகழ வேண்டிய பணிகள் குறித்து அளவளாவிக் கொண்டிருந்தார். திடீரென்று தணிகைமணியின் கைகளைப் பிடித்துத், “திருப்புகழ் ஆராய்ச்சி செய்த கைகளாயிற்றே இவை” என்றுகூறிக் கண்களில் ஒற்றிக் கொண்டார். தமிழ்த்தாத்தாவின் செயலால் அதிர்ச்சியுற்ற தணிகைமணி உடனே ஐயரவர்களுடைய கால்களைப் பிடித்துக் கொண்டு சங்கத்தமிழ் நூல் ஏடுகளை எல்லாம் தேடித் தேடி ஊர் ஊராகச் சுற்றிய கால்களல்வோ இவை என்று கூறி வணங்கினார்.

 

”தாய்மைப்பேற்றின் சிறப்பை மற்றொரு தாயானவளே உணரமுடியும்” என்பது போல, நூல் இயற்றுவதிலும், நூல்பதிப்பிலும் கடுமையாக உழைத்தோரே மற்றவரின் உழைப்பை உணர்ந்து பாராட்ட இயலும் என்பதற்கு மேற்கண்ட நிகழ்ச்சியே சான்றாகும். அத்துடன் தணிகைமணி தம்மைவிட இளையவராயினும் அவர் செய்த அரும் செயல்களைப் பாராட்டி மகிழும் தமிழ்த்தாத்தாவின் பெருந்தன்மையும், சிறப்பும் குறிப்பிடத் தக்கதாகும்.
                      
இவ்விருவர் மேற்கொண்ட அளவில்லா இலக்கிய ஆய்வுக்காகவும், இலக்கிய நூல் பதிப்புப் பணிக்காகவும் பல்கலைக்கழகங்களே முன்வந்து ’டாக்டர்’ பட்டம் அளித்து, அதனால் அப்பட்டத்திற்கே சிறப்புச் செய்தன என்பதே உண்மை.

 

திருத்தணிமுருகன் மீது கொண்ட பேரன்பே தம்பணிக்குப் பெருந்துணையாகுமென உரைத்த பிள்ளையவர்களுக்கு தணிகைமணி என்னும் பட்டமே இவரை இனங் காட்டுவதாயிற்று.

 

தமிழ்த் தொன்மைச் சிறப்புக்குச் சான்றான நூல்களைத் தேடித் தொகுத்து வழங்கிய ஐயரவர்கள் முதுமையிலும் தமிழுக்காக அரும்பாடுபட்டதை அறிந்த அனைவரும் அவரைத் தமிழ்த்தாத்தா என்றழைப்பதில் மகிழ்ந்தனர்.

 

சீரிய தமிழ்த் தொண்டாற்றிய தணிகைமணியும் தமிழ்த்தாத்தாவும் இவ்வுலகில் எண்பதாண்டுகளுக்கு மேலும் வாழ்ந்தனர். தமிழ்த்தாத்தா தம்முடைய எண்பத்தெட்டாம் வயதில் (28.04.1942) þயற்கை எய்தினார். தணிகைமையவர்கள் தம்முடைய எண்பத்தொன்பதாம் வயதில் (26.08.1971) காலமானார். இவர்கள் என்பதாண்டுகளுக்கு மேல் எவரும் வியக்கும் வண்ணம் உடல் வலிமையுடன் உள வலிமையும் பெற்றிருந்ததற்கு இவர்தம் ”அயராத உழைப்பே காரணம்”  என்பதை இவர்களிருவரும் அடிக்கடி கூறுவர்.

 

மிகச் சாதாரண குடும்பத்திலே பிறந்து, படிப்படியாக முன்னேறி, அயராத உழைப்பினால் அனைவரையும் கவர்ந்து, தம் அறிவுத் திறமையால் பல நூல்களை உருவாக்கிப் பிற்கால மக்களுக்கு அவற்றை விட்டுச் சென்ற இவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் நமக்குச் சிறந்த எடுத்துக் காட்டுகளாகும். இவர் தம் நூல்களும் நினைவுகளும் இன்றும் தமிழ் உள்ளங்களை நினைந்துருகச் செய்கின்றன.

 

தமிழ் மொழியைப் பற்றியும் தமிழரைப் பற்றியும் நுணுகி ஆராய விழையும் தமிழ் ஆர்வலர் அனைவருக்கும் இவ்விருவரும் ஆல்போல் நிழல்தந்து, ஆராய்ச்சிக் களஞ்சியங்களாக விளங்கி வருகின்றனர்.    

You may also like

Leave a Comment