Home Tamilmanigal சிந்நயச் செட்டியார்

சிந்நயச் செட்டியார்

by Dr.K.Subashini
0 comment

"வித்வத் சிகாமணி" சிந்நயச் செட்டியார்

அரு.சோமசுந்தரன்

 

 

"பெரும்புலவர்" என்று 19ஆம் நூற்றாண்டில் புலவர்களால் புகழப்பெற்றவர் "வித்வத் சிகாமணி" சிந்நயச் செட்டியார். இவர் தேவகோட்டையில் "மேலவீடு" எனப்படும் செல்வக் குடும்பத்தில், மாற்றூர்க்கோயில் – உறையூர் பிரிவில், 1855ஆம் ஆண்டு இலக்குமணன் செட்டியார் – லெட்சுமி ஆச்சிக்கு நான்காம் பிள்ளையாகப் பிறந்தார். இவரது அண்ணன்மார் மூன்று பேர். பிறந்த தேதியும் மாதமும் அறியக் கிடைக்கவில்லை. 

 

சிந்நயச் செட்டியார் ஓர் ஆசுகவி. இவரது குரு, தேவகோட்டை "வன்றொண்டர்" நாராயணன் செட்டியார். இந்த வன்றொண்டர், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர். சிந்நயச் செட்டியாரின் மானசீக குரு யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர்.

 

  • "சிலேடைப் புலி" பிச்சுவையர்
  • காரைக்குடி சிவபூசகர் சொக்கலிங்கம்
  • இராமநாதபுரம் இரா.இராகவையங்கார்

ஆகியோர் சிந்நயச் செட்டியாரின் மாணவர்கள். 

 

இவருடைய உருவத் தோற்றம் யாரையும் ஈர்க்கக் கூடியது. நல்ல சிவப்பு நிறம், விபூதி, உருத்ராட்சம் அணிந்து பஞ்சகச்ச மேலாடையில் சிவப்பழமாய்க் காட்சி அளிப்பார். கையில் எப்பொழுதும் ஓலைச்சுவடி இருக்கும். இரத்தினக் கம்பளத்தில் வீற்றிருப்பார். 

 

இராமநாதபுரம் அரசர் பாஸ்கர சேதுபதியின் உறவினர் பாண்டித்துரைத் தேவர் மிகச் சிறந்த புலவர். அவர், சிந்நயச் செட்டியாரின் இனிய தோழர். இருவரும் அடிக்கடி சந்தித்து அளவளாவுவர். பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் நிறுவ முயன்றபோது, அவருக்கு உறுதுணையாக நின்றவர் சிந்நயச் செட்டியார்.

அவர் எழுதியுள்ள நூல்கள்,

  • மதுரை மீனாட்சி அம்மைப்பதிகம்
  • நகரத்தார் வரலாறு
  • திருவொற்றியூர்ப் புராணம்
  • குன்றக்குடி மயின்மலைப் பிள்ளைத் தமிழ்
  • தேவகோட்டை சிலம்பைப் பதிற்றுப்பத்து அந்தாதி
  • இராமேசுரம் தேவைத் திரிபு அந்தாதி
  • திருவண்ணாமலை அருணைச் சிலேடை வெண்பா
  • காசி யமக அந்தாதி
  • வெளிமுத்திப் புராணம்
  • கும்பாபிஷேக மகிமை
  • ஐம்பெரும் காப்பிய ஒப்பீடு
  • கண்டனூர் மீனாட்சி அம்மை பாடல்

முதலியன. 

 

இரா.இராகவையங்கார் தன் மாணவர் மு.இராகவையங்காருக்குப் பாடம் கற்பித்தபொழுது, சிந்நயச் செட்டியாரின் சில நூல்களையும் கற்பித்தது குறிப்பிடத்தக்கது. 

 

சிந்நயச் செட்டியாரின் மனைவி பெயர் மீனாட்சி. இவர்களுக்குப் பிள்ளை இல்லாததால், இருவரும் காசிக்குச் சென்று ஓராண்டு பிள்ளைவரம் வேண்டி, தினந்தோறும் கங்கையில் நீராடி, காசி விசுவநாதரைத் தொழுது வந்தனர். குழந்தை பிறக்க வேண்டி ஒரு வாழை மரக்கன்று நட்டனர். அது வளர்ந்து, குலைதள்ளியபொழுது இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்குக் "காசி" என்று பெயரிட்டனர். பின்னாளில் தேவகோட்டைக்குத் திரும்பி, தமிழ்ப் பணியிலும், ஆன்மிகப் பணியிலும் ஈடுபட்டார். குழந்தை காசி, மூன்றாண்டுகளுக்குப் பின் காலமானது விதி வசமே! 

 

பிறகு, சிந்நயச் செட்டியார் திருவாரூரில் சில காலம் வசித்தார். பெருமளவு தேவகோட்டையில்தான் வாழ்ந்தார். அக்காலத்தில், அங்கு யாராவது புலவர்கள் சொற்பொழிவாற்ற வந்தால், முதலில் சிந்நயச் செட்டியாரைச் சந்தித்து அவரது ஆசிபெற்றே செல்வது வழக்கம்.  சிந்நயச் செட்டியார் மிகவும் அவையடக்கம் உள்ளவர். அவர், தனது மயின்மலைப் பிள்ளைத் தமிழ் அவையடக்கப் பாடலில், "கடையடுத்த மடமையினேன்" என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்கிறார். 

நகைச்சுவையாகப் பேசுவதிலும் வல்லவர்; வாக்குப் பலிதமும் உடையவர். ஒருமுறை வெளிமுத்தி என்ற ஊருக்குச் சென்றபொழுது, அவ்வூர் மக்கள் சிலர் அவரைச் சூழ்ந்துகொண்டு, "நீங்கள் ஆசுகவியானால் இங்குள்ள ஆண் பனையைப் பழுக்க வைக்க வேண்டும்" என்றார்கள். உடனே அவர், "பங்குக்கு மூன்று பழம்தர வேண்டும் பனந்துண்டமே" என்று கவிபாடினார்.

 

என்ன அதிசயம்! ஆண் பனை பெண் பனையாக மாறிப் பூத்துக் காய்த்துப் பனம்பழம் மூன்று கீழே விழுந்த காட்சியைக் கண்டு ஊரே வியந்தது.  திருவாரூரில் இவர் வாழ்ந்த காலத்தில் பதஞ்சலியும், வியாக்கிரபாதரும் பூஜை செய்த இடமான "வினமல்" என்ற திருத்தலத்தில் உள்ள சிவன் கோயிலைப் புதுப்பித்தார்.  சிந்நயச் செட்டியார் தேவகோட்டையில் இருந்தபொழுது ஒரு நாள் காலையில் சிவபூஜை முடித்துக் கம்பளத்தில் அமர்ந்தபொழுது, ஜெர்மானியர் இருவர் வந்து, தமிழில் பேசி, அவரிடம் இருந்து சில சுவடிகளைப் பெற்றுச் சென்றுள்ளனர். சில தினங்களில் அவர்கள், இவருக்கு ஜெர்மனியில் இருந்து சுவடிக்கான பணம் அனுப்பி உள்ளனர். சிந்நயச் செட்டியார் காலமாகுமுன் அப்பணம் வந்திருக்கிறது.  இவரை, நகரத்தார் குருபீடமாகிய கோவிலூர் ஆதீனம் போற்றி இருக்கிறது. அக்காலத்தில் கோவிலூர் ஆதீனத்துக்குச் சொத்துகள் வாங்கியபொழுது சிந்நயச் செட்டியார் பெயரில் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.  மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உ.வே.சாமிநாதய்யர் போன்றோர் இவரைப் பாராட்டியுள்ளனர். "வன்றொண்டர்" நாராயணன் செட்டியார், "தன் மாணவர்களில் ஆசுகவி பாடக்கூடியவர் சிந்நயச் செட்டியார் ஒருவரே" என்று தன்னிடம் கூறியதாக உ.வே.சா., தமது சரித்திரத்தில் கூறியிருக்கிறார். 

 

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருப்பணி செய்த "வயிநாகரம்" குடும்பத்தைச் சேர்ந்த இராமநாதன் செட்டியார், தமது "கவிதை மலர்" என்ற நூலில், சிந்நயச் செட்டியாரைப் போற்றிப் பாடல் எழுதியுள்ளார். 

 

ஒருமுறை அன்பர்கள் சிலர் அவரைப் பார்த்து, "செல்வத்தின் முன் கல்வி நிற்குமா?" என்று கேட்டனர்.

 

அதற்கு அவர், "செல்வம் எடைக்கு நிற்கும்; கல்வி உறைக்கு நிற்கும்" என்றார்.

 

தன் பெயருக்கு அவர் விளக்கம் கூறினாராம் இப்படி, "சித்துடனே நயம் சேர்ந்தால் –  சிந்நயம்" ஆகும். 

 

தேவகோட்டை அருகில் "இறகுசேரி", "கண்டதேவி" என்ற இரு கிராமங்கள் உள்ளன. அவற்றை அவர், இராமாயணத்துடன் ஒப்பிட்டுக் கூறுவார். "ஜடாயுவின் இறகு வீழ்ந்த இடம் இறகுசேரி", அனுமன், "கண்டேன் தேவியை என்று கூறிய இடம் கண்டதேவி. ஆகவே தேவகோட்டை என்பது தேவிகோட்டை ஆகும்" என்பார். 

 

இவருடைய சாதனைகளில் மேலும் இரண்டு உள்ளன.

 

அவை: திருவாமாத்தூர் வண்ணச்சரபம் ஸ்ரீதண்டபாணி சுவாமிகளை தேவகோட்டைக்கு அழைத்து வந்து, தேவகோட்டைச் சிவன் கோயிலில் உள்ள ஸ்ரீதண்டபாணி பேரில் பிள்ளைத்தமிழ் பாடச்செய்தார். வேலங்குடிக் கல்வெட்டில் இருந்து நகரத்தார் வரலாற்றை முதலில் எழுதி வெளியிட்டார். 

 

சிந்நயச் செட்டியார் 1900ஆம் ஆண்டு காலமானார். இவர் இறந்த மாதமும் தேதியும் கூட அறியக்கிடைக்கவில்லை என்பது பெரும் குறையே! என்றாலும் அவரது தமிழ்த்தொண்டின் புகழ் என்றென்றும் குறையாது என்பது உண்மையிலும் உண்மை!

 

நன்றி:- தினமணி

 

You may also like

Leave a Comment