இந்த சிங்கை ஆலயங்கள் தொகுப்பில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து கட்டுரைகளையும் சிங்கை திரு.கிருஷ்ணன் தொகுத்து வழங்கியுள்ளார்.  இந்தக் கட்டுரைகளையும் சில படங்களையும் திரு. மணியம் (சிங்கை) அனுப்பி உதவியுள்ளார். இந்தக் கட்டுரைகளின் எழுத்துத் திருத்தங்களை மேற்பார்வை செய்து உதவியுள்ளார் திரு.தேவராஜன், சென்னை அவர்கள்.


 

தென்கிழக்காசியாவில் இந்து சமயத்தின் பரவல் – சிவநெறி உலகம் முழுவதும்         

கிருஷ்ணன், சிங்கை

 

சிவலிங்க வழிபாடு உலக முழுவதும் வியாபித்திருந்ததை ஆராய்ச்சியாளர்களும், புதைபொருள் ஆய்வாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். மொஞ்சதரோ, ஹரப்பா பகுதிகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சிவன், அம்பாள் சிலைகள் 3250 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை எனக் கூறப்படுகிறது. இவ்விடங்களில் அகழ்வாய்வின் போது முத்திரை ஒன்றில் சிந்துவெளி நாகரிக காலத்தைச் சேர்ந்த சிவன், பசுபதி என்பதை உணர்த்தும் உருவத்துடன் சிவலிங்கங்களும் கிடைத்துள்ளன. புதைபொருள் ஆராய்ச்சியாளரான சர்.ஜான் மார்ஷல், சிந்து சமவெளி ஆராய்ச்சி  முடிவுகளில் மிக முக்கியமானது சைவத்தின் தொன்மையே. இன்றளவும் வழக்கில் உள்ள சமயங்களுக்குள் மிகப்பழமையானதாக சைவம் விளங்குகிறது என்கிறார்

 

இன்றளவும் வழக்கில் உள்ள மிகப் பழைமையான சமயமாக அது விளங்குகிறது!" என்கிறார். "வட அமெரிக்காவின் கொலராடோ  ஆற்றுப்பள்ளத்தாக்கில் அகழ்வாராய்ச்சி செய்த போதும் சிவலிங்கங்கள் கிடைத்துள்ளன.அங்குள்ள குன்றின் மேல் சிவன் கோயில் ஒன்று இடம் பெற்றிருந்தது.அது சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்" என்று இலங்கை அறிஞர்  ந.சி.கந்தையா,தனது "சிவன்" என்னும் நூலில் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்.மேலும் இவர்,ஆப்பிரிக்கா – ஐரோப்பா, மத்தியக் கிழக்கு, துரக் கிழக்கு, தென் கிழக்கு, தென் அமெரிக்கா, மெக்சிகோ, பசிபிக் தீவுகள் போன்ற பகுதிகளிலும் சிவ வழிபாடு இருந்ததைக் குறிப்பிடுகிறார்.

 

மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள "க்ரீட்" தீவின் நரகங்களுள் ஒன்றின் பெயர் "சிவன்". அங்கும் அகழ்வாராய்ச்சியின் போது ஏராளமான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளன.சிரியாவின் பழைய நகரங்களில் ஒன்றின் பெயர் "சிவாஸ்" ஹிட்டைட் நாட்டில் கிடைத்த புதைபொருட்களில் ஒன்றான பழங்கால  நாணயத்தில், சிங்க வாகனத்தில் வீற்றிருக்கும் ஆணின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன். இது நம் அம்மையப்பனை நினைவூட்டுகிறது.  லிபியா பாலைவனத்தில் உள்ள பாலைவனச் சோலை ஒன்றின் பெயர் "சிவன்" இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தைச் சார்ந்த புதைபொருள் அகழ்வாராய்ச்சியாளர்கள் பல சிவலிங்கங்களைக் கண்டுபிடித்துள்ளார்கள். ஜெர்மனியிலும் லிங்க வழிபாடு தழைத்திருந்தது. "ஷிண்டேயிசம்" எனும் ஜப்பானிய மத்ததில் லிங்க வழிபாடு முதன்மையானதாகக் கருதப்படுகிறது. ஆகவே, அங்கு பொது இடங்களில் லிங்கங்கள் வைத்து வழிபடப் பெற்றன.இவற்றின் மூலம் சிவநெறியும், இந்து சமயமும் உலகம் முழுவதும் பரவியிருந்ததை நாம் அறியலாம்

 

தென்கிழக்காசியாவில் இந்து சமயம்

கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்து சமயம் பல நூற்றாண்டுகளுக்கு முன் பரவியது.

சிவ வழிபாடு மிகவும் தொன்மை வாய்ந்தது என்பது தொல்பொருள் ஆராய்ச்சிகள் வாயிலாக மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய வெளி நாகரீகங்களில் காணலாம். இந்தியா நாட்டிற்கு அப்பாலும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்திருக்கிறது.

 
தமிழர் தம் பண்பாட்டில் மதம் இயற்கையாக இடம் பெற்றுள்ளது.நாகரித்தின் தொடக்க காலங்களில் மானுடச் சமூகத்தின் வளர்ச்சியில் மதம் ஆற்றல் மிக்க பங்களிப்பை நிகழ்த்தியிருக்கிறது.உண்மையில் தென்கிழக்கு ஆசிய மக்கள் முதலில் இந்து சமயத்தைத்தான் தழுவினர். அதனால்தான் அவர்களின் பழக்கவழக்கங்களிலும் பண்பாடுகளிலும் மொழிகளிலும் இந்து சமயத்தின் தாக்கம் இன்றும் உணரப்பட்டு வருகிறது.

 

பண்டைய இந்திய வணிகர்கள் தற்போதைய தென்கிழக்கு ஆசியப் பகுதியைச் சொர்ண பூமி என்று அழைத்தனர். பழங்கால சீன வணிகர்களில் பலர் இந்து சமயம் இந்த வட்டாரத்தில் பரவி இருந்ததை வரலாற்று குறிப்புகளாக எழுதி வைத்துள்ளனர். கம்போடியாவிலும் ஜாவாவிலும் இந்து சமயம் செழித்து வளர்ந்திருந்ததை கபாசியன் போன்ற சீன யாத்திரீகர்கள் தங்களது குறிப்புகளில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

 

தென்கிழக்காசியாவில் இந்து சமயம் பரவுவதற்குச் சோழர்களும் ஒரு காரணமாக இருந்துள்ளனர். பத்தாம்
நூற்றாண்டு வாக்கில் இராஜ ராஜ சோழன் தலைமையிலான படையெடுப்பு துவங்கியது. இராஜ ராஜ சோழனின் புதல்வர்  இராஜேந்திர சோழன் மலாயாவை ஆட்சி புரிந்து விஜயா பேரரசைக் கைப்பற்றினான். அவனின் வீரதீர சாகசங்கள் 1030 – 31 ஆண்டுகளில் இட்ட தஞ்சாவூர் கல் வெட்டுகளிலும் திருவாலங்காடு செப்பேடுகளிலும் காணப்படுகின்றன. இதன் காரணமாக அவனுக்குக் "கடாரம் கண்ட சோழன்" என்ற பெயரும் வழங்கத் தொடங்கியது.

 

மலாயாவில் ஸ்ரீவிஜயா மலாயா மன்னர்களை வீழ்த்தி அண்டை தீவுகளில் தனது ஆதிக்கத்தை நிலை
நாட்டியது. ஸ்ரீவிஜயா ஆட்சியின் தாக்கத்தை மலாய் மொழியிலும்,கலாசாரத்திலும் காண முடியும். மலேசியாவின் கெடா மாநிலத்தில்  தோண்டி எடுக்கப்பட்ட பழங்கால சிவன் கோவில்கள் அதற்குக்  கட்டியம் கூறுகின்றன. சிங்கப்பூரின் அண்டை நாடுகளுடன் பழங்காலந்தொட்டே இந்துக் கலாச்சாரத் தொடர்புகளைக் கொண்டிருந்தன. கி.பி.நான்காவது நூற்றாண்டு முதல் இந்து சாம்ராஜ்யமாக ஜாவா, சுமத்ரா, போர்னியோ, சிங்கப்பூர்,மலாயா, ஆகியவை இருந்ததாகச் சீன நாட்டுப் பயணி இட்சிங் எழுதியுள்ள குறிப்புகளிலிருந்து தெரிய வருகிறது.

 

சிங்கப்பூருக்கு 14 வது நூற்றாண்டில் வந்த சீன வர்த்தகர் வாங் தா யுவான், சிங்கப்பூரின் துறைமுகத்தையும் வணிகம் பற்றியும் எழுதியிருப்பதுடன், இந்து கோயில் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தாய்லாந்து, பர்மா, கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள கோவில்கள் தமிழர்களின் சமய, கலாச்சாரத் தொன்மைச் சிறப்புகளுக்கு எடுத்துக் காட்டாக  உள்ளன. இந்து சமயத்தின் வளர்ச்சிக்குச் சைவமும், வைணவமும் சேர்ந்தே பங்காற்றியுள்ளன.

 

சர் ஸ்டாம் போர்ட் ராபிள்ஸ் நவீன சிங்கப்பூரைத் தோற்றுவிப்பதற்கு முன்னரே இந்துக் கோயில்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.இன்று குடியரசில் சுமார் நாற்பது இந்துக் கோயில்கள் அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் 25 ஆலயங்கள் செயல்பாடுகளில் இருக்கின்றன. பூஜைகளும்,வழிபாடுகளும் முறைபடி நடந்தேறி வருகின்றன. இவற்றுள் நூற்றாண்டுப் பழைமை வாய்ந்த ஆலயங்களும் உள்ளன. வளர்ந்து வரும் நாட்டின் விரிவுப் பணிகளுக்கு வழிவிட்டு ஆலயங்கள் புதுப்பொலிவு பெற்று திகழ்கிறது.

 

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது ஆன்றோர் வாக்கு. அதற்கு இணங்க சிங்கப்பூர்த் தீவில் தமிழர்கள் அடி எடுத்து வைத்த காலம் முதலே ஆலயங்களையும் எழுப்பிவிட்டனர். பிற வல்லரசுகள் தங்கள் வலிமையான கடற்படையுடன் வணிகத் தொடர்புகளை அதிகரித்தன. ஆனால் தமிழர்கள் தென் திசை நாடுகளில் தங்கள் கலை, பண்பாட்டுத் தொடர்புகளையே கொண்டிருந்தனர். அந்தச் சின்னங்கள் இன்றும் நிலைத்து நம் தொன்மையான கலாச்சாரச் சிறப்பை வெளிப்படுத்திக் கொண்டு  இருக்கின்றன.
 
இந்து சமயத்தின் வளர்ச்சிக்குச் சைவமும் வைணவமும் சேர்ந்தே பங்காற்றியுள்ளன. இந்துக்கள் தங்கள் சமயத்தை எப்போதுமே பலவந்தமாகப் பரப்பியதில்லை.  தென்கிழக்காசியா வட்டாரத்திற்கு இந்து  சமயம் அமைதியான முறையிலேயே பிரவேசமானது.வர்த்தகர்கள், பயணிகள்,கல்விமான்கள்,சமய போதர்கள் போன்றோர் இவ்வாட்டாரத்துக்கு மேற்கொண்ட பயணங்களின் விளைவாக இந்து சிந்தனைகள் இங்கு பரவின. முதலாம் நூற்றாண்டில் இவ்வட்டாரத்தில் செயல்பட்ட இந்தியக் குடியேற்றங்கள் அதற்கு உறுதுணையாக விளங்கின.

 

வியட்நாமில் இந்து ராஜ்ஜியமான சம்பா கி.பி.159 ஆம் ஆண்டுக்கும் 200-க்கும் இடையில் தோற்றுவிக்கப் பட்டது.சம்பா மன்னன் ஸ்ரீ பத்ரவர்மா இரண்டாம் நூற்றாண்டில் மைசோன் எனும் இடத்தில்,பெரும் இந்துக்கோயிலை எழுப்பியதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.சம்பா அரசில் சமஸ்கிருதம்  அதிகாரத்துவ மொழியாகவும் இருந்தது. தென்கிழக்காசியாவில் வியட்நாமில் செயல்பட்டு வந்த சம்பா பேரரசு, சுமத்ராவில் செயல் பட்டு வந்த விஜயா பேரரசு, ஜாவாவிலும் பாலியிலும் செயல்பட்டு வந்த சிங்கசாரி,  மஜபாஹிட் அரசுகள், பிலிப்பீன்ஸ்சை சேர்ந்த சில தீவுகள் ஆகியவற்றில் இந்து சமயம்  தழைத்து ஓங்கியிருந்தது.

 

காம்போஜம் என்று இந்தியர்களால் அழைக்கப்பட்ட் கம்போடியா தென்கிழக்காசியாவிலேயே ஆக அதிக இந்து தாக்கமுள்ள நாடு. அங்கு வைணமும் சைவமும் கை கோர்த்து தழைத்தன.சிவபெருமானை வணங்கியது போலவே விஷ்ணுவையும் கம்போடிய மன்னர்கள் வழிபட்டனர்.

 

கம்போடியாவில் கி.பி.1122-ஆம் முதலாம் நூற்றாண்டில் அமைந்த சிவன் கோயில் அங்கோர் வாட்டில் (Angkor Vat) இன்றும் இருக்கிறது. உலக நினைவுச் சின்னமாகப் போற்றப்படும்  அங்கோர் வாட்டில் இரண்டாவது மன்னன் சூர்ய வர்மன் அந்தக் கோயிலைக் கட்டினான். வைணவத்துடன் இந்த வட்டாரத்தில் சைவ சமயம் கைகோர்த்து வளர்ந்தது என்பது வரலாற்று வல்லுநர்களின் கருத்து. இவ்வட்டாரத்தில் காணப்படும் சிதைந்த நகரங்களும், கோயில்களும் இதர சமயச் சின்னங்களுமே இதற்குச் சான்று. உலகப் பாரம்பரியச் சின்னங்களாக (World Hertiage Monuments) ஐக்கிய நாட்டுச் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

 

பர்மியர்களிடையே விஷ்ணு வழிபாடு பரவலாகக் காணப்படுகிறது. பல கல்வெட்டுகளில் அதற்கான ஆதாரங்கள்´ உள்ளன. பர்மாவின் பழங்கால தலைநகரமான புரோம் வைணவ வழிபாட்டின் மையமாகத் திகழ்கிறது. புரோம் நகருக்கு "புகநாம்யோம்" என்ற பர்மியப் பெயரும் உண்டு. இதற்கு பொருள் "விஷ்ணுபுரம்" என்றாகும்.

 

இன்றும் கூட தாய்லாந்து மன்னர்கள் ராமா என்ற அரச பரம்பரைப் பெயரைக் கொண்டுள்ளனர். இராமாயணக் கதை அரச மாளிகையின் சுவர்களை அலங்கரிக்கின்றன. தசரா போன்ற இந்து விழாக்கள் இன்றும் அங்கு அனுசரிக்கப்படுகின்றன.தாய்லாந்து மக்கள் மகா விஷ்ணுவை "பிரா நாராயண்" என்ற பெயரில் வழிபடுகின்றனர். சயாமிய இலக்கியங்களில் இராமாயணத்துக்கும் மகாபாரத்துக்கும் பெரும் பங்கு உள்ளது. இன்றும் கூட தாய்லாந்து மன்னருக்கு முடிசூட்டும் போது திவ்ய பிரபந்தம் போன்ற இந்து மந்திரங்கள் ஓதப்படுகின்றன.

 

ஜாவாவில் இரண்டாம் நூற்றாண்டிலிருந்து இந்தியர்கள் குடியேறினர். வைணவ சமயத்தின் தாக்கத்தை ஜாவா தீவின் மத்திய பகுதியில் அதிகம் பார்க்க முடிகிறது. போரோப்தூருக்குச் செல்வோர் அருகிலுள்ள சண்டி பாயோன் கோயிலில் பல அழகிய இந்து விக்கிரங்களைக் காண முடியும். ஜாவாவின் ஆகப் பெரிய இந்து கோயில் பெரம்பனான். பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இதில் இராமாயணத்தைச் சித்தரிக்கும் பல சிற்பங்கள் உள்ளன. சுமத்ராவின் ஆகப் பழைமையான சாம்ராஜ்யம் ஸ்ரீ விஜயா. நான்காவது நூற்றாண்டு வாக்கில் அது தோற்றுவிக்கப்பட்டது.

 

மத்திய ஜாவாவில் பெரம்பனான் என்ற இடத்தில் மூன்று பிரகாரங்களுடன் அமைத்த மிகப்பெரிய சிவன் கோவில் ஒன்று இன்றும் உள்ளது.இது கி.பி. 929-ல் கட்டப்பட்டது.இக்கோயிலை இந்தோனீசியர்கள் "சிவ திஜாண்டி" என்று குறிப்பிடுகின்றனர். ஜோக் ஜகார்த்தாவில் (கி.பி. 775 – 782) அமைந்துள்ள போராப்புதூர் ஆலயம் பல சதுர மைல் கொண்டது. விஷ்ணு ஆலயத்தில் சிவன், திருமால், அம்பாள், விநாயகர் சிலைகள் உள்ளன. இங்கு பிரம்மா, சிவன், விஷ்ணு என மும்மூர்த்தி வணங்கப்படுகின்றர். துர்க்கா தேவிக்குத் தனிக்கோவில் இருக்கின்றது.

 

பாலித் தீவு இன்றும் இந்து ராஜ்யமாகவே இருந்து வருகிறது.  

சீனாவிலும் இந்து சமயத்தின் தாக்கங்கள் இருந்திருக்கின்றன. அங்கு தென்கிழக்குச் சீனப் பகுதிகளில் இந்து சமுதாயம் இன்றும் இருக்கிறது. இந்து சமயத்தின் யோகம், வர்மக் கலைகள் போன்றவை சீனப்பண்பாட்டில் ஏற்படுத்திய தாக்கம் அதிகம்.

 

சீனாவின்  "சுன்வுகாங்" என்ற புராண பாத்திரம் அனுமாரைத்தான் உருவகித்தது என்று சொல்வார்களும் உண்டு. சீன அரசியல் மாற்றங்கள் இந்து சமய வளர்ச்சியை அங்கு மட்டுப் படுத்தியது. சீனத்தின் ஒரு பகுதியான திபெத்தில் இந்து சமயம் அதிகமாகவே இருக்கிறது. புத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் கூட,  இந்துசமய நெறிகளைப் பின்பற்றுவதும் இந்து சமய விழாக்களில் பங்கு கொள்வதும் அங்கு அதிகம்.

ஜப்பான் நாட்டிலும் ஓரளவு இந்து சமயத்தின் தாக்கத்தைக் காண்கிறோம். அதிகம் இல்லையெனினும்,  அங்குள்ள புடக்ககோ தமகாகோ கோயிலில் விநாயகப் பெருமான் சிலைகள் இருப்பது இந்து சமயத்தின் பரவலைக் காட்டுகிறது. 13 -ம் நூற்றாண்டில் ஸ்ரீ விஜய சாம்ராஜ்யமாக இந்தோனேசியா இருந்தபோது, துமாசிக் என்ற பெயரில் சிங்கப்பூர் விளங்கியது. பரமேசுவரன் ஆட்சியில் இருந்தான்.அப்போது சிங்கப்பூர் ஆற்றின்  முகத்துவாரத்தில் இந்து கோயில் ஒன்று இருந்தாகக் கூறப்படுகிறது.

13 -ம்  நூற்றாண்டிலிருந்தே சிங்கப்பூரில் இந்து கோயில் இருந்து இருப்பதை வரலாறு நமக்கு காட்டுகிறது. இன்றைய நவீன சிங்கார சிங்கப்பூரில் அமைந்திருக்கும் சில முக்கிய கோயில்களையும், அவற்றின் வரலாற்றையும் வரும் இழையில் காண்போம்.
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *