Home Tamilmanigal சற்குணர்

சற்குணர்

by Dr.K.Subashini
0 comment

தமிழ்மணி சற்குணர் என்னும் நற்குணர்

பொன்னீலன்  

இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த காலத்தில் ஆங்கிலம் கற்றுப் பட்டம் பெற்றும், தமிழுக்கும் தொண்டு செய்யவேண்டுமென்று, அதிலும் தமிழாசிரியராகத் தொண்டு செய்யவேண்டுமென்று தீர்மானித்த தமிழ்த்தொண்டர்; தமிழ்க் கல்வியைப் பரப்புவதற்காகச் சென்னையில் தென்னிந்தியத் தமிழ்க் கல்விச் சங்கம் அமைத்த ஒரு முன்னோடி; தமிழர்களுக்குத் தமிழ்மட்டும் போதாது, பல மொழி அறிவும் இருந்தால்தான் தமிழின் சிறப்பைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும் என்று பல மொழி கற்றுத்தேர்ந்த மேதை. அவர்தான் சாமுவேல் தர்மராஜ் என்னும் சற்குணர்.
 

Sarkunar

அக்காலத்திலேயே கல்வி வளம் பொங்கிய நாசரேத் ஊரில், புகழ்மிக்க ஒரு குடும்பத்தில் உதித்தவர் சற்குணர். இவருடைய பாட்டனார் கல்வி கற்பதற்காக அக்காலத்தில் திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு நடந்தே வந்ததாகச் சொல்வார்கள். இவர் தந்தையார் சாமுவேல் பி.ஏ., படித்து மாவட்டப் பதிவாளராகப் பணி செய்தவர். மிகப்பெரும் தமிழறிஞரான இவரைப் பற்றி தமிழ்த் தாத்தா உ.வே.சா. கீழ்க்கண்டவாறு கூறுகிறார்: "சற்குணர் தகப்பனார் ஒரு பெரும் தமிழன்பர். நாற்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீவகசிந்தாமணியை அச்சிட முயன்று கொண்டிருந்தபோது, எனக்குத் தோன்றாத் துணையாய் ஊக்கமளித்தவர்களில் அவர் ஒருவர். வாராவாரம் கடிதம் எழுதி எனக்கு அவ்வேளையில் உற்சாகம் உண்டாக்கினார்”.

1877ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி பிறந்த தர்மராஜ், கல்லூரியில் ஆங்கிலத்துடன் தமிழும் கற்றார். கற்கும் காலத்தில் தனக்குத் தமிழில் சந்தேகம் ஏற்பட்ட பொழுதெல்லாம் தந்தையாருக்குக் கடிதம் எழுதித் தெளிவு பெற்றுக்கொள்வாராம். அதோடு அவர் நிற்கவில்லை. வடமொழி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றாராம். "தமிழர்களுக்குத் தமிழ் மட்டும் போதாது. பல மொழி அறிவு இருந்தால்தான் தமிழின் சிறப்பைச் சரியாகப் புரிந்து கொள்ளமுடியும்” என்பார் இவர்.

அக்காலத்தில் ஆங்கிலம் பயின்றவர்களுக்கு உயர் பதவிகளுக்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தன. ஆனால் சற்குணர் ஆசிரியர் தொழிலையே தேர்ந்தெடுத்தார். அதிலும் ஆங்கில ஆசிரியராக வாழ்வைத் தொடங்கிய இவர், பின் நாளில் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழாசிரியராக, பின் தமிழ்ப் பேராசிரியராக உயர்ந்தார். ஆசிரியப்பணியை சற்குணர் மிகுந்த ஈடுபாட்டுடனும் பரவசத்துடனும் செய்தார். அவருடைய இந்தத் தமிழ்ப்பணி பற்றி தமிழ்ப் பேரறிஞர் தெ.பொ.மீ. இப்படிக் குறிப்பிடுகிறார்:-
"ஆங்கிலப் பகட்டு எல்லோரையும் தனக்கு அடிமையாக்கிய அந்தக் காலத்திலேயே, அதன் வலையிற் சிக்காமல் ஆங்கிலத்தைத் துறை போகக்கற்று, அதன் சிறப்பில் தோய்ந்து மகிழ்ந்து, அதுபோலத் தமிழும் சிறப்புற வேண்டித் தமிழன்னைக்குத் திருத்தொண்டு செய்யப் புகுந்து, நுனிப்புல் மேயாது, தமிழ் ஆழ்வாராகித் தம்மிடம் வந்த மாணவர்களையெல்லாம் வாயளவில் அன்றி உண்மையில் உலகம் ஈடேறும் வகையில் தமிழன்பர்களாக்கித் தம் முயற்சியில் வெற்றி பெற்று விளங்குகிறார்”.
இவர் கற்பிக்கும் முறை பற்றி அறிஞர் ரா.நடேச நாயகர் இவ்வாறு கூறுகிறார்: "ஒரு நூலுக்கு உரை கூற வேண்டுமாயின், அந்நூல் எக்காலத்தில் எழுதப்பட்டது, அக்காலத்தில் நிகழ்ந்த செயல்களென்ன, எந்நாட்டில் எழுதப்பட்டது, அந்நாட்டில் வழங்கிய வழக்குகள் என்ன? எந்நூலாசிரியரால் எழுதப்பட்டது, அந்நூலாசிரியரின் மனப்பான்மை யாது, என்பனவற்றை அகச் சான்றுகளாலும் புறச் சான்றுகளாலும் ஆராய்ந்தே பொருள் கொள்ள வேண்டும்’ என்று எம்மாசிரியர் பன்முறை கூறுவார்."

 
ஆசிரியத் தொழிலோடு சற்குணர் நிறைவு பெறவில்லை. 15.1.1925ல் தென்னியந்தியத் தமிழ்க் கல்விச் சங்கம் என்ற ஒரு சங்கத்தை நிறுவினார். சற்குணர் தலைவராகவும், அறிஞர் அ.கி.பரந்தாமனார் செயலாளராகவும் அதைத் திறம்பட நடத்தினர். அங்கு அக்கால சென்னை வித்துவான் தேர்வுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. அங்கு கற்றுத் தேர்ந்த மாணவர் பலர் பிற்காலத்தில் தமிழாசிரியர்களாகவும், தமிழ்ப் பேராசிரியர்களாகவும் புகழ் பெற்றனர். இந்தச் சங்கம் முழுக்க முழுக்க சற்குணரின் சொந்தச் செலவில் நடத்தப்பட்டது. கல்வியை ஓர் இறைத் தொண்டாகவே செய்தார் அவர்.

 
சற்குணரின் தமிழ் உணர்வு சமையங் கடந்தது. அக்காலத்தில் தமிழ் இலக்கியங்களை உயர்வாக மதிக்கும் முறை ஆங்கிலேயரிடம் மட்டுமல்ல தமிழர்களிடமும் பரவலாகக் காணப்பட்டது. தமிழே உயர்ந்தது என்று அடித்துப் பேசும் சற்குணரை ஒருநாள் ஒரு கிறிஸ்தவ நண்பர் அணுகி, நீங்கள் எப்போதும் தமிழையே பிரியமாகப் படிக்கின்றீர், தமிழில் சிறப்பான கொள்கைகள் என்ன உண்டு? கிறிஸ்து மத நூலில் பல கொள்கைகள் உள்ளன.

 
உதாரணமாக இயேசு நாதர், "ஒருவர் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு” என்று கூறியுள்ளார். அத்தகைய உயரிய கொள்கை வேறு பிற நூலில் உண்டா?’ என்று கேட்டாராம். அதற்கு சற்குணர் புன்முறுவலோடு இவ்வாறு பதில் சொன்னாராம். ஆம், இயேசுநாதர், "ஒருவர் ஒரு கன்னத்தில் அறைந்த தீய செயலை மறவாமல் மற்றொரு கன்னத்தையும் காட்டு," என்றார். ஆனால் திருவள்ளுவரோ, "ஒருவர் செய்த தீமைக்குப் பதிலாக நன்மையைப் புரிந்துவிடு", பிறகு அவ்விரண்டு செயல்களையும் மறந்துவிடு என்ற கொள்கையோடு; 
 
"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாண
  நன்னயம் செய்து விடல்."
என்று கூறியுள்ள அருமையான நீதியைக் கவனித்தீரா? இதுபோல் வேறு எந்த கிறிஸ்தவ நூலில் கூறப்பட்டுள்ளது? நீரே கூறும் என்று பதிலளித்தாரம்.

முழுக்க முழுக்க கற்பிக்கும் பணியிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால், சற்குணர் எழுத்துப் பணியில் அதிகம் ஈடுபடவில்லை. ஆனால் இவர் தம் காலத்தில் சிறந்த ஆராய்ச்சியாளராகத் திகழ்ந்தார். இதைப்பற்றி மயிலை சீனி வேங்கடசாமி சொல்லும் போது, இவர் அவ்வப்போது குறித்து வைத்துள்ள ஆராய்ச்சிகளையும் முடிவுகளையும், இவரிடம் கேட்டறிந்த மாணவர்களில் சிலர், அவற்றை ஆசிரியர் கண்ட முடிவென்றும், ஆராய்ச்சி கூறும் முடிவென்றும் கூறாமல் தாம் கண்ட முடிவென்றும், ஆராய்ச்சி என்றும் பேசியும்,எழுதியும் வருவதுண்டு. அதைப் பற்றி இவரிடம் நான் ஒரு சமயம் பேசியபோது, "அதைப்பற்றி என்ன? எப்படியாவது யார் மூலமாவது கருத்து பரவ வேண்டியது தானே," என்று சொன்னார். அத்தகைய பெருந்தகையர்கள் மிகவும் அபூர்வமே என்கிறார் அவர்.
அக்காலத்துப் பண்டிதர்கள் மிகவும் கடினமான நடையில் எழுதுவர். அதையும் கண்டித்திருக்கிறார் சற்குணர். அவர் சொல்கிறார்: "எல்லோரும் எளிதில் அறியத் தக்கவாறு எழுதப்படும் நூல்கள்தான் சிறந்தவை. ஏனென்றால் மனிதருக்காக பாஷையே தவிர, பாஷைக்காக மனிதர் இல்லை. நமது நாட்டு ஜனங்களுக்கு அறிவு வளர வேண்டுமானால் அவர்கள் எளிதில் படித்து விளங்கக்கூடிய முறையில் நூல்கள் எழுதப்பட வேண்டும்”.

தமிழாசிரியர் பணியோடும், தென்னிந்தியத் தமிழ்ச் சங்கப் பணியோடும் இவர் தன்னை ஒடுக்கிக் கொள்ளவில்லை. சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்க்குழு உறுப்பினராகவும் திறம்படப் பணியாற்றியிருக்கிறார். பாடப் புத்தகங்களைத் தேர்வு செய்வதில் கறார்தன்மை உடையவராயிருக்கிறார் இவர். இதுபற்றி பேராசிரியர் வையாபுரி பிள்ளையவர்கள் ஒரு சம்பவத்தைச் சொல்கிறார்.
ஒருமுறை பாடப் புத்தகத் தேர்வுக்குழுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, குழு உறுப்பினர் ஒருவர் தன் புத்தகத்தைப் பாடப்புத்தகமாக வைக்கும்படி வற்புறுத்தினாராம். அப்போது சற்குணர், இப்புத்தகம் முன்பும் பாடமாக இருந்ததுண்டு. அதனை மாணவர்கள் எல்லாரும் வெறுக்கிறார்கள் என்று கூறி புத்தகத்தை ஆசிரியர் முகத்துக்கு நேரேயே நிராகரித்தாராம். அத்தகு நேர்மையடையவர் அவர்.
இவருடைய பொது வாழ்வுப் பணிக்கு முடிசூட்டுவது போல, தமிழறிஞர் அ.கி.பரந்தாமனார் முயற்சியால் 1937ல் இவருக்கு 60ம் ஆண்டு விழா சென்னையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழ்த் தாத்தா உ.வே.சா. தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டு அவருடைய பன்முக ஆளுமையை எடுத்துக் கூறினர். "சற்குணர் மலரும் சற்குணீயமும்" என்ற அரிய சிறப்பு மலரும் அப்போது வெளியிடப்பட்டது.

தமிழுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, 23.12.1952ல் இயற்கை எய்திய அம்மாமனிதரை நினைவு கூர்வது நம்மையும் நம்மொழி உணர்வையும் புதுப்பித்துக் கொள்வதாக அமையும். அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளையின் வார்த்தைகளில் சொன்னால், கற்றுத் துறைபோகிய நற்றமிழ் வாணரும், தாம் இன்புறுவது உலகு இன்புறக்கண்டு மகிழும் தகைமை சான்றவரும், அடக்கமும், பொறுமையும் அணியாகக் கொண்டவரும், கண் நின்று கண்ணறச் சொல்லும் திண்மை வாய்ந்தவரும், நேர்மைக்கும் நேயப்பான்மைக்கும் நிலையமானவருமான இத்தகைய செந்தமிழ்ச் சீலரைப் போற்றுதல் தமிழறிந்தார் கடமையாகும்.
 

 
 
நன்றி: தமிழ்மணி (தினமணி)

You may also like

Leave a Comment