கோபாலகிருஷ்ண பாரதியார்

திருமதி. கீதா சாம்பசிவம்

 

அடுத்து நாம் பார்க்கப்போவது கோபாலகிருஷ்ண பாரதியார். இவரையும் இவர் இயற்றிய நந்தனார் சரித்திரம் குறித்த ஒரு முக்கியமான செய்தியையும் இந்தத் தொடரின் ஆரம்பத்தில் ஏற்கெனவே பகிர்ந்து கொண்டோம். இப்போது இவரின் சரித்திரம் குறித்துப் பார்க்கலாம்.  இவர் சத்குரு எனவும் கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளில் ஒருவர் என்றும் சொல்லப்படும் ஶ்ரீதியாகராஜ ஸ்வாமிகளின் சமகாலத்தவர் ஆவார்.  இவரின் ஞானத்தை அவரும், தியாகராஜ ஸ்வாமிகளின் ஞானத்தை இவரும் பாராட்டி இருப்பதாய்க் கேள்விப்படுகிறோம்.

 

தன் தமிழிசையால் இறை உணர்வை வளர்த்த பல பெரியோர்களில் கோபாலகிருஷ்ண பாரதி குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர்.  இவர்  சிவன் மேல் அளவில்லாத பக்தியும், ஈடுபாடும் கொண்டு பரவசம் அடைந்தவர். எண்ணற்ற பாடல்களை சிவன் மேல் எழுதியுள்ளார்.  கடைசிவரையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மசாரியாகவே வாழ்ந்தார்.  நாகப்பட்டினம் அருகிலுள்ள நரிமணம் என்னும் ஊரில் அந்தண குலத்தில் ராமசாமி பாரதி என்பவருக்கு மகனாய்ப் பிறந்தார்.  ராமசாமி பாரதி குடும்பம் பாரம்பரியம் மிக்க இசைக்குடும்பம் ஆகும். முதலில் முடிகொண்டான் என்னும் ஊரிலும் பின்னர் ஆனைதாண்டவபுரம் என்னும் ஊரிலும் வசித்த இவர்கள் பின்னால் நரிமணம் வந்து வசித்தார்கள்.   பலகாலம் ஆனைதாண்டவபுரம் பாரதி எனவும் முடிகொண்டான் பாரதி எனவும் அழைக்கப்பட்டனர்.

 

பிறப்பு மட்டுமில்லாமல் குடும்பச் சூழ்நிலையும் சேர்ந்து கோபாலகிருஷ்ண பாரதிக்கு இசையில் நாட்டம் மிகவும் அதிகமாகவே இருந்தது.  தமிழில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்த இவர் அக்கால வழக்கப்படி தமிழ் கற்கையிலேயே தமிழ்ப் பாடல்களை இசையோடு பாடிப் பழகும் வழக்கம் கொண்டிருந்தார்.  நாளாவட்டத்தில் தாமே சுயமாகத் தமிழ்ப்பாடல்களை இயற்றவும் ஆரம்பித்தார்.  இவர் காலத்தில் அரசாண்ட மராத்தி மன்னரான அமரசிம்ம ராஜாவின் சபையில் இருந்த இந்துஸ்தானி இசை மேதை  ராமதாஸ் என்பவரிடம் இந்துஸ்தானி இசை கற்றுக்கொண்டு அதன் நுணுக்கங்களைக் கர்நாடக இசைக்கு ஏற்ப தமது கீர்த்தனைகளில் புகுத்தினார்.  ராமதாஸைத் தவிர அந்நாட்களில் பிரபலமான கர்நாடக சங்கீத வித்வான் கனம் கிருஷ்ணையரிடமும், வைணவ இசைக்கலைஞரான அனந்த பாரதியாரிடமும், சிதம்பரம் சிவசங்கர தீக்ஷிதர், மாயூரம் வேதநாயகம் பிள்ளை ஆகியோரிடமும், இசைமேதைகள் ராமசாமி சிவன், மஹாவைத்தியநாத ஐயர் ஆகியோரிடமும் நெருங்கிப் பழகித் தன் இசையறிவை மேம்படுத்திக்கொண்டார்.  ஒரு சமயம் இவர் தியாகராஜ ஸ்வாமிகளைக்காணச் சென்றபோது அவர் ஶ்ரீராமர் மேல் ஆபோகி ராகத்தில், “ஶ்ரீராமஸீதா” எனத் தொடங்கும் கீர்த்தனையைத் தன் சீடர்களுக்குக்கற்பித்துக் கொண்டிருந்தார்.  அதைக் கேட்டவுடன், பாரதியார் சிதம்பரம் நடராஜர் மீது ஆபோகி ராகத்தில் கீழ்க்கண்ட கீர்த்தனையை இயற்றிப் பாடினார்.

 

அந்தப்பாடல் தான் பிரபலமான

சபாபதிக்கு வேறு தெய்வம்

சமானம் ஆகுமா – தில்லை

 

அநுபல்லவி

 

கிருபா நிதி இவரைப் போலக்

கிடைக்குமோ இத்தரணி தன்னிலே

என்னும் பாடல் ஆகும்.

 

இதே போல தியாகராஜர் பாடிய பஞ்சரத்னக் கீர்த்தனைகள் போலவே ஈசன் மேல் கோபாலகிருஷ்ண பாரதியாரும் அதே ராகங்களில் பஞ்சரத்னக் கீர்த்தனங்களைப் பாடியுள்ளார். அவை வருமாறு:

 

அரஹரசிவசங்கர என்னும் பாடல் நாட்டை ராகம், ரூபக தாளம்

சரணாகதியென்று என்னும் பாடல் கெளளை ராகம் ஆதி தாளம்

பிறவா வரம்தாரும்  என்னும் பாடல் ஆரபி ராகம் ஆதி தாளம்

ஆடிய பாதமே கதி என்னும் பாடல் வராளி ராகம் ஆதி தாளம்

மறவாமல் எப்படியும் என்னும் பாடல் ஶ்ரீராகம் ஆதி தாளம்

 

இவை அனைத்தும் ஈசனைப் போற்றும் சிவபக்தி நிறைந்த பாடல்களாகும். இவை தவிர கோபால கிருஷ்ண பாரதியார் கல்யாணங்களில் பாடக்கூடிய நலுங்குப் பாடல்கள், ஊஞ்சல் பாடல்கள், லாலி, கும்மி, கோலாட்டம் போன்ற பாடல்களையும் பாடியுள்ளார்.  நாயன்மார்களான சிவனடியார்களின் வாழ்க்கையை இசையுடன் கூடிய பாடல்களாகப் பாடி எல்லாருக்கும் பரப்பினார்.  அவற்றில் இயற்பகை நாயனார் சரித்திரம், காரைக்கால் அம்மையார் சரித்திரம், திருநீலகண்ட நாயனார் சரித்திரம் ஆகியவையோடு நந்தனார் சரித்திரமும் இடம் பெற்றது.

 

அந்நாட்களில் பெரிய பண்ணைகளை வைத்து விவசாயம் பண்ணிக்கொண்டிருக்கும் பண்ணையார்கள் தங்களிடம் வேலை செய்யும் குடியானவர்களை நடத்தும் முறையில் கோபாலகிருஷ்ண பாரதியார் மனம் கசந்து போயிருந்தார்.  அதைச் சுட்டும் வகையில் நந்தனார் சரித்திரத்தின் கதையைச் சற்று மாற்றியமைத்தார்.  பிறப்பால்  புலையரான நந்தனார் புலைப்பாடியில் வாழ்ந்து வந்ததோடு சிவபெருமான் மேல் மாறாக் காதல் கொண்டு எந்நேரமும் இறைவன் புகழைப் பாடுவதே தம் கடமை என வாழ்ந்து வந்தார்.  நந்தனார் என்று அழைக்கப் படும் திருநாளைப் போவார் என்னும் அடியார் சொந்த நிலத்திலே தான் பயிரிட்டுக் கொண்டு, சிவன் கோயில்களுக்கு வேண்டிய தோல், வார், தந்தி, மற்றும் கோரோசனை போன்றவற்றைத் தம் குலத்தைச் சேர்ந்த மற்றவரைப் போல் பணத்துக்காகக் கொடுக்காமல் இலவசமாய்க் கொடுத்து வந்தார். இப்படித் தான் சேக்கிழாரின் பெரிய புராணத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.

 

பெரிய புராணத்தில் நந்தனார் திருப்புங்கூரில் தரிசனம் செய்ததையும் சிதம்பரம் போவதைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்ததையும் குறிப்பிடும் சேக்கிழார் அதை எந்தப் பண்ணையாரும் தடுத்து நிறுத்தியதாய்க் குறிப்பிடவில்லை.  நந்தனார் தாமாகவே தாம் தள்ளிப்போட்டுக்கொண்டு வந்ததாய்ச் சொல்லி இருப்பார்.  ஆனால் இங்கே கோபாலகிருஷ்ண பாரதியாரோ ஒரு வேதியரைப் பண்ணையாராகச் சிருஷ்டித்தார்.  அவரின் கூலி ஆளாக நந்தனாரை மாற்றினார். உண்மையில் சொந்தமாக விவசாயம் பண்ணிக்கொண்டு ஊர் ஊராகச் சென்று சிவ தரிசனம் செய்து வந்த நந்தனாரைக் கூலி ஆளாக மாற்றி, அந்த வேதியரின் கொடுமையால் அவரின் பக்தி நிரம்பப் பெறாமல் அவர் இறைத் தொண்டு செய்ய முடியாமல் பாதிக்கப் பட்டதாய் எழுதி விட்டார். ஆயிற்று. கவிதையும் எழுதி முடித்தாயிற்று.

 

நந்தன் சரித்திரக் கீர்த்தனை தயார் நிலையில். அதைப் பாடப் பெரிய கதாகாலட்சேபக் காரர்கள், அந்தக் கால கட்டத்தில் தேச அபிமானிகள் பலரும் இம்மாதிரியான ஆன்மீகப் பாடல்களோடு தேசபக்தியையும் இணைத்துப் பாடத் தயாராய் இருந்தவர்கள் என அனைவரும் தயார் நிலையில். ஆனால் கோபாலகிருஷ்ண பாரதியாருக்கோ இந்தக் கவிதைத் தொகுப்புக்கு ஒரு சிறப்புப் பாயிரம் தயார் செய்து கொண்டே வெளியில் விட ஆசை. அதற்குத் தகுதியான ஆள் யாரென யோசித்தபோது அவர்  நினைவில் வந்தவர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களே. அவரிடம் சென்று சிறப்புப் பாயிரம் வாங்கிச் சேர்த்து விடலாம் என்று நேரிலேயே அவரிடம் சென்றார். பாரதியார். சிறப்புப் பாயிரமும் கேட்டார். ஆனால் பிள்ளை அவர்கள் சொன்ன பதில்: இல்லை என்பதே!

 

மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் தமிழ்ப்பற்றோடு, சிவபக்தியும் நிரம்பப் பெற்றவர். பெரிய புராணத்தை உள்ளும், புறமும் நன்கு கற்றுத் தெளிந்தவர். தம் தமிழ்ப் புலமையாலேயே திருவாவடுதுறை ஆதீனத்தின் மகாவித்வானாக இருந்து, பல தம்பிரான்களுக்கும், தமிழ் கற்பித்து, சைவ மடங்களின் ஆதீனத் தலைவர்களாக ஆக வழி காட்டியவர். இவருக்குக் கோபாலகிருஷ்ண பாரதியாரின் "நந்தன் சரித்திரம்" பற்றிய தகவல்கள் கிடைத்தன. என்னதான் தமிழ் அபிமானியாக இருந்தாலும், கோபாலகிருஷ்ண பாரதியாரின் "நந்தன் சரித்திரம்" நன்கு இசைக் காப்பியம் ஆக எழுதப் பட்டிருந்தாலும், மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களுக்கு இந்த விஷயத்தில் முழுச் சம்மதம் இல்லை. எங்கோ ஓரிரு இடங்களில் நிலச் சுவான் தாரர்கள், தங்கள் குடி, மக்களிடம் கடுமையாக நடந்து கொள்கின்றார்கள் தான். இல்லை எனச் சொல்ல முடியாது. எளிய மக்களிடம் நமக்கும் அனுதாபம் உண்டு தான், ஆனால் கற்பனை என்ற பெயரில் காலம், காலத்துக்கும் நிலைத்து நிற்கக் கூடிய ஒரு காப்பியத்தில் -அதுவும் சைவத் திருமுறைகளிலேயே முதன்மைத் தகுதியில் வைத்துப் பாராட்டப் படும் பெரிய புராணத்தை- மாற்றி அமைத்துக் கவிதை பாடுவது என்பதை ஏற்கவே முடியாது என்பதே அப்பெரியவரின் தீர்மானமான கருத்து. தம் கருத்தை தம்முடைய உளம் நெருங்கிய மாணாக்கராக இருந்த மகா வித்வான் உ.வே.சாமிநாத ஐயரவர்களிடம் சொல்லி வருத்தப் பட்டார்.

 

ஆனால் பாரதியாருக்கோ சிறப்புப் பாயிரம் வாங்க வேண்டும், அதுவும், பிள்ளைஅவர்களிடம் இருந்து என்ற எண்ணத்தில் மாற்றமே இல்லை. தினம் தினம் பிள்ளை அவர்களிடம் வந்து கேட்டபோதிலும் பிள்ளை அவர்களோ, தமக்கு சங்கீதத்தில் நாட்டம் இல்லை என்பதால் சங்கீதமும், தமிழும் அறிந்த வேறு யாரிடமாவது சென்று பாயிரம் வாங்கச் சொல்லித் திருப்பி அனுப்புவதுமாக இருந்தார். ஒரு கட்டத்தில் பாயிரமே தேவை இல்லை என்று சொல்லியும் திருப்பி அனுப்பினார். ஆனால் பாரதியார் விடவில்லை. ஒருநாள் மதியம் பிள்ளை அவர்கள் வீட்டில் சாப்பிட்டு விட்டு, சிரமப் பரிகாரம் செய்து கொண்டிருக்கும் வேளையில் வந்தார் பாரதியார். பிள்ளை அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் செய்தி அவர் காதை எட்டியது. வரும்போது வரட்டும் என்று வீட்டுத் திண்ணையிலேயே உட்கார்ந்து விட்டார், கோபால கிருஷ்ண பாரதியார்.உட்கார்ந்தவரால் சும்மா இருக்க முடியவில்லை. தன்னை அறியாமல் "நந்தன் சரித்திரம்" கீர்த்தனைகளை முணுமுணுக்கத் தொடங்கினார்.

 

ஏற்கெனவேயே அரைத் தூக்கமாய் இருந்த பிள்ளை அவர்களின் காதில் பக்தியோடு சேர்ந்த இனிய இசை காதில் விழுந்ததும் எழுந்து உட்கார்ந்து விட்டார். கவிதைத் தொகுப்பில் உள்ள இலக்கணப் பிழைகளை ஏற்கெனவேயே கவனித்திருந்த பிள்ளை அவர்களுக்கு, இப்போது இசையுடன் கேட்ட அந்தப் பாடல்களில் உள்ள இலக்கணப் பிழைகள் பற்றிய நினைப்பே இல்லை. பாரதியார் மெதுவாக ஒவ்வொரு பாடலாய்ப் பாடிக் கொண்டே வந்து, "வருகலாமோ" என ஆரம்பித்தார். இந்த வருகலாமோ என்பதே ஓர் இலக்கணப் பிழை என்பதாக பிள்ளை அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார். "வரலாமோ" என்று சொல்லுவதற்குப் பதிலாக இது என்ன "வருகலாமோ" என்று கேட்டிருந்தார். ஆனால் இப்போது அந்தப் பாடலின் உருக்கமும், இறைவனைக் கண்ணாரக் காண நந்தன் துடித்த துடிப்பும், தன்னோட ஈனமான பிறவியை நினைத்து ஏங்கிய ஏக்கமும், நடராஜரைத் தன் மனக்கண்ணால் கண்டு, நேரில் காண எப்போது வருவோம் என்று உருகி, உருகிப் பாடிய பாட்டையும் கேட்ட பிள்ளை அவர்களின் கண்ணில் இருந்து கண்ணீர் மழை பொழிந்தது.

 

பாரதியாரைக் கூப்பிட்டு அனுப்பினார். "தங்கள் இசைக்காப்பியத்தைக் கேட்டேன்.தாங்கள் இவ்வளவு சிவபக்தி உள்ளவர் என இப்போதே அறிந்தேன். சிவபக்திச் செம்மல் ஆன நீங்கள், மற்றவரையும் அவ்வாறே சிவபக்தியில் நெக்குருகப் பண்ணுவதையும் உளமார அனுபவித்துத் தெரிந்து கொண்டேன். ஆகவே உங்கள் இசைக் காப்பியத்துக்குச் சிறப்புப் பாயிரம் தருகிறேன்," என்று சொல்லி அனுப்பி அதே போல் சிறப்புப் பாயிரமும் எழுதிக் கொடுத்தார். ஆனால் அதே சமயத்தில் பாரதியார் நந்தன் கதையில் ஒரு வேதியரை நுழைத்துக் கதையை மாற்றி எழுதி நந்தன் சரித்திரத்தை இன்னும் உருக வைத்திருப்பதைக் குறித்து, ஒருவிதமான பாராட்டுச் சொல்லோ, அவர் அம்மாதிரி எழுதிப் பெரிய புராணத்தை மாற்றி இருப்பது குறித்து, அவதூறுச் சொல்லோ இல்லாமலேயே அந்தச் சிறப்புப் பாயிரம் அமைந்தது.

 

எளிமையான தமிழிலே கருத்தாழமும், இசை நயமும் கொண்டு இறை உணர்வைத் தூண்டும் விதத்தில் எழுதப்பட்ட நந்தனார் சரித்திரப் பாடல்கள் மிகவும் பிரபலம் அடைந்தன.  பாரதியாரின் காலத்திலேயே இது நூலாக வெளிவந்ததாயும் கேள்விப் படுகிறோம்.  பின்னர் இது நாடகமேடைகளில் நாடகமாக நடிக்கப்பட்டுப்  பின்னாட்களில் இது திரைப்படமாகவும் எடுக்கப்பட்டதாய் அறிகிறோம்.  திரைப்படம் கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டது.  பெரும்பாலான இவர் பாடல்கள் ஆதிசங்கரரின் அத்வைதக் கோட்பாட்டை ஒட்டியே அமைந்தவை எனச் சொல்லப்பட்டாலும் சிவபெருமானைக் குறித்த இவர் பாடல்கள் மிகவும் பிரபலம் அடைந்தன.  பல சங்கீத வித்வான்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும் இவர் பாடல்கள் இயற்றிக் கொடுத்தார்.  இறுதி வரையிலும் பிரம்மசாரியாக வாழ்ந்த இவர் சிவன் மேல் கொண்டிருந்த பக்தியும், ஈடுபாடும், சிவ வழிபாடும், சிவன் மேல் இயற்றிய கீர்த்தனைகளும் இன்றும் பல கர்நாடக சங்கீத வித்வான்களும், வித்வாம்சினிகளும் பாடுகின்றனர்.  இவர் மறைந்து நூற்றாண்டுக்கு மேல் ஆகியும்   தம்முடைய கீர்த்தனைகள் மூலம் உயிர் வாழ்கிறார் எனலாம்.

 

எப்போ வருவாரோ…

ராகம் : செஞ்சுருட்டி

தாளம் : ஆதி


பல்லவி

எப்போவருவாரோ எந்தன் கலிதீர எப்போவருவாரோ

அநுபல்லவி

 

செப்பியதில்லைச் சிதம்பரதேவன்     [எப்போ]


சரணம்

நற்பவரும்வந்து நாதனைத் தேடும் 

கற்பனைகள் முற்றக் காட்சிதந்தான்     [எப்போ]

அற்பசுகவாழ்வி லானந்தம் கொண்டேன் 

பொற்பதத்தைக் காணேன் பொன்னம்பலவாணன்  [எப்போ]

பாலகிருஷ்ணன் போற்றிப் பணிந்திடுமீசன் 

மேலேகாதல் கொண்டேன் வெளிப்படக்காணேன்   [எப்போ]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *