Home inscription இருட்டில் கிடக்கும் தமிழக வரலாற்றுச் சான்றுகள்!

இருட்டில் கிடக்கும் தமிழக வரலாற்றுச் சான்றுகள்!

by Dr.K.Subashini
0 comment

முனைவர் மே.து.ராசுகுமார்

கலை, இலக்கியம், கல்வெட்டு, கட்டடம், சிற்பம், ஓவியம், நுண்கலை என்று பரந்து கிடக்கும் நமது செல்வங்கள் தமிழ் மக்களது பண்பாட்டு வாழ்க்கையின் வளர்ச்சியை, உயர்வைப் பறைசாற்றுகின்றன. இவற்றின் வாயிலாக, நமது வரலாற்று, பண்பாட்டு மரபுகளை உணர்ந்து, வாழ்க்கை நெறிகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
எனவேதான், வரலாற்று அறிவை வளர்த்துக் கொள்வது ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படைத் தேவையாகிறது. தன் இனத்தின் வரலாற்றை மட்டுமல்லாது, மனித வாழ்க்கையின் முழுமையான வரலாற்றைத் தெரிந்து கொள்ளவும் மனிதன் பெரு முயற்சிகளை மேற்கொள்கிறான்.

ஒரு நாட்டின் கலை, இலக்கிய, அரசியல், சமுதாய, பொருளாதார வரலாற்றை முழுமையாக வெளிக்கொணர வேண்டுமெனில் அதற்கு அடிப்படைச் சான்றுகளாக அமையும் ஆவணங்கள் எளிதில் பயன்கொள்ளக் கிடைக்கும்படிச் செய்ய வேண்டும். பல்கலைக்கழகங்கள், ஆய்வு அமைப்புகள், தனியார் என்று பலதிறப்பட்டோரும் தாம் விழையும் வண்ணம் ஆய்வுகளை மேற்கொள்ளவும், அவ்வாய்வுகளின் அடிப்படையில் வரலாற்றை வரையவும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டும்.

ஒருமுறை எழுதப்பட்டவுடன் வரலாறு எழுதும் பணி முற்றிலுமாக முழுமை பெற்றுவிடுவதில்லை. ஒவ்வொரு புதிய சான்று கிடைக்கும்போதும், அல்லது பழைய சான்றுக்கு புதிய புரிதல் பெறும்போதும், ஆய்வு முடிவுகள் மாற்றம் பெறுகின்றன. இதனால், அவ்வப்போது வரலாற்றுக்குப் புதியபுதிய விளக்கங்களும் விரிவுகளும் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. அதனால்தான், வரலாற்றை எழுதுவதற்கான அடிப்படைச் சான்றுகளாக அமையும் ஆவணங்களை அனைவருக்கும் கிடைக்கச் செய்வது மேலான பணியாக அமைகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமைகொண்ட இலக்கியச் செல்வங்களும், ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளின் தொடர்ச்சியான கல்வெட்டுகளும் பெருமளவில் வரலாற்றுக்கு அடிப்படையாகக் கிடைத்திருக்கின்றன. கடந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கல்வெட்டுகளைப் படியெடுக்கத் தொடங்கிய பிறகுதான், இருண்டு கிடந்த தமிழ்நாட்டின் இடைக்கால வரலாறு வெளியுலகுக்கு மட்டுமல்ல, தமிழ் மக்களுக்கே புலப்படத் தொடங்கியது.

இந்திய அரசு தொல்லியல் துறையினரின் கல்வெட்டுப் பிரிவு 1887ம் ஆண்டில் தமது பணியைத் தொடங்கி, இன்றுவரை இந்தியா முழுவதுமிருந்து ஏறத்தாழ ஒரு லட்சம் கல்வெட்டுகளைப் பதிவு செய்திருக்கிறது. இதில், தமிழ்க் கல்வெட்டுகள் மட்டும் ஏறத்தாழ அறுபதாயிரம் என்ற அளவில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கல்வெட்டுக்களைப் பற்றிய சிறு குறிப்புகள் மட்டும், அதுவும் ஆங்கிலத்தில், அந்தந்த ஆண்டு அச்சிடப்பட்டு வந்த கல்வெட்டு ஆண்டறிக்கை என்னும் வெளியீட்டில் கொடுக்கப்பட்டன. ஆனால், இத்தகைய ஆண்டறிக்கைகள், கல்வெட்டுகளின் முழுமையான பாடங்களை வெளியிடவில்லை.

தென்னிந்தியக் கல்வெட்டுகள் என்ற தலைப்பில் இதுவரை பதினெட்டுத் தொகுதிகளில் சற்று ஏறக்குறைய 15,400 தமிழ்க் கல்வெட்டுகள் மட்டுமே முழுமையாக அச்சிடப்பட்டிருக்கின்றன. அதாவது, 1908 வரை (இந்திய) மத்திய அரசினால் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் யாவும் வெளிவந்துவிட்டன (இடையில் 1905 வரவில்லை). 1908க்குப் பின்னர் படியெடுத்தவற்றுள், மிகக் குறைந்த அளவு மட்டுமே சில தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது, நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்த கல்வெட்டுகளைக்கூட நம்மால் இன்னும் முழுமையாக வெளியிட முடியவில்லை.

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை, ஏறத்தாழ 5,000 கல்வெட்டுகளைப் பல தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. இவற்றுள், தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுப்பில் வந்த சிலவும் மறுபதிப்புப் பெற்றுள்ளன. இவையன்றி,
தென்னிந்தியக் கோயில் கல்வெட்டுகள், புதுக்கோட்டை கல்வெட்டுகள், திருவாங்கூர் கல்வெட்டுகள்
என்ற தலைப்பிலான தொகுதிகளிலும் வேறு சில இதழ்களிலும் பல கல்வெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் (இந்திய) மத்திய அரசு கண்டுபிடிக்கப்படும் கல்வெட்டுகளைப் பற்றிய சிறு குறிப்புகளைக் கொண்ட கல்வெட்டு ஆண்டறிக்கை கூடக் கடந்த பத்து ஆண்டுகளாக வரவில்லை. மேலும், கிடைத்துள்ள 500க்கும் மேற்பட்ட செப்பேடுகளில், 200க்கும் குறைவானவையே வெளிவந்துள்ளன. இருப்பினும், இதுவரை படியெடுக்கப்பட்ட 60,000க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில், 25,000க்கும் குறைவானவற்றின் முழு வரிவடிவங்கள் மட்டுமே அச்சில் பதிப்பிக்கப்பட்டு நமக்குத் தரப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 35,000 கல்வெட்டுகள் இருட்டறையில் மறைந்து கிடக்கின்றன.
தமிழ்நாட்டின் இடைக்கால அரசியல், சமூக, பொருளியல் வரலாற்றை ஆய்வு செய்ய முனைவோர், ஐந்தில் இரண்டு பங்குக் கல்வெட்டுகளின் முழு வரிவடிவங்களை மட்டுமே படித்துத் தங்கள் பணிகளை நிறைவேற்றி வருகின்றனர். பதிப்பிக்கப்படாத 35,000 கல்வெட்டுகளை, ஆண்டறிக்கைகளில் கூறப்பட்டுள்ள சிறு குறிப்புகளை மட்டுமே கொண்டு பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய பதிப்பிக்கப்படாத கல்வெட்டுகளின் முழுமையான பாடங்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமெனில், இவை வைக்கப்பட்டுள்ள இடமான மைசூர் செல்லவேண்டும். அங்கு சென்றாலும், அச்சிடப்படாத ஒரு சிலவற்றைக் கேட்டுப்பெற முடியுமேயன்றி, அனைத்தையும் பயன்கொள்ள வாய்ப்புகள் கிடைக்காது.

வரலாற்று ஆய்வினை மேற்கொள்ள விழைவோர் நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள், சுவடி நூலகங்கள்,
பிற வைப்பிடங்கள் என்று சான்றுகளும் ஆவணங்களும் கிடைக்கின்ற இடங்களுக்குச் சென்று பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஆனால் கல்வெட்டுகளைப் பொறுத்தவரை, அவை தமிழகம் முழுமையிலும் உள்ள நூற்றுக்கணக்கான ஊர்களில் அமைந்துள்ள கோயில் சுவற்றிலும் இன்னபிற இடங்களிலும் விரவிக் கிடக்கின்றன. இவற்றைக் குறுகிய காலத்தில் சென்று, பார்த்து, படித்துவிட இயலாது. அப்படி ஓரிரு இடங்களுக்குச் சென்றாலும், நேரடியாகப் படிக்கும் அளவுக்கு அவை தெளிவுபட அமைந்திருக்காது. வெள்ளைத் தாளில் உரிய முறையில் கறுப்பு மை ஒற்றிப் படியெடுத்துத்தான் படிக்க இயலும். இதற்கு மிகுந்த காலம் பிடிக்கும். பொருள் செலவும் கூடுதலாகும். மேலும், வரிவடிவங்களும் வேறுவேறாக இருப்பதுடன் எழுத்து மயக்கங்களும் ஏற்பட இடமளிக்கின்றன. எனவே, இதில் உள்ள இன்னல்களும் தடைகளும் மிக. எனவேதான், பிற ஆவணங்கள் – சான்றுகள் போலன்றிக் கல்வெட்டுகளை உரிய இடங்களுக்குச் சென்று பயன்படுத்திக்கொள்ள முடியாமல், அச்சில் பதிக்கப்பட்ட பாடங்களிலிருந்து -தொகுதிகளிலிருந்து மட்டுமே பயன்கொள்வது தேவையாகிறது.

இத்தகையதொரு நிலை இருந்தபோதும், இக்கல்வெட்டுகளை முழுமையாக விரைந்து வெளியிட (இந்திய) மத்திய அரசு சீரிய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. மத்திய அரசிடமிருந்து படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளைப் பெற்று, தமது முயற்சியில் இவற்றை வெளியிடத் தமிழக அரசும் முனைப்புக் காட்டவில்லை. இக்கல்வெட்டுகளின் முழு வரிவடிவங்களை அச்சில் வெளியிடுவதற்கு ஒரு சில தடைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கல்வெட்டுகள் இன்றைய தமிழ் வரிவடிவத்தில் இல்லாது, தமிழுக்கான முன்னைய வரிவடிவத்தில் இருப்பதாலும், எழுதிய முறையில் தெளிவு இல்லாமல் இருப்பதாலும் படிப்பதிலும் புரிந்துகொள்வதிலும் வேறுபாடுகள், குழப்பங்கள் ஏற்படுகின்றன. இவற்றால், கல்வெட்டுகளை வெளியிடுவதில் தடைகள் ஏற்படுகின்றன என்பது உண்மைதான். இத்தகைய படிப்பு வேறுபாடுகளை ஆங்காங்கே அடிக்குறிப்புகளாகச் சேர்த்துவிடலாம். அத்துடன், படியெடுக்கப்பட்ட கல்வெட்டுப் படிகளை வேண்டிய இடத்தில் படம் போன்று உள்ளபடியே வெளியிடலாம்.

அடுத்து, கல்வெட்டுகளில் ஸ்வஸ்திஸ்ரீ, சதுர்வேதி மங்கலம் என்பன போன்ற மிகச் சில சொற்கள் கிரந்த எழுத்துகளில் வெட்டப்பட்டுள்ளன. தமிழ்ச் சொற்களுக்கிடையே வரும் இந்தக் கிரந்தச் சொற்களை, கிரந்த எழுத்து வடிவத்தில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று மத்திய அரசின் கல்வெட்டுப் பிரிவினர் பிடிவாதமாக இருந்தனர்; இப்போதும் அப்படியே இருக்கின்றனர். கணினி வழியாக கதிர் அச்சு முறை நடைமுறைக்கு வந்து, இத்தகைய நுட்பச் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்னரும், கல்வெட்டுப் பதிப்பு விரைவுபடவில்லை.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, கல்வெட்டுகளில் உள்ள கிரந்தச் சொற்களுக்கும் தமிழ் வரிவடிவ எழுத்துகளையே பயன்படுத்தி, விரைவாகப் பல கல்வெட்டுத் தொகுதிகளை வெளியிட்டு வந்தது. ஆனால், தற்போது மீண்டும் கிரந்த வரிவடிவத்துக்கு மாறி, பணிகளை முடக்கிக் கொண்டுள்ளது.

கல்வெட்டுகளில் உள்ள தமிழ் எழுத்துகள்கூட இன்று நாம் பயன்படுத்தும் தமிழ் வரிவடிவத்தில் இல்லை. ஆனால் அச்சிடும்போது, இன்றைய தமிழ் வரிவடிவமே பயன்படுத்தப்படுகிறது. அதே போன்று, கிரந்தச் சொற்களையும் தமிழ் எழுத்துகளைக் கொண்டே அச்சிடலாம். தேவையென்றால், பிற மொழிச் சொல் அல்லது கிரந்த எழுத்தில் உள்ளது என்பதைக் காட்ட, சாய்வெழுத்துகளைப் (Italic) பயன்படுத்தலாம்.

மேலும், கல்வெட்டில் உள்ள எழுத்துகளைப் படிக்கத் தனிப் பயிற்சி வேண்டியிருப்பதைப் போலவே, கிரந்த எழுத்துகளைப் புரிந்துகொள்ளவும் முழுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அனைவருக்கும் எளிதில் புரிய, கல்வெட்டுகளில் உள்ள அனைத்தையும் இன்றைய தமிழ் வரிவடிவத்தில் வெளியிடுவதுதான் ஏற்றதாக அமையும்.
அச்சு நுட்பம் வியத்தகு வளர்ச்சி பெற்றுள்ள இன்றைய நிலையில், 35,000 கல்வெட்டுகளையும் ஒன்றிரண்டு ஆண்டுகளில்கூட வெளியிட்டுவிட முடியும். 120 ஆண்டுகளாகப் படியெடுக்கும் பணி நடைபெற்றுவந்தாலும், இப்பொழுதும் ஆண்டுக்கு 250 முதல் 300 வரையில் புதிய கல்வெட்டுகள் (இந்திய) மத்திய அரசின் கல்வெட்டுப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றைப் படியெடுக்கவும், படிக்கவும், பதிப்பிக்கவும் நான்கு கல்வெட்டு வல்லுநர்களே பணியில் இருக்கிறார்கள்.

முன்னர் தமிழ்நாட்டில் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் யாவும் உதகமண்டலத்தில் பாதுகாக்கப்பட்டன. பின்னர், அவையெல்லாம் கர்நாடகத்தில் உள்ள மைசூருக்கு மாற்றப்பட்டுவிட்டன.

ஏற்கெனவே சென்னையில் இந்திய அரசு தொல்லியல் துறையின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அண்மையில் இங்கு, கல்வெட்டுப் பிரிவு அலுவலகம் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழ்நாட்டில் படியெடுக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டுகளின் படிகள் மைசூரிலேயே வைக்கப்பட்டுள்ள வேடிக்கை தொடர்கிறது. அவை சென்னைக்குக் கொண்டு வரப்படவேயில்லை.

ஒருவேளை, சென்னையில் வெப்பநிலை தடையாக இருக்குமாயின், இன்றைய வளர்ச்சி அளவில், முழுமையாகக் குளிரூட்டப்பட்ட கட்டடத்தில் கல்வெட்டுப் படிகளை வைத்துப் பாதுகாக்கலாம். தமிழ்நாட்டு ஆய்வாளர்கள் கல்வெட்டுப் படிகளைப் பயன்படுத்துவதற்கு இது முதல்கட்ட வாய்ப்பாக அமையும்.

மத்திய, மாநில அரசுகளின் தொல்லியல் துறையினர் எவ்வகையான ஒருங்கிணைப்புமின்றி, தனித்தனியாகக் கல்வெட்டுகளைப் படியெடுக்கும் பணியினையும் வெளியிடும் பணியினையும் செய்வதால் வீண்செலவும் இரட்டிப்பு வேலையும்தான் மிஞ்சுகின்றன. இரண்டு துறைகளுடைய நோக்கங்களும் செயல்பாடுகளும் ஒன்றுதான். இருக்கிற அலுவலர்கள்தாம் வேறுவேறு. ஆனால், அவர்களது அணுகுமுறைகளும்கூட வேறுவேறு என்பதுதான் வேதனை!
இக்கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழகம் எங்கும் பரவிக் கிடக்கின்ற கோயில்களில் இருந்து படியெடுக்கப்பட்டவை. என்றாலும், பல கல்வெட்டுகள், கோயில்களை ஒட்டியுள்ள குளக்கரை போன்ற இடங்களில் கிடந்த கல்தூண்கள் போன்றவற்றிலிருந்தும், சிதைந்த கோயில் சுவற்றிலிருந்தும் படியெடுக்கப்பட்டிருக்கின்றன.
இப்படித் தனியாகக் கிடந்த அல்லது கிடக்கிற கல்தூண்கள் போன்றவற்றைக் காக்க எவ்வகையான முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. எனவே, இக்கற்களை வேறு பணிகளுக்குப் பயன்படுத்த வாய்ப்புகள் ஏற்பட்டன. இதனால், இக்கல்வெட்டுகளில் சில அழிந்து போயின. இதேபோன்று, சிதைந்த கோயில்களைப் புதுப்பிக்கும்போதும் சிதையாத கோயில்களுக்குக் குடமுழுக்கு போன்ற திருப்பணிகள் மேற்கொள்ளும்போதும், கல்வெட்டு இருக்கும் பகுதிகள் உருக்குலையக்கூடிய சூழல்கள் ஏற்பட்டன. ஆகவே, கல்வெட்டுகள் இருக்கும் இடங்களைக் காப்பதும் தேவையாகின்றன.

இந்நிலையில், 1887ம் ஆண்டு முதல் மத்திய அரசின் கல்வெட்டுப் பிரிவு படியெடுத்த கல்வெட்டுகளில் பல, தற்போது அதே பணியில் ஈடுபட்டிருக்கும் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையினருக்குக் கிடைக்காமலும் போகக்கூடும்.
மத்திய அரசு நூற்று இருபது ஆண்டுகளுக்கு மேலாக நிறைவேற்றிவரும் அதே பணியினை, தமிழ்நாடு அரசு மீண்டும் செய்ய வேண்டுவது இல்லை. அதே போன்று, நல்ல வெளியீட்டு வாய்ப்புகளைக் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினரிடம் கல்வெட்டுகளை அச்சிடும் பொறுப்பை முழுமையாக மத்திய அரசு கொடுத்துவிட முடியும்.

தமிழ்நாடு தொடர்பான ஆவணங்களாக – சான்றுகளாக இருப்பதால், மத்திய அரசு தம் பொறுப்பில் உள்ளவற்றை மாநில அரசுக்குக் கொடுப்பதில் தவறு ஏதும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. இரு துறைகளும் இணைந்து பணியாற்றினால் மேலும்மேலும் பயன்பெற முடியும்.
தொடக்க காலக் கல்வெட்டுகளில் சில, கி.மு. 3ம் நூற்றாண்டுக்கும் முன்னையவையென உறுதிப்பட்டிருக்கின்றன. புதிய சான்றுகளும், ஆய்வுகளும், தமிழ் எழுத்துகளுக்குச் சிந்துவெளிப் பண்பாட்டோடு உள்ள உறவுகளை மெய்ப்பிக்கின்றன. எனவே, செம்மொழிச் செயல்பாடுகளுடன் இயைந்து, கல்வெட்டுப் பதிப்பினையும் செம்மையுறச் செய்யவேண்டும்.

ஏட்டில் கிடந்த பண்டைய தமிழ் இலக்கியங்களை வெளியிட ஓர் சி.வை.தாமோதரனாரும், ஓர் உ.வே.சாமிநாதய்யரும் நமக்குக் கிடைத்தார்கள். இவர்களது முயற்சிகளைப் போன்றே, இருட்டில் கிடக்கும் வரலாற்று ஆவணங்களான கல்வெட்டுகளை வெளிக்கொண்டு வருவதிலும் முனைப்புகள் தோன்றவேண்டும். கல்வெட்டு ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் மட்டுமல்லாது, தமிழ்ச் சமூகமே இதனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
நன்றி: தமிழ்மணி (தினமணி)

You may also like

Leave a Comment