Home Saivism ஆறுமுக நாவலர்

ஆறுமுக நாவலர்

by Dr.K.Subashini
0 comment

திருமதி. கீதா சாம்பசிவம்

 

நாவலர் என அனைவராலும் போற்றிப் பாராட்டப்பட்ட யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் அவர்கள் 1822-ஆம் ஆண்டு சைவ வேளாளக் குடும்பத்தில் கந்தர் என்னும் பரம்பரைச் சிவபக்திச் செல்வருக்கும், சிவகாமி அம்மைக்கும் மகனாய்ப் பிறந்தார்.  யாழ்ப்பாணத்தில் நல்லூரில் பிறந்த இவர் வடமொழியும், தமிழும் படித்தார்.  இரண்டிலும் நல்ல புலமை பெற்று விளங்கினார்.  நல்லூரில் உள்ள  கிறிஸ்தவப் பள்ளியில் சேர்ந்து ஆங்கிலமும் கற்று அதிலும் புலமை பெற்றார்.  படிப்பு முடிந்ததும் ஜஃப்னாவில் உள்ள வெஸ்லி மிஷன் பள்ளியில் ஆங்கிலமும், தமிழும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்.  கூடவே பள்ளியின் நிறுவனரின்  வேண்டுகோளுக்கு ஏற்ப கிங் ஜேம்ஸ் பைபிளையும் மற்றக் கிறிஸ்துவ இலக்கியங்களையும் மொழி பெயர்க்கும் வேலையைச் செய்து வந்தார்.  1841-ஆம் ஆண்டிலிருந்து 1848-ஆம் ஆண்டு வரையிலும் அந்தப் பள்ளியில் வேலை பார்த்ததன் மூலம் தன்னுடைய வாழ்க்கையின் உண்மையான குறிக்கோள் எதுவாக இருக்க வேண்டும் என்பதை அலசி ஆராய்ந்து தெரிந்து கொண்டார்.  அதிலும் அப்போது கிறிஸ்துவ மிஷனரிகளின் பிரசாரங்களால் மக்கள் மனம் கொஞ்சம் கொஞ்சமாய் மாறிக்கொண்டிருந்தது.  மொழிபெயர்ப்புக்காக பெர்சிவல் பாதிரியுடன் சென்னைக்கு வந்து பைபிளை அச்சிட்டுக்கொண்டு மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பினார்.

 

வேதம், ஆகமம், புராணங்கள் போன்றவற்றில் மிகுந்த தேர்ச்சி பெற்ற நாவலர் சைவர்களுக்குத் தங்கள் சமயம் பற்றிய அடிப்படை அறிவே இல்லாமல் இருப்பதையும், சரியானதொரு வழிகாட்டி அமையவில்லை என்பதையும் கண்டார்.  அதோடு வாத, விவாதங்களிலே பங்கு பெற்றுத் தம் சமயத்தைக் குறித்து ஆணித்தரமாக எடுத்துச் சொல்வதற்கும் இயலாமல் இருப்பதையும் புரிந்து கொண்டார்.  ஆகவே சைவ சமயத்திற்குத் தொண்டாற்றுவதையே தம் வாழ்நாளின் குறிக்கோளாய்க் கொள்ள நினைத்து வெஸ்லி மிஷன் பள்ளியின் நிறுவனர் அதிகச் சம்பளத்தோடு தந்த வேலையையும் மறுத்துப் பள்ளி ஆசிரியர் வேலையையே உதறி எறிந்தார்.  திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றும் நிச்சயித்துக்கொண்டு தம் குடும்பத்தையும் துறந்து சொத்து சுகங்களையும் துறந்தார்.  தம் நான்கு சகோதரர்களிடமும் எதையும் பெற்றுக்கொள்ளவில்லை.   அன்றிலிருந்து இறுதி வரையிலும் அவருடைய கொள்கைகளில் உறுதியும், உண்மைத்தன்மையும் இருப்பதாய்க் கருதும் நபர்களிடமிருந்து மட்டுமே தேவையான உதவிகளைப் பெற்றார்.  கோயில்களுக்குச் சென்று தேவார, திருவாசகங்களைப் பாடி மக்கள் மனதில் புத்துணர்ச்சியை ஊட்டினார். இவருடைய முதற் பிரசங்கம் வண்ணார்பண்ணை வைத்தீசுவரன் கோயிலில் நடந்தது.  1847-ஆம் ஆண்டு நடந்த இதைத் தொடர்ந்து ஏழு வருடங்கள் இவ்வாறு சைவ சமயத்தைக் குறித்தும் அதன் சித்தாந்தம் குறித்தும் பேசிச் சொற்பொழிவாற்றி வந்தார். யாழ்ப்பாணத்து சைவ மக்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார்.   பைபிளின் மொழிபெயர்ப்புத் தொடர்ந்து கொண்டிருந்ததால் அதிலுள்ள கேள்விகளுக்கும் சரியான மறுமொழியை இவரால் தர முடிந்தது.  சொல்லப் போனால் பைபிளின் மூலம் நடந்து வந்த பிரச்சாரத்திற்கு ஒரு மாற்றாகவே இவருடைய பிரசாரம் அமைந்தது. 

 

1848-ஆம் ஆண்டு பெர்சிவல் எனப்படும் வெஸ்லி பள்ளித் தலைமை ஆசிரியரைப் பிரிந்து தம்முடைய சொந்தப் பள்ளியை நிர்மாணித்தார். வண்ணார்பண்ணையில் ஏற்படுத்தப்பட்ட அந்தப் பள்ளிக்கு சைவப் பிரகாச வித்தியாசாலை என்ற பெயர் சூட்டப்பட்டது.  அதுவரை மத்திய கல்லூரியில் 3 பவுன் சம்பளம் பெற்றுக்கொண்டு ஆசிரியராக இருந்ததையும் தூக்கி எறிந்து முழுநேர சமயப்பணியைத் துவக்கினார்.   பள்ளிப்பிள்ளைகளுக்குத் தேவையான பாடநூல்கள் அச்சிட யந்திரம்தேவையாக இருந்தது.  ஆகவே 1949-ஆம் வருடம் மீண்டும் நல்லூர் சதாசிவம் பிள்ளையுடன் சென்னைக்கு வந்தார்.  வந்த சமயம் திருவாவடுதுறை ஆதீனத்தில் சமயச் சொற்பொழிவாற்றி அனைவரையும் கவர்ந்தார்.  அங்கேதான் அவருக்கு நாவலர் பட்டமும் வழங்கப்பட்டது.  சிலகாலம் இந்தியாவில் சென்னையில் தங்கி சூடாமணி நிகண்டுரையும், செளந்தரியலங்கரி உரையும் அச்சிற் பதிப்பித்தார்.  பின்னர் யாழ்ப்பாணம்  திரும்பினார்.  தமது இல்லத்திலேயே வித்தியா அனுபாலன யந்திரசாலை என்னும் பெயரில் ஒரு அச்சுக்கூடத்தை நிறுவினார்.  மாணாக்கர்கள் பயன்பெறும் விதத்தில் பாலபாடம், கொன்றைவேந்தன், ஆத்திசூடி, போன்றவைகளும், சிவாலய தரிசன விதி, சைவ சமய சாரம், கொலை மறுத்தல், நன்னூல் விருத்தியுரை, திருமுருகாற்றுப்படையுரை, திருச்செந்தினிரோட்டக யமகவந்தாதியுரை  போன்ற பல நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்.  திருத்தொண்டர் புராணத்தை வசன நடையில் எழுதி வெளியிட்டார். இவருடைய வசன நடையைப் புகழ்ந்து ஆசிரியர் கல்கி கிருஷ்ண மூர்த்தி இவ்விதம் கூறியுள்ளார்.

 

“பழைய காலத்தில் தமிழ் வசனம் அபூர்வமாயிருந்தது. அபூர்வமாயிருந்த வசனமும் சங்கச் செய்யுள் நடையைவிட கடினமான நடையில் இருந்தது. இல்லையென்றால், இலக்கண வழுக்கள் நிறைந்த கொச்சைத் தமிழில் ஒரு பக்கம் முழுவதையும் ஒரே வாக்கியத்தினால் நிறைக்கும் அசம்பாவித வசன நடையாயிருந்தது. பிழையில்லாத எளிய தமிழ் வசன நடையை முதன் முதலில் கையாண்டு காட்டி வெற்றி பெரியார் ஸ்ரீ ஆறுமுக நாவலரே ஆவர்.”

 

மேலும் தமிழில் மறுமலர்ச்சி என்பதே இவராலேயே ஏற்பட்டது என்றும் கல்கி கிருஷ்ணமூர்த்தி கூறி உள்ளார்.

 

தமிழ்நாட்டில் இருந்தது போல் ஆதீனங்கள், மடங்கள் ஆகிய எதுவும் இலங்கையில் இல்லை.  மதமாற்றம் என்பது ஆளவந்தவர்களால் தீவிரமாக்கப்பட்டதொரு சூழ்நிலையில் நாவலர் தன்னந்தனியராக இருந்து அவரே ஓர் அமைப்பாக இயங்கினார்.  சைவசமய நூல்களைச் சரியானபடி போர்க்கலன்களாக இயங்கும்படி படைத்தார்.  அப்படி அவர் படைத்த நூல்களில் குறிப்பிடத்தக்கவை சைவ சமய தூஷணப் பரிகாரம், 1854-ஆம் ஆண்டிலும் அதற்கு முன்னர் சுப்பிரபோதம் 1853 இலும் வெளிவந்து அனைவரின் பேராதரவைப் பெற்றது என்று சொல்வதை விட மாற்றுச் சமயத்தினரும் வியந்து பாராட்டத்தக்க அளவுக்குச் செல்வாக்கைப் பெற்றது என்பதே உண்மையாகும்.  கிறிஸ்தவப் பாதிரிமார்களே இவருடைய கிறிஸ்தவமதக் கண்டனங்களை வியந்து பாராட்டி இருக்கிறார்கள் என்றால் இவரின் எழுத்தாற்றலைக் குறித்து என்ன சொல்ல முடியும்! 

 

அதன் பின்னர் சைவ சமய வழிபாட்டு முறைகளை விளக்கும் நூல்களைச் சிறிது சிறிதாக வெளியிட்டார்.  நித்ய கர்ம அனுட்டான விதி, ஆலய தரிசன விதி போன்றவை அதில் குறிப்பிடத்தக்கவை.  யாழ்ப்பாணத்து நல்லூரின் சைவ சமயம் கந்தபுராணத்தில் குறிப்பிடப்படும் கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டது.  ஆனால் கிறிஸ்துவப் பாதிரிமார்களோ சுப்பிரமணியர் வழிபாட்டையும் நல்லூரில் இருந்த கந்தசாமிக் கோயிலையும் குறித்து இழிவாகப் பேசி வந்தனர்.   இதை முறியடிக்க நாவலர் சுப்பிரமணிய போதம் என்னும் நூலை எழுதி வெளியிட்டார்.  கந்தபுராணத்துக்கு இவர் எழுதிய உரையும் வெளிவந்தது.  இவருடைய கந்தபுராணச் சொற்பொழிவுகளும் பெரும் ஆதரவைப் பெற்றன.  உயிர்ப்பலியுடன் கூடிய சிறு தெய்வ வழிபாடுகளை முற்றிலும் எதிர்த்தார்.  ஆகமவழியான கோயில்களில் முறைப்படி ஆகமம் கற்றவர்களே வழிபாடுகள் செய்யத் தக்கவர்கள் எனக் கூறினார்.  தேவதாசிகள் முறை, வாணவேடிக்கைகள், கோயில்களில் ஊழியர்கள் செய்யும் அட்டூழியம் போன்றவற்றையும் வெளிப்படையாக எதிர்த்து வந்தார்.

 

இவர் சென்னை வந்தபோது தமிழ்நாட்டில் தொடர்ந்து நான்கு வருடங்கள் தங்கினார். சென்னையைத் தம் சென்மபூமியிற் சிறந்தது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.  தமிழ்நாட்டில் இருந்த காலகட்டத்தில் சிதம்பரத்தில் சைவத் தொண்டுகள் செய்யவெனச் சென்ற நாவலர் அங்கே ஓர் பாடசாலையையும் ஆரம்பித்தார்.  1864-ஆம் ஆண்டு சைவப் பிரகாச வித்தியாசாலை என்னும் பெயரில் தொடங்கினார்.  சென்னை தங்கசாலையில் வித்தியாநுபாலன யந்திரசாலையும் நிறுவிப் புத்தகங்களை அச்சிட்டார். தமிழ்ப்பணி வேறு, சைவ சமயப்பணி வேறு என வலியுறுத்தி வந்தார்.  சைவ சமயத்தையும், தமிழையும் வேறுபடுத்திக்காணவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.  படிப்பறிவில்லா ஜனங்களே சைவ சமயத்தைத் தமிழ்ச்சமயம் எனவும், சைவக்கோயிலைத் தமிழ்க்கோயில் எனவும் கூறுவதாகவும் தமிழ் என்பது சமயம் அல்ல எனவும் அது ஒரு மொழி எனவும் தெளிவுபடக் கூறினார்.  சிதம்பரத்தில் இவர் தங்கி இருந்த சமயம் வள்ளலார் வடலூரில் பிரபலம் அடைந்திருந்தார்.  சிதம்பரம் கோயிலில் வள்ளலாரால் பாடப்பட்ட திருஅருட்பா நாவலருக்கு உகந்ததாக இல்லை.  அதைத் தீவிரமாக எதிர்த்தார்.

 

1868-ஆம் ஆண்டு சென்னையிலும், சிதம்பரத்திலும் மாறி மாறி அருட்பா மறுப்பு குறித்துச் சொற்பொழிவுகள் இயற்றி வந்தார்.  அவ்வுரைகளின் அடிப்படையில் போலி அருட்பா மறுப்பு என்னும் நூலும் வெளிவந்தது.  நாவலரின் சமய வாழ்க்கையில் இது சற்றுக் கசப்பான நிகழ்வாகும்.  வள்ளலாரையும், சிதம்பரம் கோயிலின் தீக்ஷிதர் ஒருவரையும் எதிர்த்துக் கடலூர் மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில்  நாவலரால் வழக்குத் தொடுக்கப்பட்டது.  இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிதம்பரம் சபா நடேச தீக்ஷிதருக்கு 50ரூ அபராதமும் கட்டத்தவறினால் ஒரு மாதச் சிறைத்தண்டனையும் கொடுத்தார்.  வள்ளலாரின் மேல் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமின்மையாலும், வள்ளலார் தாம் நாவலரை எதுவும் சொல்லவில்லை என்றதாலும் தள்ளுபடி செய்யப்பட்டது.  என்றாலும் இவ்வழக்கின் மூலச்சான்றுகள் சரிவரக் கிடைக்கவில்லை.  பத்திரிகைச் செய்திகளை ஒட்டிப் பலரும் எழுதி இருப்பவையே கிடைக்கின்றன.

 

சைவ சமயப் பிரசாரத்தில் தீவிரமாக இருந்த நாவலர் சமூக சீர்திருத்தத்தில் இக்கால நோக்கின்படி ஒரு பிற்போக்குவதி எனப்பட்டார்.  வர்ணாசிரமத்தை ஆதரித்தும், தீண்டாமைக் கருத்துக்களை ஆதரித்தும் தம் சைவ வினா-விடை புத்தகத்தில் எழுதி உள்ளார்.  இவ்வளவு அருந்தொண்டாற்றிய நாவலரின் கடைசிப் பிரசங்கம் 1879-ஆம் ஆண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருநக்ஷத்திரமான ஆடி சுவாதி தினத்தன்று நடந்தது.  வண்ணார்பண்ணையில் நடந்த அந்தப் பிரசங்கத்திற்குப் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் குன்றினார் நாவலர்.  1879-ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 18-ஆம் நாள் மிகவும் உடல்நலம் குன்றி குளிக்கக் கூட முடியாமல் இருந்தார் நாவலர்.  வேறொருவரைக் கொண்டு அன்றாட வழிபாடுகளைச் செய்ய வைத்தார்.  கார்த்திகை 21-ஆம் நாள் வெள்ளியன்று இரவு அடியார்களை தேவாரம், திருவாசகம், போன்றவற்றை ஓதச் சொல்லிக் கேட்டவண்ணம் கங்காதீர்த்தம் அருந்தி, விபூதியைத் தரித்துக்கொண்டு, உருத்திராக்ஷ மாலையையும் அணிந்து கொண்டு பஞ்சாக்ஷரத்தை நினைத்தவண்ணம் தலைமேல் கைகளைக்கூப்பிய வண்ணம் இறைவனடி சேர்ந்தார்.

 

ஆறுமுக நாவலருக்கெனத் தனி இணைய தளம் உள்ளது. அவரின் சிலையும், மண்டபமும் யாழ் நல்லூரில் அமைக்கப்பட்டுள்ளது.

 

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆறுமுக நாவலர் நினைவாலயம்

 

 

 

You may also like

Leave a Comment