Home village_deities அய்யனாரா? ஐயனாரா?

அய்யனாரா? ஐயனாரா?

by Dr.K.Subashini
0 comment

முனைவர் கி, காளைராசன்

 

அன்னை பார்வதிதேவியின் புதல்வரானவர் விநாயகப் பெருமான்.  பரமேசுவரருக்குப் புதல்வர்களாக முருகன், வீரபத்திரர், மற்றும் பைரவர் உள்ளனர்.  பரமேசுவரருக்கும் மோகினி உருவத்தில் இருந்த மகாவிஷ்ணுவுக்கும் பிறந்தவர் ஐயனார்.  இவ்வாறாகத் தெய்வங்களின்  தோற்றம், உருவ அமைப்பு, மற்றும் அருளும் தன்மை ஆகியவற்றை அறிந்த நமது முன்னோர்கள் அவர்களை வணங்கி வழிபட்டுப் பலனடைந்துள்ளனர்.  
 
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று ஒளவையார் கூறியுள்ளார்.    ஆனால் ஐயனார் கோயில் இல்லாத கிராமமே தமிழகத்தில் இல்லை என்று சொல்லலாம். 
 
காரணகாரியம் கருதி, ஒவ்வொரு ஐயனாருக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கும்.  இருப்பினும் பொதுவாக ஐயனாரின் பெயருக்கான காரணம், தோற்றம், உருவம், தேவியர், பரிவார தெய்வங்கள் அவரது கீர்த்தி மற்றும் அவரை வணங்குவோர் அடையும் பலன்கள் இவற்றைக் காண்போம்.
 
அய்யனாரா? ஐயனாரா?

"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி" தமிழ்க்குடியாகும்.  உயிர் உடல் ஆயுதம் இவற்றோடு தோன்றிய தமிழர் தாம் பேசும் தமிழ் மொழியிலும் உயிர் எழுத்துக்களையும். மெய்யெழுத்துக்களையும் ஆயுத எழுத்துக்களையும் உருவாக்கிச் சங்கம் வைத்து ஆராய்ந்து தமிழ் மொழியை வளர்த்துள்ளனர்,
 
தமிழில் எழுத்துக்களை குறில் எழுத்துக்கள் என்றும் நெடில் எழுத்துக்கள் என்றும் ஒற்றெழுத்துக்கள் என்றும் பிரித்துள்ளனர்.  குறில் எழுத்துக்கள் ஒரு மாத்திரை அளவு நேரம் ஒலிக்கும். நெடில் எழுத்துக்கள் இரண்டு மாத்திரை அளவு நேரம் ஒலிக்கும். மெய்யெழுத்துக்கள் அரைமாத்திரை அளவு நேரம் ஒலிக்கும்.  எனவே தமிழில் ஒவ்வொரு சொல்லும் மிகவும் சிறப்புப் பெற்றனவாகத் திகழ்கின்றன.  உதாரணமாக "மகன்" என்று சொல்லுக்கும் "மகான்" என்ற சொல்லுக்கும் மிகப் ​பெரிய வேறுபாடு உண்டு.  பகவனுக்கும் பகவானுக்கும்  வேறுபாடு உண்டு.  இவ்வாறாகப் பல உதாரணங்களைக் கூறலாம்,  எனவே சொல்லில் உள்ள எழுத்துக்களின் ஒலிஅளவைக்கூட்டினாலோ அல்லது குறைத்தாலோ பொருள் மாறுபடும். 

 

"சொல்லுக சொல்லின் பொருள் உணர்ந்து" என்பதற்கேற்பத் தற்போது விவரம் ​தெரிந்தவர்கள் ஐயனார் என்று எழுதுகின்றனர்.  ஆனால், சிலர் அய்யனார் என்றும் எழுதுகின்றனர்.
 
ஐயனார் என்ற சொல்லில் "ஐ" என்பது நெடில் எழுத் தாகும் இரண்டு மாத்திரை அளவு உள்ளது.  ஆனால்,  "அ" என்பது குறில் ஒரு மாத்திரை அளவு உள்ள தாகும். "ய்" என்பது மெய் யெழுத்து அரை மாத்திரை அளவு உள்ளதாகும், எனவே "அய்" என்று எழுதினால் ஒன்றரை மாத்திரை அளவு தான் ஒலிக்கும்.
 
ஐ நெடில் =  2 அளவு
அ குறில் = 1 அளவு
ய் ஒற்று  =  ½  அளவு
அய்  = 1+½  = 1 ½ அளவு
 
"ஐ" என்றால் தமிழில் தலைவன் என்று பொருள்.  "ஐயன்" என்றால் தலைவனானவன் என்று பொருள்.    "அய்" என்றால் பொருள் ஏதும் இல்லை.  எனவே  நாம் வணங்கும் தெய்வத்தின் பெயரை நாமே குறைத்து ஒலிப்பதும் கூறுவதும் எழுதுவதும் தவறாகும்.    எனவே "ஐயனார்" என்றே கூறவேண்டும், எழுதவேண்டும், படிக்க வேண்டும்.  இதேபோல் "ஐயா" என்றுதான் எழுதவேண்டும்.  "அய்யா" என்று எழுதக்கூடாது.  "ஐயா" என்றால் தலைவர் என்று பொருள்.  அய்யா என்றால் பொருள் ஏதும் இல்லை.
 
 
ஐயனை அறிந்து கொள்வோம்
 
தோற்றம்
தாருகாவனத்திலே மகரிஷிகளின் அகங்காரத்தை அழிப்பதற்காக வேள்வியைக் குலைக்க வேண்டியிருந்தது.  இதற்காகப் பரமேசுவரன் பிட்சாடனர் உருவமும், மகாவிஷ்ணு மோகினி உருவமும் கொண்டனர். 
 
பிட்சாடனர் மகரிஷிகளின் பத்தினிகள் வாழும் வீட்டுத் தெருக்களிலே சென்று பிச்சை கேட்டார்.  அவரது தோற்றத்தைக் கண்டவர்களின்  மனத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது. 
 
மோகினியானவள் ரிஷிகள் வேள்விகள் செய்யும் இடத்திற்குச் சென்று அவர்களின் மனத்தை அலைபாயச் செய்தார்.  இதனால் வேள்வி தடைபட்டது. 
 
ஆனால், பிட்சாடனர் மோகினியின் உருவத்தில் காமமுற்று அவளை அடையவேண்டி விரட்டிச் சென்றார்.
 
அப்போது காட்டுக்குள்ளே கண்மாய்க்கரையில் பிறந்தவர் ஐயனார் அல்லது சாஸ்தா ஆவார்.
 
ஐயனார் மாசிமாதம் தேய்பிறையில் அமாவாசைக்கு முதல்நாள் சிவராத்திரி அன்று பிறந்தார்.
 
வடிவம்
ஐயனார் சர்வேசுவரனைப் போன்ற தோற்றம் உடையவராய் இருப்பார்.  கிழக்குத்திசை நோக்கி அமர்ந்திருப்பார்.   மார்பில் பூணு}ல் அணிந்திருப்பார்.  இளைஞரைப்போன்றவர்.   விரிந்து பரந்த முகத்தையும் மார்பையும்  உடையவர்.   தங்கநிறம் அல்லது சிவப்பு  நிறமானவர். கீரீடம் அணிந்திருப்பார்.  கருத்த அடர்த்தியான சுருண்ட முடியை உடையவர். வலது காதில் குழையும் இடதுகாதில் குண்டமும்  அணிந்திருப்பார்,மற்றும் சர்வேசுவரனுக்கான அனைத்து ஆபரணங்களையும் அணிந்திருப்பார்.  சந்தனம் பூசியிருப்பார். பீடத்தின் மீது நன்கு நிமிர்ந்து உட்கார்ந்திருப்பார்.
வலதுகையில் தண்டம் அல்லது தடி வைத்திருப்பார்.  இடதுகையை இடதுகாலின் மீது சார்த்தியது போல் வைத்திருப்பார், இடதுகாலை மடித்து பீடத்தின் வைத்துக்கொண்டு வலதுகாலை கீழே தொங்கவிட்டிருப்பார். 
 
கண்மாய்க்கரை அல்லாத இடங்களில் உள்ள ஐயனார் நின்றபடி இருப்பார்.  ஐயனார் நிற்கும் ​​கோயில்களில் தேவியர்களும் நின்றபடி இருப்பர். சாந்த குணமுடையவர். நாய், கோழி, யானை, குதிரை இவற்றுடன் விளையாடும் குணம் உடையவர்.   பொழுதுபோக்காகவும் விளையாட்டாகவும் பாடிக்கொண்டிருப்பவர்.  யானை வாகனம் உடையவர்.  யானைக்கொடிமரத்தை உடையவர்.   வெள்ளைக்குதிரையை உடையவர்.
 
தேவியர் இருவர்
சிறப்பான காரணகாரியங்கள் கருதி சில ஊர்களில் தேவியர்களுடன் சேர்ந்திருக்காமல், ஐயனார் தனித்தும் இருக்கிறார்.   இவ்வாறாகத் தனித்து இருக்கும் ஐயனாரை பாலசாஸ்தா என்று அழைக்கின்றனர். 
 
பாலசாஸ்தா ஐயனார் மிகவும் துடுக்கானவராகவும் துடியானவராகவும் விளங்குகின்றார்.
 
பொதுவாக, ஐயனாருக்குப் பூர்ணாதேவி, புஸ்கலாதேவி என இரண்டு தேவியர் உள்ளனர்,  ஐயனார் தேவலோகத்தைச் சேர்ந்தவர்.  பூலோகத்தில் அவதரித்தவர்.  எனவே தேவலோகத்தைச் சேர்ந்த புஸ்கலாதேவியும் பூலோகத்தைச் சேர்ந்த பூர்ணாதேவியும் துணைவியராக உள்ளனர்.

 

இவர்களது தலையானது ஐயனாரின் தோள்ப்பட்டை உயரத்தில் இருக்கும்.  ஐயனாரின் அருகில் உள்ள கையில் மலரைப் பிடித்தபடியும், ஐயனாரின் அருகில் உள்ள காலை மடித்துப் பீடத்தின் மீது வைத்துக் கொண்டு மற்றொரு காலைக் கீழே தொங்கவிட்டபடியும்  அமர்ந்திருப்பர்.
 
புஷ்கலை என்றால் பூவைப்போன்ற பண்புடையவள் என்று பொருள்.  பூ என்று பொதுவில் சொன்னால் அது தாமரையைக் குறிக்கும்.  எனவே புஷ்கலை என்றால் தாமரை மலரைப்போன்றவள்.  மலர்ந்த முகமுடையவள், பரந்த எண்ணமுடையவள், மணம் நிறைந்தவள்.   தங்க நிறமானவள். 

பூரணம் என்றால் நிறைவு, பௌர்ணமி என்று பொருள் எனவே, பூரணை என்றால் மனநிறைவானவள் முழுமதி போன்றவள் என்று பொருளாகும்.  

பாரிவார தெய்வங்கள்
இந்திரன், அக்னி, எமதர்மன், நிருதி, வருணன், வாயு, குபேரன் ஈசானியன் ஆகிய எட்டு திசைதெய்வங்களும், யோகிகள், சித்தர்கள், வித்யாதர்கள், கின்னரர்கள் முதலியோர் ஐயனாரை வணங்கியபடி இருப்பர்.

ஐயனாhpன் பாpவார தெய்வங்களாக கருப்பணசாமி, வீரபத்திரர், இடும்பன், நடுக்காட்டான், நடாள், ஆண்டி, நொண்டி, இருளப்பன், சின்னான், சன்னாசி, மூக்கன் மற்றும் சோணை முதலிய ஆண் தெய்வங்களும், காளி, நீலி, ராக்காயி, ராக்கச்சி, கருப்பாயி, சடைச்சி, இருளாயி, செகப்பி, மூக்காயி, பேச்சி, ஏழைகாத்த அம்மன் மற்றும் சப்த(ஏழு) கன்னியர்கள் முதலிய  பெண்தெய்வங்களும் பரிவார தெய்வங்களாக உள்ளனர்.  நாய், ஆடு, மயில், கோழி இவைகள் ஐயனாருடன் இருக்கும்.

உணவு
ஐயனார் சுத்தசைவமாகும். சர்க்கரைப்பொங்கல் படைக்கப்படும்.  ஆனால் இவரது பரிவார தெய்வங்களுக்கு மதுபானங்கள் வைத்து ஆடு, கோழி பலியிடுகின்றனர். பலியிடும்போது  ஐயனார் சன்னதியை மூடிவைத்து விடுவார்கள், அல்லது திரையிட்டு விடுவார்கள்.  கிராமங்களில் துணியை வைத்து ஐயனாரை மறைத்துவிடுகிறார்கள்.

கோயில்
ஐயனார் தோன்றிய இடம் கண்மாய்க்கரையாகும். இதன் காரணமாகவே ஐயனார் கோயில்கள் கண்மாய்க் கரையில் மடை அல்லது களுங்கு அருகே இருக்கும்.   சில ஊர்களிலே நீர்நிலைகளின் அருகில் கோயில் இருக்கும்.
 
கோயிலின் நுழைவாயிலின் இடத்தே விநாயகரும் வலத்தே சுப்பிரமணியரும் உள்ளனர்.
 
மடப்புரம் காளியம்மன்
ஐயனாருக்கு முன்னே இரண்டு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றhக இரண்டு பொpய குதிரைகள் இருக்கும்.  இவைகளுக்குச் சேமக்குதிரை என்று பெயர்.  இக்குதிரைகள் முன்னங்கால்களைத் தூக்கிய படி இருக்கும்.  அவற்றின் கால்களைத் தங்களது தோள் களில் தாங்கியபடி ஒவ்வொரு குதிரைக்கும் இரண்டு பூதங்கள் நிற்கும். இப்பூதங்களுக்கு நடுவே, குதிரைக்குக் கீழே காளி நிற்பாள்.

கோயில் பூசாரி
பூணு}ல் அணிந்தும்  அசைவம்(மாமிசம்) உண்ணும் வழக்கமுடைய வேளார் பட்டம் பெற்ற குயவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஐயனார் கோயில்களில் பரம்பரை பூசாhpகளாக உள்ளனர்.   பூணூல் அணியாதவரும் மீசை வைத்திருப்பவரும் ஐயனாருக்குத் தொண்டு செய்ய அனுமதியில்லை.
 
திருவிழாக்கள்
சிவராத்திரி அன்று ஐயனார் பிறந்தவர் என்பதால் அன்று வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன.   அன்றையதினம் ஐயனாரைக் குலதெய்வமாகக் கும்பிடுவோர் அனைவரும் அவரவர் குடும்பத்தினருடன் ஒன்றாகக் கூடிவந்து வழிபடுகின்றனர்.

 எருதுகட்டுதல் என்ற விழாவில் ஊர் மக்கள் தங்களது ஆடுமாடுகளை ஐயனாருக்கு காணிக்கையாகக் கொடுக்கின்றனர்.

 தைப்பொங்கலை அடுத்து வரும் மஸ்ரீ;சுவிரட்டு திருவிழாவில் ஐயனார் கோயில் காளைமாடுகளையும், தங்களது வீட்டில் உள்ள மாடுகளையும் அவிழ்த்து விரட்டிவிடுகின்றனர்.   இவற்றை இளைஞர்கள் பிடிக்கின்றனர்.

 புரவிஎடுத்தல் அன்று ஐயனார் கோவிலில் உள்ள சேமக்குதிரைகளைப் போலச் சிறிய மண்குதிரைகளைச் செய்து மக்கள் அனைவரும் திருவிழா அன்று அவற்றை எடுத்துச் சென்று கோயிலில் சேர்ப்பர்.   சிலர் நேர்த்திக்கடனாகவும் செய்கின்றனர்.

முளைப்பாரி எடுத்தல் என்ற விழாவில் அனைத்துத் தானியங்களையும் முளைகட்டிவைத்து, அவற்றைப் பெண்கள் தலைகளில் சுமந்து சென்று கோயிலில் வைத்து விழாக்கொண்டாடுகின்றனர்.  சில ஊர்களில் இவ்விழாவை அம்மன் கோயில்களிலும், சில ஊர்களில் இவ்விழாவை ஐயனார் கோயிலிலும் கொண்டாடுகின்றனர்.

பிரசாதம்
சிவன்கோயிலில் விபூதியும், அம்மன்கோயிலில் குங்குமமும், விஷ்ணு கோயிலில் துளசித் தீர்த்தமும் பிரசாதமாக வழங்கப்படும்.  ஐயனார் கோயிலில் சந்தனமும் சுத்தமானநீரும் பிரசாதமாக வழங்கப்படும்.  இவற்றுடன் விபூதியும் குங்குமமும் வழங்கப்படும்.

காவலுக்குக் கருப்பர்
ஐயனாhpன் பரிவார தெய்வங்களில் ஒன்றhன கருப்பர் காவல் தெய்வமாவார்.  இவர் கையில் அரிவாளுடன் வெள்ளைக் குதிரையில் ஏறி,  நாய் உடன் வர,  ஊரை வலம் வந்து காவல் செய்வார்.  
அகிலமே வணங்கும் ஐயனார்
ஐயனார் என்பவர் எல்லோருக்கும் தலைவன் ஆவார். இதனால் அனைத்து சமூகத்தினரும் சாதிவேறுபாடு இல்லாமல் ஐயனாரைக் குலதெய்வமாக வணங்கி வழிபடுகின்றனர். இவ்வுலகம் முழுமையும் இவரது தலைமைக்குக் கட்டுப்பட்டே நடக்கிறது. 

வழிபடுவதால் பயன்
ஐயனாரை வழிபடுபவர்கள், "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்பதற்கு உதாரணமாய் இருப்பர்.   பிறருடன் உறவுமுறை கொண்டு பழகுவர்.  பிறரிடம் கேலி கிண்டல் பேசி அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்வர்.

ஐயனாரை வழிபடுவதால், பில்லி சூனியம் விலகும், நல்லபுத்தி கிடைக்கும். எதையும் ஆராய்ந்தறிந்து செய்வர். தவறு செய்தவர்களிடமும் அன்பாக இருப்பர். நல்ல தீர்ப்பு வழங்குவர். வீடுகளில் வளர்ப்புப் பிராணிகள் நிறைந்திருக்கும். தண்ணீரும் விவசாயமும் பெருகும்.  தானியம் சேரும்.  நற் சுகத்தை அடைவர். 

ஐயனாரும் ஐயப்பனும்
சிவபெருமானுக்கும் மோகினி(பெண்வடிவில் இருந்த மகாவிஷ்ணு)க்கும்  பிறந்தவர்கள் என்ற அடிப்படையில் ஐயனாரும் ஐயப்பனும் ஒருவரே என்று சிலர் கூறுகின்றனர்.  இக்கருத்தானது, தனித்து இருக்கும் பாலசாஸ்தா என்ற ஐயனாருக்கும் ஐயப்பனுக்குமே பொருந்தும்.  ஆனால் தம்பதிசமேதராக தேவியருடன் வீற்றிருந்து அருளும் ஐயனாரும் ஐயப்பனும் வேறுவேறானவர்கள் என்பதைக் கீழ்க்கண்ட செய்திகளால் நன்கு அறியலாம்.
 
ஐயனார் என்பவர் தெய்வம், மனித அவதாரம் எடுக்காதவர்.   ஆனால், ஐயப்பன் மனிதனாகப் பிறந்தவர்.

ஐயனார் கண்மாய்க்கரையில் தெய்வமாகப் பரமேசுவரன் மோகினியால்  தோற்றுவிக்கப் பெற்றவர். ஆனால்,
 
ஐயப்பன் காட்டில் குழந்தையாகக் கண்டெடுக்கப் பெற்று அரசனால் வளர்க்கப் பெற்றவர்.
ஐயனார் ஒரு குடும்பஸ்தர்.  இரண்டு தேவியருடனும் பாpவார தெய்வங்களுடனும் ஆட்சி செய்பவர்.   ஆனால் ஐயப்பன் ஒரு யோகி.   சீவசமாதியில் நித்தியயோகியாய் இன்றும் இருப்பவர்.
 
ஐயனார் இடதுகாலை மடித்து வலதுகாலை தொங்கவிட்டு அமர்ந்திருப்பார்.  ஆனால், ஐயப்பன் இரண்டு கால்களையும் மடித்து முழங்கால்கள் மேலே தூக்கியவாறு இருக்கும்படி அமர்ந்திருப்பார்.
இதனால் ஐயனாரும் ஐயப்பனும் வேறுவேறானவர்கள் என்பது விளங்கும்.
ஐயனாரை வணங்கி வழிபட்டு வாழ்பவர்களின் வாழ்க்கையானது  பிறருக்குத் துன்பமில்லாமல் மகிழ்ச்சி யைக் கொடுப்பதாக அமைந்திருக்கும்.
 
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வோளண்மை செய்தல் பொருட்டு (குறள் -81)
என்ற குறளுக்கு இலக்கணமாக அனைத்து நலன்களையும் பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழ்வர் என்பது உறுதி.
ஐயனாரை வணங்குவோம்
அனைத்து நலன்களையும் பெறுவோம்

உதவிப் பதிவாளர்,அழகப்பா பல்கலைக்கழகம்
காரைக்குடி – 630 003தமிழ்நாடு, India.
Dr. K. Kalairajan (Cell: 94435 01912)
Assistant Registrar
Alagappa University
KARAIKUDI -630 003


 

சில தொடர் கருத்துக்கள்

ஐயனாரும் ஐயப்பனும் ஒருவரா இருவரா என்பது ஒருபுறம் இருக்க, தேவியர் பூர்ணிமை, புஷ்கலை என்போர் .ஆரியன்காவு கோவிலில் ஐயப்பன் புஷ்கலா தேவியுடன் இருக்கிறார். ஆண்டுதோறும் திருமண விழா நடைபெறுகிறது.

 

புஷ்கலா தேவி ஒரு சௌராஷ்டிர பெண்.  மதுரை பட்டுப்புடவை விற்பனையாளரின் மகள். அவர் ஆரியன்காவு காட்டு வழியே மகளுடன் போகும்போது ஐயனார் அவளை ஆட்கொண்டு மணந்தார்.
ஆண்டுதோறும் மதுரை சௌராஷ்டிரர்கள் சீர் வரிசைகளுடன் சென்று கேரள மக்கள், அரச குலத்தார் ஆகியோருடன் சேர்ந்து  திருமண வைபவம் நடத்துகின்றனர்.  மொழி, இன வேறுபாடுகளின்றி   . பெரு விழா நடக்கிறது.

கி. வெ. பதி. [email protected]

 


 

 

தமிழ்நாட்டின் தொல் பழம் தெய்வங்களில் ஐயனார் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளார். அனேகமாக ஒவ்வொரு ஊரிலும் ஐயனார் கோவில் உண்டு. ஐயனார் என்பது பொதுப் பெயராக இருக்க ஒவ்வொரு ஊர் ஐயனாருக்கும் தனிப் பெயரும் உண்டு. ஐயனாரைக் குல தெய்வமாகக் கொண்ட குடும்பங்கள் எந்த ஊரில் வாழ்ந்தாலும் அந்தந்த ஊர்க் கோவிலின் ஆண்டுத் திருவிழாவில் கலந்து கொள்வதும் தங்கள் குடும்பத்தில் நடைபெறும், குழந்தைக்கு முதல் முடி இறக்குதல், திருமணம் முதலிய முக்கிய நிகழ்ச்சிகளில் குல தெய்வத்துக்குச் சிறப்பு வழிபாடு செய்வதும் இன்றும் நடைபெறும் வழக்கமாகும். ஐயனார் அன்றியும் வீரன், மாரியம்மன், காளியம்மன் முதலான தெய்வங்களும் இவ்வாறே சிறப்பு வழிபாட்டுக்கு உரிய குல தெய்வமாக இருக்கின்றன. பெயர்
வேறுபட்டாலும் அடிப்படைத் தத்துவம் ஒன்று தான்.

 

       நாகரிகத் துவக்க காலத்தில், கூடி வாழ்தலின் தேவையை உணர்ந்து கொண்ட புதிதில், மக்கள் கூட்டம் கூட்டமாகப் பல்வேறு கிராமங்களில் வாழ்ந்தனர். கிராமம் தான் அவர்களுடைய நாடு. ஒரு கிராமத்து மக்கள் ஒரு குலத்தவராகத் தங்களைக் கருதிக் கொண்டனர்.      ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு தலைவன் இருந்தான். அவன் ஐயன் எனப்பட்டான். குலங்களுக்கிடையில் மோதல்கள்
நடைபெறும்போது அவன் தன் உதவியாளர்களுடன் ஊர் எல்லையில் நின்று ஆயுதம் ஏந்தி மக்களைக் காத்து வந்தான்.

 

       ஐயன் இறந்த பிறகு ஊருக்கு வெளியே அவனுக்குச் சமாதி அமைத்து மக்கள் வழிபட்டனர். அடுத்தடுத்து வந்த ஐயன்களுக்கும் அதே இடத்தில் சமாதி அமைக்கப்பட்டிருக்கலாம். ஆர் விகுதி பெற்று ஐயனார் என்று அழைக்கப்பட்ட இத்தகைய தொல் பழம் தெய்வக் கோவில்களில் யானை, குதிரை மற்றும் படைவீரர்களது சுடுமண் பொம்மைகள் அமைக்கப்பட்டு இருப்பது ஐயனின் ஊர்காவல் வேலையைச் சுட்டுகிறது.

 

       குலத்தைக் காக்கும் தெய்வமாக, இந்த ஐயனார்கள் ஒவ்வொரு ஊரிலும் வழிபடப்பட்டனர். பிற்காலத்தில் மக்கள் பிற கிராம மக்களுடன் வணிகத் தொடர்பும், கலாசாரத் தொடர்பும், திருமண உறவும் கொள்ளத் தொடங்கினர். நாடு என்ற சொல் இப்பொழுது பல கிராமங்களின் தொகுதியைக் குறிப்பதாக ஆயிற்று. அரசர்களின் வலிமை பெருகப் பெருக, அது மேலும் விரிவடைந்து சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்று ஆகியது. அந்த விரிவாக்கத்தின் தொடர்ச்சியாகத் தான் நாம் இன்று இந்தியத் துணைக் கண்டத்தை நாடு என்று அழைக்கிறோம். ஆயினும் இன்றும் குல தெய்வம் என்ற கருத்துரு மறையவில்லை.

 

[email protected] விக்ரமன்

 


 

[email protected]

திரு.ஓம் சுப்ரமணியம்
 

Sanatana Dharma: தடி கொண்ட ஐயனார்.
உவெசாமிநாதய்யர் எழுதியுள்ள ‘நல்லுரைக் கோவை’யில் இந்தக் கட்டுரை காணப்படுகிறது.

 

புதுக்கோட்டையில் மார்த்தாண்ட பைரவபுரம் என்ற பெரிய தெரு ஒன்று இருக்கிறது. அது சேஷையா சாஸ்திரிகளால்  உண்டாக்கப்பட்டது. (சேஷையா சாஸ்திரிகள் பற்றிய இழை அகத்தியத்தில் இருக்கின்றது. கொஞ்சம் தேடிப் பார்த்தால்  அம்புடும். சேஷையா சாஸ்திரிகள் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் திவானாக இருந்தவர்.)  அங்கே, முன்பு ஓர் ஆலமரமும் அதன்கீழே ஐயனார்
கோயிலொன்றும் இருந்தன. அவ்வையனாருடைய பெயர் ‘தடிகொண்ட ஐயனார்’ என்பது. மார்த்தாண்ட பைரவபுரத்தை உண்டாக்குவதற்கு முன் அங்கே சாலையை அமைக்கவேண்டியிருந்தது.
சாலைக்கு முற்கூறிய ஆலமரமும் கோயிலும் தடையாக இருந்தன. ஆலமரத்தை வெட்டிவிட்டு, தடிகொண்ட ஐயனாரை வேறிடத்திற்குக் கொண்டுசென்று பிரதிஷ்டை செய்துவிட்டால் தாம் உத்தேசித்த காரியம் நன்றாக நிறைவேறுமென்று சாஸ்திரியார் எண்ணினார். உடனே வேறிடத்தில் அழகிய கோயிலொன்றைக் கட்டுவித்தார். ஐயனாரை அங்கே எழுந்தருளச் செய்விப்பதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்தார். சிலர் அங்ஙனம் செய்தல் தகாதென்று தடுத்தனர்.

சாஸ்திரியார், "நான் நல்ல காரியத்தை உத்தேசித்துத்தான் இதைச் செய்கிறேன். ஐயனாரிடத்தில் மற்றவர்களுக்கு இருக்கும் பக்திக்கு என்பக்தி சிறிதேனும் குறைந்ததல்ல. என்னுடைய
முயற்சியை ஐயனார் அங்கீகரித்து அருள்வார் என்ற உறுதி எனக்குண்டு", என்று அவர்களைப் பார்த்துக்கூறினார். பிறகு ஐயனாருக்கு ஒரு விண்ணப்பம் எழுதி அவர் முன்பு வைக்கச்செய்து
நமஸ்காரம் செய்தார். அதன் சாரம் வருமாறு:

‘கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகிய ஸ்ரீஐயனாருடைய பாதாரவிந்தங்களில் அடியேன் சேஷையா சாஸ்திரிகள் பலகோடி நமஸ்காரங்கள் செய்து சமர்ப்பிக்கும் விண்ணப்பம். நகரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு எழுந்தருளியிருக்கும் தேவரீர் இந்த நகரத்தைப் பாதுகாக்கும் கடமையை வகிக்கும்
அடியேன், தேவரீருடைய ஆக்ஞையை எதிர்பார்த்துச் சில காரியங்கள் செய்துவருகிறேன். இந்த இடத்தில் ஒரு தெருவையும் சாலையையும் உண்டாக்க எண்ணியுள்ளேன். அந்தச் சாலை நேராகச் செல்வதற்கு இந்த ஆலமரம் தடையாக இருக்கிறது. தேவரீருக்குத் தனியாக ஓர் அழகிய கோயிலைக் கட்டச்செய்திருக்கிறேன். நெடுங்காலமாக இந்தப் பழைய கோயிலில் மழையால் நனைந்தும் வெயிலால் உலர்ந்தும் எழுந்தருளியிருக்கும் சிரமம் நீங்கி அக்கோயிலில் எழுந்தருள வேண்டும். இந்த ஆலமரத்தையும் வெட்டுவதையும் அங்கிகரித்து அருளி வழிவிடல் வேண்டும்.’
இந்த விண்ணப்பத்தை வைத்த பிறகு, நல்ல நாளொன்றில் ஐயனாரை அவ்விடம் விட்டு எழுந்தருளச் செய்து புதுக்கோயிலில் பிரதிஷ்டை செய்வித்து சிறப்பாகக் கும்பாபிஷேகமும் நடத்திப்
பூஜை முதலியன நன்கு நடைபெறச் செய்தார். அப்பால் ஆலமரத்தை வெட்டுவதற்குரிய முயற்சிகளைச் செய்யத் தொடங்கினார். அதை வெட்டினால் ஐயனாரின் கோபம் ஏற்படுமென்று பயந்து கூலியாள் யாரும் அதனை வெட்டத் துணியவில்லை. "ஐயனாருடைய அருளை எதிர்பார்த்துத்தான் நான் இதைச் செய்கிறேன். ஒருவரும் வெட்ட முன்வராவிட்டால் நானே முதலில்
வெட்ட ஆரம்பிக்கிறேன்", என்று சொல்லிவிட்டு, சாஸ்திரியார் தம் கையில் கோடரியை எடுத்துக்கொண்டார். அவர் மிகப்பருத்த தேகமுடையவர். அவர் வெட்டும் காட்சியைப் பார்ப்பதற்காக
அளவற்ற ஜனங்கள் வந்து கூனி நின்றனர். சாஸ்திரியார் "தடிகொண்ட ஐயனார் துணை", என்று
சொல்லிக்கொண்டு கோடரியை ஓங்கினார். ஐயனாரிடத்தில் பயங்கொண்ட பல ஜனங்களும்
சாஸ்திரியாருக்கு ஏதேனும் அபாயம் நேரிடுமென்றே எண்ணினார்கள். சிலர், அவர் ஓங்கிய கோடரி அவர் காலிலேயே விழுந்து துன்பத்தை விளைவிக்கும் என்று நினைத்தார்கள். வேறு சிலரோ ஆலமரத்திலிருந்து குபீரென்று இரத்தம் சாஸ்திரிகளின் முகத்தில் பீரிட்டு அடிக்கும்
என்று கருதினர். கூட்டத்தினர் கண்கள் அத்தனையும் சாஸ்திரியார் ஓங்கிய கோடரியின் பால் இருந்தன.

சொத்தென்று பச்சை ஆலமரத்தின்மீது கோடரி பாய்ந்தது. அபாயமான நிகழ்ச்சி ஒன்றும் நேரவில்லை. சாஸ்திரியாருக்குப் பின்னும் உற்சாகம் உண்டாயிற்றேயன்றிச் சிறிதும் சோர்வு
உண்டாகவில்லை.

‘பெரிய பக்திமானும் குணவானுமாகிய சாஸ்திரிகளிடத்தில் ஐயனாருக்குக் கோபம் வர நியாயம் இல்லை. சாஸ்திரிகள் தெய்வ சம்மதமான காரியத்தையே செய்கிறார்’, என்று தம்முள்ளே கூறிக்
கொண்டனர். ‘இவர் வெட்டிவிட்டார். ஐயனார் இவருக்கு உத்தரவு கொடுத்திருப்பதால்தான் கோடரி மரத்தில் பாய்ந்தது. இனிமேல் இந்த மரத்தை வெட்டத்துணியலாம்.’, என்று சிலர் கூறினர். உடனே
அருகிலிருந்த வேலையாட்கள் சிறிதும் அச்சமின்றி ஆலமரத்தை வெட்டிச் சாய்த்தனர்.
ஆலமரம் வெட்டப்பட்டது. அதனால் உத்தேசித்திருந்த சாலை ஒழுங்காக அமைந்தது. ஐயனார், புதுக் கோயிலில் பின்னும் சிறப்பாக வீற்றிருக்கிறார். அவர் முன்பு இருந்த இடத்தில் ஒரு பீடம் மட்டும் இருக்கிறது. அதையும் இப்பொழ்து நகர்வாசிகள் பயபக்தியோடு பூசித்து வருகிறார்கள்.
Thanks : treasurehouseofagathiyar

 


 

ஐயா ​வெங்கடாச்சலம் தோத்தாத்ரி அவர்களுக்கும் மற்றும் மின்தமிழ் அன்பர்கள் அனைவருக்கும்  வணக்கம்
 
ஐயா ​தோத்தாத்ரி அவர்களது தகவல்கள் மிகவும் பயனுள்ளவையாக உள்ளன,  என்னை ​மெய்சிலிரிக்க ​வைத்தன,
 
கடந்த மாதம் இதே அனுபவம் எங்களது குலதெய்வ வழிபாட்டிலும் நடந்துள்ளது,
 
எங்களது குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீ புலிக்கரை ஐயனார் ஆவார்,
 
எத்தனையோ தலைமுறையாக நாங்கள் வழிபட்டு வருகிறோம்,  ஐயானாருக்கு என ​கோயில் இல்லை,  கண்மாய்க்கரையில் உள்ள ஆலமரமே குடை​போன்று இருந்தது,
 
கண்மாய்க் கரையில் உள்ள மண் அரித்து குலசாமியின் தலைவரை மண் மூடியே இருக்கும், ​தேவியர்களின் கிரீடம் மட்டுமே ​வெளியில்  ​தெரியும்.   எங்களுக்கு விபரம் ​தெரிந்த நாள் முதல், எங்களது முன்னோர்களுக்கு அவர்களது முன்னோர்கள் விபரம் கூறியநாள் முதல் இவ்வாறே இருந்து வந்துள்ளது.
 
எங்களது முன்னோர்கள் எங்களிடம் நாங்கள் சிறுவதிலிருந்தே எவ்வளவோ முயற்சி ​செய்து பார்த்துவிட்டோம்,  ஐயனார் ​கோயில் கட்டுவதற்கு அனுமதி ​கொடுக்கவில்லை,  அதனால்தான் ​கோயில் கட்டவில்லை என்று கூறுவர்,
 
இப்போது நாங்களும் எத்தனையோ முறை முயன்றோம்.  ஆனால் அனுமதி கிடைக்கவில்லை,
 
கடந்த மாதம் எங்களது முதல்கரை அம்பலம்  என்பவர் வழிபாடு ​செய்து அழுதுபுலம்பி ​வேண்டிக் ​கேட்டுள்ளார்,  அப்போது சாமி ஆடிய ஒருவர், "உங்களது வகையறாக்கள் அனைவரும் ஒன்று கூடி வந்து வழிபடுங்கள்,  அப்போது கூறுகிறேன்" என்று திருவாக்கு அருளியுள்ளார்,  (ஒவ்வொரு வகையறாவினரும் அவரவரது தலைமையின் கீழ் தனித்தனியாகத்தான் வழிபாடு ​செய்து வந்தனர்,)  அதன்படி நாங்கள் ​மொத்தம் 14 வகையாறாக்கள் (173 குடும்பங்கள்) முதன்முறையாக ஒன்று கூடி கடந்த மாதம் 27-07-2010 ​வெள்ளிக்கிழமை அன்று ஒன்றுகூடி அதிகாலை 3-00 மணிக்கு வழிபாடு ​செய்து சாமியின் உத்தரவிற்காகக் காத்திருந்​தோம்,  மிகச்சரியாக சூரியனின் கதிர்கள் ​தெரியும் ​நேரத்தில், காத்துக் கிடந்தது ​போதும் என நினைத்து வழிபாட்டை நிறைவு ​செய்ய ​வேண்டி ​வேளார் (பூசாரி) தீபம் காட்டினார்,   அப்போது மிகச் சரியான உத்தரவு கிடைத்தது,
 
எனவே அனைவரும் ஒன்று கூடி இப்போது ​கோயிலைக் கட்டுவதற்கான முயற்சிகளை ​மேற்கொண்டோம்,   அப்போது சாமியின் அருகே உள்ள ஆல விழுதுகளை யாரும் ​வெட்ட முன்  வரவில்லை,   "முன்பு இது​போல் நாங்கள் அப்போது எங்களைக் கதம்ப வண்டுகள் தாக்கி ஊர் எல்லைவரை விரட்சிச் ​சென்றன,  ​மேலும் எங்களில் ஒருவருக்கு உயிர் பலியானது,  இது ​போன்ற தடங்கல்கள் முன்பு நிறையவே நடந்துள்ளன.  அதனால் எங்களால் வெட்டமுடியாது" என்று கூறிவிட்டனர்,  இதைக் ​கேட்ட எங்களது பங்காளிகளே முன்வந்து ​​கோயில் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்திற்குள் உள்ள மர விழுதுகளை வெட்டினர்,  பின்னர்தான் ​வேலையாட்கள் ​வெட்டி முடித்தனர்,
 
​  பூமிபூசை ​செய்வதற்காக JCP இயந்திரத்தைக் ​கொண்டு பூமியைத் ​தோண்டிய ​போது சுமார் 6அடிக்குக் கீழே மிகப்பழமையான ஆலயச் சுவர் இருந்தது,  மிகவும் பழமையான மண்பொம்மைகளும் ஓடுகளும் ​கிடைத்தன, (கல்வெட்டுக்கள் ஏதும் கிடைக்கவில்லை). அவற்றில் சிலவற்றைத் ​தேர்ந்தெடுத்து வழிபாட்டிற்காக ​வைத்துள்ளோம், 
 
நேற்று ஞாயிற்றக்கிழமை (22-08-2010) அன்று வாஸ்து நாளன்று பூமி பூசை ​செய்தோம்,
 
சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோயில் கட்டுமானப்பணிகள் முறைப்படி துவங்கியுள்ளன,
 
இச்​செய்தியைத் மின்தமிழ் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்,
 
அன்பன்
 
கி, காளைராசன்

Dr. K. Kalairajan (Cell: 94435 01912)

KARAIKUDI -630 003

You may also like

Leave a Comment